Thursday, 16 August 2018

மண் பாண்ட தொழிலுக்கு மறுமலர்ச்சி தருவோம்

மண் பாண்ட தொழிலுக்கு மறுமலர்ச்சி தருவோம் எழுத்தாளர் அருள்துரை மண் பானைகளே வாழ்க்கையின் முக்கியக் காரணியாகத் திகழ்ந்த காலம் நம்மில் பலரிடம் காணாமல் போயிற்று. மண் பானைகளைச் செய்யும் தொழிலாளர்கள் காணாமல் போய் கொண்டிருக்கின்றனர் என்னுடைய நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சிந்தலச்சேரி என்றக் கிராமத்திற்கு சென்றிருந்தேன். திருமண பரிசாக மண் பானையை வழங்கலாம் என்று முடிவு செய்தோம். அந்தப்பகுதி மக்களிடம் மண் பானை எங்கு கிடைக்கும் என்று விசாரித்தோம். குச்சனூர் கோவில் முன்பு கிடைக்கும் என்று கூறினார்கள். அங்கு சென்றோம். நீண்ட விசாரிப்புக்குப் பிறகு ஒரு வீட்டில் மண் பானை செய்யும் தொழிலாளியிடம் சென்று கேட்கச் சொன்னார்கள். அவரிடம் சென்று கேட்டபோது பானை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது பல உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. பானை செய்யும் தொழிலே முதன்மையானத் தொழிலாக இருந்தாலும் பானை விற்பனையாகும் எண்ணிக்கை மந்தமாகத்தான் இருக்கிறது. பொங்கல் மற்றும் கோவில் விழாக் காலங்களில் மட்டும் தங்களைத் தேடிவந்து வாங்கும் மக்களைத் தவிர மற்ற நாட்களில் நாங்கள் தான் மக்களைத் தேடி தெருத் தெருவாகச் சென்று பானைகளை விற்று வருகிறோம். அப்படி ஊருவிட்டு ஊரு செல்கையில் பல பானைகள் வழியிலே உடைந்து விடுகிறது. பலபேர் அடிமட்ட விலைக்கு கேட்கிறார்கள் என்று சொல்லி தன்னுடையக் கஷ்டத்தைப் பகிர்ந்து அங்கலாயித்துக்கொண்டார். நாங்கள் ஒரு சிறிய பானையை வாங்கிக் கொண்டு அந்தப் பானையின் விலையாக 150 ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டு வந்தோம். மண் பானையில் சமைப்பது தமிழகத்தில் நடந்து வந்த பாரம்பரிய வழக்கம். தற்போது புதிது புதிதாக உலோகப் பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. மண் பானையில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் சீராக மற்றும் மெதுவாகப் பரவுகிறது. இதுவே உணவைச் சரியாகச் சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்றத் தன்மையைப் பெறுகிறது. இதுவே உடல்நலனுக்கு உகந்தது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தும் தன்மையைக் கொண்டது. உப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது மண் பானைகள் தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. நாகரிகம் என்ற உலகத்தில் நுழைந்த நாம் குளிர்சாதனப் பெட்டித் தண்ணீருக்குப் பயந்தும் நாகரிக உலகத்தில் தாக்குபிடிக்க முடியாமலும் மண் பானை குடிநீர் உலகத்திற்குள் திரும்ப பயணிக்க ஆரம்பித்துள்ளோம். மண் பானைத் தண்ணீரை நாம் குடித்த போது நம்மை எந்த நோயும் தாக்கவில்லை. நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும்பல தாதுசத்துக்களையும்அள்ளி வழங்கியது அந்த அற்புத மண் பாத்திரங்கள் தான்.தற்போது மக்கள் நவீன வடிவத்தில் மண்பானைகளை பயன்படுத்தி வரும்நிலை உருவாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். இங்கு சீசனிற்கு தகுந்தாற்போல் தயாரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில் நடக்கும் கோவில் விழாவிற்கு இங்கு இருந்துதான் மண் பானைகள் செய்து அனுப்பப்படுகின்றன. மேலும் தற்போது வெளிநாடுகளில் பலர் மண் பாண்ட சமையலுக்குத் திரும்பியுள்ளதால் மண் பானைகள் மவுசு வெளிநாடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. தமிழ்நாட்டில் சில நூறுகளில் மிகவும் அரிதாக விற்கப்படும் மண் பானைகள் வெளிநாடுகளில் பல ஆயிரங்களில் விற்கப்படுவது மண் பானை செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கும் ஆறுதலாகத்தான் கருத வேண்டியிருக்கின்றது. மீன் குழம்பு வைக்கின்ற சட்டி அமெரிக்காவில் 15ஆயிரம் ரூபாய்க்கும், சிங்கப்பூரில் 4ஆயிரம் ரூபாய்க்கும், இத்தாலியில் 18ஆயிரத்து 645 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மண்பானைகள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பல்மற்றும் விமானம் மூலம் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றன. இதன் மூலம் மண் பாண்ட தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்‘ என்று நாம் நினைத்தாலும் ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் போது பண முதலாளிகளான கார்பரேட் கம்பெனிகள் இதனைக் கையில் எடுக்காமல் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முன்வந்தாலே போதும். முன்பு டெல்லி ரெயில் நிலையங்களில் உள்ள டீக்கடைகளில் சில்வர் டம்ளர்களுக்கு பதிலாக டம்ளர் வடிவிலான மண் குடுவைகளை பயன் படுத்தி வந்தனர்.ஒருவர் உபயோகித்த மண்குடுவையை மற்றவர் உபயோகப்படுத்த முடியாது. இதனால் தொற்று நோய் போன்றவை ஏற்படாது தீண்டாமை அறவே ஒழிக்கப்படும்.மறைந்துவிட்ட இந்த முறையை தொடர்ந்து அமல்படுத்தினால் மண்பாண்ட தொழிலுக்கு மறுமலர்ச்சி கிடைக்கும்.கோடிக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும். இதற்கு மத்திய,மாநில அரசுகள்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts