Thursday 16 August 2018

மோமோ: விபரீதமாகும் விளையாட்டு

மோமோ: விபரீதமாகும் விளையாட்டு சேவியர் “வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை.அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான். இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை. அர்ஜெண்டினாவில் ஒரு பன்னிரண்டு வயது சிறுமி உற்சாகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய அண்ணனும், பெற்றோரும் அவள் மீது மிகவும் செல்லமாக இருந்தார்கள். ஒரு நாள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென போனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றாள். சற்று நேரத்துக்குப் பின் அவளுடைய சகோதரன் பார்த்தபோது அவள் பக்கவாட்டில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தொங்க நினைப்பது தெரிந்தது. அலறியடித்த அண்ணன் ஓடிப் போய் அவளைக் காப்பாற்ற முனைந்தான். அதற்குள் அவள் தூக்கில் தொங்கிவிட்டாள். அலறல் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் ஓடிச்சென்று அவளை கீழே இறக்கினார்கள். ஆனால் பாவம் அவள் அதற்குள் இறந்துவிட்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. பன்னிரண்டு வயதான தங்களுடைய செல்ல மகளுக்கு தூக்கு போடுமளவுக்கு என்ன மன அழுத்தம் ? எனும் கேள்வி அவர்களை நிலை குலைய வைத்தது.அப்போது தான் அவர்களுடைய பார்வை அருகிலிருந்த அவளது போன் மீது போனது. அந்த போன் அங்கே நடக்கின்ற விஷயங்களையெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அதிகரிக்க காவல் நிலையத்துக்கு ஓடினார்கள். அவர்கள் வந்து போனை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது தான் ‘மோமோ‘ எனும் உயிர்க்கொல்லி விளையாட்டின் வீரியம் உலகிற்குப் புரிந்தது. “ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும். அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். “இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோ வில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது. மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது. இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது. சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ? குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள்.வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள்.குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள்.குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள். தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts