Saturday 7 July 2018

வேண்டாம் வரி உயர்வு

வேண்டாம் வரி உயர்வு By ஐவி. நாகராஜன் | தமிழகத்தில் அகில இந்திய சராசரியை விட அதிகமாக 48.45 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். 2026-இல் தில்லிக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. 2001முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள்தொகை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. குடிசைப் பகுதி மக்கள்தொகை 27.38 லட்சத்திலிருந்து 59 லட்சமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற மக்கள்தொகையில் 45 சதவீதம் குடிசையில் வசிக்கின்றனர். அதாவது 1.2 கோடி மக்கள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். நகர்ப்புற மக்கள்தொகையில் 45.58 சதவீதம் பேர் உடல் உழைப்பு தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில், 152 நகராட்சிகளிலும், சென்னையைத் தவிர 12 மாநகரட்சிகளிலும் காலிப்பணியிடங்கள் ஏராளமாக நிரப்பப்படாமல் உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறம் நிர்வாக அமைப்புகள் மந்தநிலை அடைந்துள்ளன. 40 நகராட்சிகளில் நகராட்சி ஆணையர் பணியிடங்களே நிரப்பப்படவில்லை. ஆணையர் பணிகளை நகராட்சி பொறியாளர்களே கவனிப்பதால் நிர்வாகத்தில் ஊழல் நிலவ வாய்ப்புள்ளது. பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை பொறியாளர்களே ஆய்வு செய்வது என்ற நிலை, நிர்வாகத்தில் மேலும் ஊழலுக்கு வழிவகை செய்கிறது. உதாரணமாக, பழனி நகராட்சியில் செய்யாத பணிகளுக்கு செய்யப்பட்டுளதாக கணக்கு காட்டிரூ.10 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக, விசாரணை நடைபெற்றது. சில அலுவலர்கள் இடைக்கால பணி நீக்கமும் செய்யப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக கருணை அடிப்படையில் நியமனம் வழங்குவது முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளில் பணிபுரிந்து பணியின்போது காலமான சுமார் 200 ஊழியர்களின் குடும்பங்கள் நிர்கதியான நிலையில் உள்ளன. இதனால் இடைத்தரகர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண வசூல் செய்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மறுசீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. 15 வருவாய் மாவட்டங்கள் தற்போது 32 மாவட்டங்களாக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத்தில் 7 மண்டலங்கள் (செங்கல்பட்டு, வேலூர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி) மூலம் நிர்வாகம் மேற்கொள்வதால் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 74-ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்திற்கு பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்றங்கள் பொறுப்பேற்று 4000-க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் மறுசீரமைப்பு செய்திட நிர்வாக இயக்குநரால் அரசுக்கு அனுப்பபட்ட கருத்துரு மீது கடந்த பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடைபெறாத நிலையில் உள்ளாட்சி நிர்வாகமும் சீர்குலைந்துள்ளது. முன்பு சென்னை, மதுரை, கோவை ஆகியவை மட்டுமே மாநகராட்சிகளாக இருந்து வந்தன. சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் 1996-ஆம் ஆண்டில் மாநகராட்சிகளாக மேம்படுத்தப்பட்டபோது அவற்றின் நிர்வாகத்தை கண்காணித்திட தனி இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டு, அது பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது மேற்படி 6 மாநராட்சிகளுடன் புதிதாக ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் என புதிதாக 6 மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்காணிக்க மாநகராட்சிகளுக்கென பிரத்யேக இயக்குநரகம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட நகரங்களிலும் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் பெரும் பகுதியினர் தினக்கூலி தொகுப்பூதியம் என்ற முறையிலேயே தொடர அனுமதிக்கப்பட்டு, கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் முழுநேரப் பணியினை மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு முறையான ஊதியம் மறுக்கப்படுவதால் நகரம் வளர்ச்சி பெற்று மாநகரமாக மாறும்போது ஏற்படும் வாழ்க்கைத் தர மாற்றத்திற்கேற்ப அவர்களால் வாழ இயலாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. நகரப்புறங்களின் பொது சுகாதாரத்தைப் பேணிட 2,000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மக்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் நலிவுற்றுள்ளதால் இப்பணிக்கு வருகின்றனர். இவர்களின் அரசு ஊழியர் கனவினை கலைத்திடும் வகையில் அவர்களின் பணிகள் புற ஆதார முறையில் (out sourcing) மேற்கொள்ளப்பட வேண்டும் எனஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. பணம் படைத்த தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் இக்கொள்கை உள்ளது. எனவே, புற ஆதார முறை நியமனங்களை கைவிட வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சொத்து வரியை உயர்த்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஏ,பி,சி என மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒரு சதுர அடிக்கு நிர்ணயித்துள்ள தொகை தற்போது செலுத்தி வரும் தொகையை விட பல மடங்கு அதிகமாகவுள்ளது. நகராட்சி நிர்வாகம் உத்தேசித்துள்ள வரி உயர்வு நகர்ப்புற மக்கள் மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதலாகும். வசதிகளையும், வளர்ச்சிகளையும் பெற்றுள்ள நகர்ப்புற பகுதி ஒரு வகை; அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத ஏழை மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களைக் கொண்ட குடிசைப் பகுதி மற்றொரு வகை. இந்தச் சூழலில் இந்த வரி உயர்வை முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் முற்றாக கைவிட வேண்டும். இதுவே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts