Saturday 7 July 2018

நெருக்கடிகளும் படிக்கட்டுகளாகும்

நெருக்கடிகளும் படிக்கட்டுகளாகும் By இரா. கதிரவன் | ஒரு தொழிற்சாலையில், தரம் குறித்த தொடர்ந்த அலட்சியம், நிர்வாகத்தில் மெத்தனம், நவீன தொழில் உற்பத்தி முறைகளின்மை ஆகியன தொடர்ந்தால், ஒரு சில ஆண்டுகளில் அத்தொழிற்சாலையையே மூட வேண்டிய நெருக்கடி உருவாகும். உதாரணமாக, அண்மையில் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றில் லாபம் தொடர்ந்து குறைந்து வந்து முடிவில் நஷ்டத்தை எட்டியது. தொழிலாளர்களோ தொழிற்சங்கத்தின் வலிமை காரணமாக நவீன உத்திகளையும், ஆள்குறைப்பு போன்றவற்றையும் ஏற்க மறுத்தனர். போட்டி மிகுந்த கள நிலவரத்தையும், தங்களின் நிறுவனத்துக்கு வரக்கூடிய அபாயங்களையும் புரிந்து கொள்ள மறுத்தனர். நிலவரம் மோசமடைந்து அபாய கட்டத்தை நெருங்கியது. நிர்வாகம் ஒரு திட்டதை முன் வைத்தது. சரிபாதியாக ஆள்குறைப்பு; நவீன உத்திகளோடு புது முயற்சி. இதனை ஏற்க மறுத்தால், இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலையை மூட வேண்டி வரும் என்பதைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆள் குறைப்புக்கும் நவீன உத்தி மாற்றத்திற்கும் தொழிலாளர்களை ஒப்பு கொள்ளச் செய்யும் பொறுப்பினை தொழிற்சங்கத்திடமே விட்டது. விளைவு? தொழிலாளிகளுக்கும் நிர்வாகத்துக்கும் பயனளிக்கும் வகையில் கட்டாய ஓய்வுத் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது. சில ஆண்டுகளில் , தொழிற்சாலை மிக நவீன உத்திகளைப் பயன்படுத்தி பெரும் முன்னேற்றம் அடைந்தது. தனியார் நிர்வகிக்கும் பெருநிறுவனங்கள் இத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வேறுவிதமான நெருக்கடிகளை சந்திக்கிறது. எதிர்பாராத அந்நிய நாட்டுத் தாக்குதல், ஆக்கிரமிப்பு, நட்பு நாடுகள் கைவிடும் சூழல், உள்நாட்டுக் கலகம், மக்களின் தொடர் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் ,ஜாதிமதக் கலவரங்கள், பயங்கரவாதம் என அடுக்கிக் கொண்டே போகலாம். நெருக்கடியான சூழல் ஏற்படாமல் தவிர்ப்பதே சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. இதற்கான முன்தயாரிப்புகள் தனியார் துறையில் உண்டு. தனியார் துறையில், "எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது' என்பது போன்ற தோற்றம் இருந்தால், "ஏதோ தவறு நிகழ வாய்ப்பிருக்கிறது' என்பது பொருள். அதற்கான முன்னெச்சரிக்கை உணர்வுடன் பிரச்னை உருக்கொள்ளும் முன்னரே அதற்கான தீர்வுகளுடன் தயாராக இருப்பர். அங்கு "தீர்வுகளுக்காக பிரச்னைகளைத் தேடுதல்' என்பது அவ்வப்போது நடக்கும். ஆனால், அரசாங்கம் அடிக்கடி இடம் மாற்றப்படும் அதிகாரிகளாலும், சில சமயங்களில் போதிய அனுபவம் அற்ற அரசியல்வாதிகளாலும் நடத்தப்படுவதால், அங்கு "தீர்வுகளுக்காக பிரச்னை களைத் தேடும்' போக்கு இல்லை. நெருக்கடியை சமாளிப்பது அல்லது நெருக்கடி மேலாண்மை என்பது சரிவராவிட்டால், அவசரகதியில் செயல்பட வேண்டிய நிலை தோன்றும். ஆனால், இந்நிலை தொடருமானால் பிரச்னைகளே நிர்வாகத்தை வழி நடத்தும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, பிரச்னையைத் தொடர்ந்து கண்காணித்து, நெருக்கடியைத் தவிர்ப்பது, அதனையும் மீறி நெருக்கடி உருவெடுப்பின் சாமர்த்தியமாகத் தீர்வுகாண்பது, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுவது ஆகியன மிக முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த விஷயத்தை பொறுத்த மட்டில், தனியார் துறைக்கு இருக்கும் வசதிகள், அரசினை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இல்லை. தனியார் துறையில் சரிவர செயல்படாதவர்களை மாற்றுவது சாத்தியமே. ஆனால், ஒரு அரசு, நெருக்கடியான நிலையை சரிவர கையாளவில்லை என்றால் தேர்ந்தெடுத்த மக்கள் விரும்பினாலும் அவ்வரசினை மாற்ற முடியாது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். தங்கள் தேர்வுக்கான பலனை மக்கள் அடைவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதது. பல நெருக்கடிகளுக்கு, மனம் திறந்த பேச்சு வார்த்தைகளே தீர்வாக அமையும். இதில் மிக முக்கிய அம்சம், சம்பந்தப்பட்டவர்களிடம் நெருக்கடிக்கான காரணங்களை எடுத்துக் கூறி அவர்கள் ஒத்துழைப்பினைப் பெறும்போது நெருக்கடிகள் தவிர்க்கப்படும். மேலும், நெருக்கடி நிலையினை கையாளும்போது, நிதானமான அணுகுமுறை அவசியம். போலி கெüரவம் சூழலை மேலும் மோசமாக்கும். நெருக்கடியான சூழலை தடுப்பது, சமாளிப்பது ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுவதும் முக்கியம். செய்தவை, செய்யத் தவறியவை, தவிர்க்க வேண்டியவை போன்றவற்றை ஆராய்ந்து மீண்டும் அதே போன்ற நெருக்கடி ஏற்படாதவாறு உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஒரு பெரும் தனியார் நிர்வாகமும் அரசாங்கமுமே நெருக்கடிகளுக்கு ஆளாகும்போது, தனி மனிதர்கள் நெருக்கடிகளில் சிக்குவதில் ஆச்சரியமில்லை. அவர்கள்தான் அதிக நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள். குடும்பத்தின் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம், சிலரின் எதிர்பாராத மரணம், பெரும் கடன் சுமை, தோல்வி தரும் ஏமாற்றம் போன்றவை நெருக்கடியாக உருவெடுக்கக் கூடும். நெருக்கடிகளை தனி மனிதன் வெற்றிகரமாக கடந்து வரும்போது, அதிலும், நெறிகள் சார்ந்தும், நேர்மை பிறழாமலும் கடந்து வரும்போது, அவனது மேன்மையான குணாதிசயம் வெளிப்படுவதோடு அது மேலும் பரிணமிக்கவும் செய்யும். எவ்வளவு கடுமையான நெருக்கடியாக இருப்பினும் அது ஏதோ, ஓர் இரவில் தோன்றி விடுவதல்ல. ஒரு பிரச்னை சிறிதாகத் தோன்றி, பல நிலைகளைக் கடந்துதான், நெருக்கடி என்னும் வடிவத்தைப் பெறுகிறது. எனினும் அஞ்ச வேண்டாம். பல சமயங்களில் பெரும் நெருக்கடிகள், அவற்றுக்கான தீர்வுகளை மட்டுமல்ல, சில புதிய வாய்ப்புக்களையும் உள்ளடக்கி இருக்கும். நாம் அதனைப் புரிந்து கொண்டால் நெருக்கடிகளே ட்படிக்கடுகளாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts