Thursday, 16 August 2018

வேண்டவே வேண்டாம் சூதாட்டம்

வேண்டவே வேண்டாம் சூதாட்டம் பேராசிரியை க.சுபத்ரா சூதாட்டத்தைச் சட்டபூர்வம் ஆக்கலாம் என மத்திய அரசுக்குத் தேசிய சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரை செய்துள்ளது. இன்று சூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மறைமுகமாகச் சூதாட்டம் நடத்தி வரும் நிலையைப் பார்த்த பின்னரே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சட்ட அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டுவரும் சூதாட்டங்களுள் கிரிக்கெட் சூதாட்டம் முதன்மையானது. கோடிகோடியாகப் பணம் புரளும் இந்தச் சூதாட்டத்தால் அரசுக்கு ஏராளமான வரிப் பணம் இழப்பாகிறது. எனவே சட்டபூர்வம் ஆக்கிவிட்டால் அந்த வரித்தொகை அரசுக்குப் பெரிய வருவாய் ஈட்டித்தரும் என்பதே இந்தப் பரிந்துரையின் முதன்மையான நோக்கம் எனலாம். சூதாட்டம் சட்டபூர்வம் ஆக்கப்பட்டால் அதன்விளைவுகள் நம் சமூக அமைப்பிலும் வாழ்க்கையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்கக்கூடாது என அனைத்துத் தலைவர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கவேண்டும். லாட்டரிச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மென்மையான வடிவம் எனலாம். ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்னும் முழக்கத்தோடு 1968-ம் ஆண்டு தமிழக அரசால் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு சீட்டு விலை அப்போது ஒரு ரூபாய் ஆக இருந்தது. இது எத்தகைய விளைவை ஏற்படுத்தியது? பல பேர் லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதிலேயே தங்கள் வருமானத்தைத் தொலைத்துவிடும் அளவுக்கு லாட்டரி மோகம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பல்வேறு மாநில அரசுகளும் லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடங்கின. பல தனியார் நிறுவனங்களும் லாட்டரி என்னும் குலுக்கல் பரிசுத் திட்டத்தைத் தொடங்கின. இந்தியாவிலேயே மிக அதிகமாக லாட்டரிச் சீட்டு விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு ‘வரலாறு’ படைத்தது. பிற மாநில லாட்டரிகள் பெரும்பான்மையும் தமிழ்நாட்டிலேயே விற்றுத் தீர்ந்தநிலையிலும் அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டு அரசுக்கு உரிய வரியைச் செலுத்த மறுத்தன. லாட்டரி தொடர்பாக தமிழக அரசு விதித்திருந்த சட்ட திட்டங்களையும் புறக்கணித்தன. லாட்டரி விற்பனையால் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அடித்தளமக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கையில் கிடைக்கும் சொற்ப வருமானம் முழுமையும் லாட்டரிச் சீட்டு வாங்குவதற்கே செலவிட்டுப் பரிசு கிடைக்காதா என்று ஏங்கும் மனநிலை அதிகமானது. ஒரே நாளில் பணக்காரனாகிவிடும் தமிழ்த் திரைப்படக் கதாநாயகன் போலவே ஒரு பரிசுச்சீட்டுக் குலுக்கலில் பெருந்தொகை சம்பாதித்து உடனடியாகப் பணக்காரர் ஆகிவிடமாட்டோமா என்னும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் பலரிடம் இருந்தது. மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் உடனடி லாட்டரி, பம்பர் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி எனப் பல்வேறு நிறுவனங்கள் புதிய புதிய லாட்டரி முறைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தன. லாட்டரிச் சீட்டுகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்கும் சில நிறுவனங்கள் போலி லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து அவற்றின் விற்பனையால் அரசையும் மக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற ஆரம்பித்தன. இதனால் ஆடிப்போன அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் லாட்டரியைத் தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டியது. அன்றைய சூழலில் லாட்டரி விற்பனை, ஆண்டு தோறும் அரசுக்கு 14 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்துகொண்டு இருந்தது. 60 ஆயிரம் முகவர்கள் உள்பட 25 லட்சம் பேர் வேலையிழந்தனர். லட்சக்கணக்கான லாட்டரி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இத்தகைய பாதிப்புகளை எல்லாம் புறக்கணித்து லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடைசெய்து அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாய்மார்கள் உள்ளதில் பெரும் புகழை ஈட்டிக்கொண்டார். மீண்டும் இந்தக் கொடிய பழக்கம் மக்களையும் நாட்டையும் பாதிக்க வேண்டுமா? குதிரைப் பந்தய சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பல சூதாட்டங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி நடந்து வருவது உண்மைதான். அவற்றைக் கடும் நடவடிக்கைகள் மூலம் அரசு களைந்தெறிய வேண்டும். மாறாக அவற்றைச் சட்டபூர்வம் ஆக்கினால் முதலில் மாணவர்களும், இளைஞர்களும் இந்தத் தீயபழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் அல்லவா? விளைவு என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள். காசு வைத்துச் சீட்டு ஆடுவது குற்றம். ஆனால் காசு வைத்து ‘ரம்மி’ ஆடவாருங்கள் என இணையதளத்தில் அழைப்பு விடுக்கிறார்கள். ‘ஆன் லைன் சூதாட்டம்’ என்னும் மோசடியான சூதாட்டம் இணையதளத்தில் நடந்துவருகிறது. இவை விளம்பரம் பெற்று நாட்டைப் பாழாக்குவதற்குள் அரசு தலையிட்டு இவற்றை உடனே களைந்தெறிய வேண்டும். நம் நாட்டில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுப் பொருளாதாரத்தைச் சூறையாடிவிடும் என்பதில் ஐயமில்லை. இமயம் முதல் குமரி வரை பெருங்குற்றமாக, பாவமாகக் கருதப்பட்டுவரும் சூதாட்டத்துக்கு மத்திய அரசோ, மாநில அரசுகளோ சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துவிடக்கூடாது. அவ்வாறு அங்கீகாரம் கொடுத்துவிட்டால் சூதாட்டம், வரலாறு காணாப் பொருளாதாரச் சீரழிவையும் பண்பாட்டு வீழ்ச்சியையும் ஏற்படுத்தும். நம் இளைஞர் தலைமுறை பாழாய்ப்போய்விடும். இந்த ஆபத்தை உணர்ந்து சூதாட்டம் எந்த வகையிலும் நுழைந்துவிடாமல் பாதுகாப்பது நம் அரசுகளின் கடமையாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts