Sunday 5 August 2018

இங்கிலாந்தை சூறையாடுவாரா இந்தியாவின் ‘சைனாமேன்’?

இங்கிலாந்தை சூறையாடுவாரா இந்தியாவின் ‘சைனாமேன்’? குல்தீப் யாதவ் ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக்கு பயணித்து இருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் தகிடுதத்தம் போடும் இந்திய அணி, இந்த முறையும் பழைய பல்லவியோடு திரும்புமா? அல்லது புதிய சகாப்தம் படைக்குமா? என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது மாயாஜால சுழல் வித்தையின் மூலம் இங்கிலாந்தை பதம் பார்ப்பார் என்று சச்சின் தெண்டுல்கர், கங்குலி உள்ளிட்டோர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். இதனால் குல்தீப் யாதவ் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. 23 வயதான குல்தீப் யாதவ், உத்தரபிரதேசத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபரின் மகன் ஆவார். வாசிம் அக்ரம் போல் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுக்க வேண்டும் என்ற கனவில் வேகப்பந்து வீச்சாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், பயிற்சியாளர் கபில் பாண்டேவின் அறிவுறுத்தலின் பேரில் சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். இந்திய அணிக்காக இதுவரை 2 டெஸ்ட், 23 ஒரு நாள் போட்டி மற்றும் 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப், ஒரு ‘சைனாமேன்’ வகை பவுலர் ஆவார். பொதுவாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ‘லெக்ஸ்பின்’ வீசும் போது பந்து பேட்ஸ்மேனுக்கு லெக்சைடில் ‘பிட்ச்’ ஆகி ஆப்சைடுக்கு செல்லும். இதில் இருந்து மாறுபட்டு ஆப்சைடில் ‘பிட்ச்’ செய்து லெக்சைடுக்கு திரும்பும் வகையில் மணிக்கட்டை பயன்படுத்தி இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை வீசினால் அதுவே ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சு கலையாகும். இந்த முறையில் பவுலிங் செய்வது எளிதான காரியம் அல்ல. பந்தை பிடிக்கும் விதமே சிரமமாக இருக்கும். பந்தை வேகமாக சுழட்டி விடுவதற்கு விரல்களை காட்டிலும் கை மணிக்கட்டின் பங்களிப்பே அதிகமாக இருக்கும். 86 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணிக்குள் தடம்பதித்த முதல் ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் என்ற சிறப்பு குல்தீப் யாதவையே சேரும். மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் போது மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் பந்து சற்று அதிக சீற்றத்துடன் சுழன்று திரும்பும். இதை பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணித்து ஆடுவது கடினமாகும். மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகளும், நாட்டிங்காமில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளும் கபளகரம் செய்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார், குல்தீப். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தர்மசாலாவில் கடந்த ஆண்டு நடந்த தனது அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் பேட் செய்து கொண்டிருந்த போது, ‘அடுத்த இன்னிங்சில் பந்து வீச முடியாத அளவுக்கு அவரது விலா எலும்பை நொறுக்கு’ என்று ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், பவுலர் கம்மின்சிடம் சொன்னாராம். குல்தீப்பின் பந்து வீச்சு எந்த அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை குலைநடுங்க செய்கிறது என்று இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். தற்போதைய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் அவரது பந்து வீச்சை கண்டு மிரண்டு போய் நிற்கிறார்கள். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக அமையக்கூடும் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும். அவர் இந்திய துணைகண்டத்துக்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் இந்திய அணி இதுவரை 57 டெஸ்டுகளில் விளையாடி, வெறும் 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றியை சுவைத்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்ததில்லை. இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு பவுலர் ஒருவர் சக்கைபோடு போட்டார் என்றால் அது ஆஸ்திரேலிய சுழல் சக்ரவர்த்தி ஷேன் வார்னே தான். அங்கு 100 விக்கெட்டுகளுக்கு (22 டெஸ்டில் 129 விக்கெட்) மேல் அள்ளிய ஒரே வெளிநாட்டு பவுலராக வார்னே திகழ்கிறார். குல்தீப் யாதவின் பந்து வீச்சை வார்னே வெகுவாக புகழ்ந்து இருக்கிறார். இளம் புயலான குல்தீப் யாதவ் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து பொறுமையாக செயல்படும் போது உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜொலிக்க முடியும் என்று பாராட்டியிருக்கிறார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர்களை திணறடித்த பெருமை வார்னேவுக்கு உண்டு. அதே போல் குல்தீப் யாதவ், நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை சாய்த்து, இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தால், அது வெளிநாட்டு பயண வரலாற்றில் சாதனை அத்தியாயமாக பதிவாகும் என்பதில் ஐயமில்லை. -ஜெய்பான்

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts