Saturday 7 July 2018

மனிதரின் உறவாகும் மரங்கள்

மனிதரின் உறவாகும் மரங்கள் By ஆர். எஸ்.நாராயணன் | நமது ஊரில் எனது உடன்பிறப்பே' என்று சொன்னால் அது ஒரு கட்சியைக் குறிக்கிறது; ரத்தத்தின் ரத்தமே' என்று கூறினால் அது மற்றொரு கட்சியைக் குறிக்கும். மக்களின் ஆதரவைத் திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தோடு இந்த தாரக மந்திரங்கள், முதலாவதாக, கட்சிப் பணியாற்றும் தொண்டர்களுக்காக கட்சிப் பத்திரிகைகளில் எழுத்து வடிவில் அழைக்கப்படும். பின்னர் கட்சியினர் நடத்துகின்ற பொதுக்கூட்டங்களில் மக்களைக் கவர்வதற்காக இம்மந்திரங்களைக் கட்சியின் தலைவர்கள் முழங்குவார்கள். ஆனால், சிக்கிம் மாநிலத்தில் இப்படி ரத்த உறவுகளை அழைப்பது மனிதர்களைக் குறிக்காது; மரங்களையே அர்த்தப்படுத்தும். காடுகளில் இழந்துவிட்ட மரங்களை ஈடு செய்யவும், இயற்கை விவசாயத்திற்கு ஆக்கம் தரும் வன வேளாண்மையை மேம்படுத்தவும், மரங்களுடன் மனிதன் கொண்டுள்ள பாரம்பரிய உறவுகளைத் தக்க வைக்கவும், மனிதனின் ரத்த உறவுகளாகவே மரங்களை நேசித்து வளர்க்கிறார்கள். மரங்களைத் தத்தெடுத்து வளர்க்கும் இப்பண்பாட்டை சட்ட வரையறைக்குள்ளேயே கொண்டு வந்துவிட்டார்கள் சிக்கிம் மக்கள். சிக்கிம் மாநிலத்தில் மைத்' என்ற பாரம்பரிய வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. மைத்' என்றால் ஒருவர் ஒரு மரத்தையே ரத்த உறவு அடிப்படையில் அதாவது தன்னுடைய உடன்பிறப்பாகவோ, தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, சகோதரியாகவோ ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து, அதனைப் போற்றி வளர்ப்பது. ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால், ஒரு மரத்தை தத்தெடுத்து அந்த மரத்தையே அக்குழந்தையின் தந்தை என்று ஏற்றுக்கொள்வார்கள். அது மட்டுமல்ல, அம்மரம் பட்டு விழும் வரை அதனைத் தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மதித்துக் காப்பாற்றும் மரபு சிக்கிம் மாநிலத்தில் உண்டு. இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியப் பண்பு மங்கிவிடாமல் அதனைப் பட்டை தீட்டி மிளிர வைக்கும் விதமாக சிக்கிம் முதல்வர் பவன்குமார் சமலிங், சிக்கிம் வனமரங்கள் பாதுகாப்பு விதிமுறைகள் - 2017' என்ற பெயரில் ஒரு புதுமையான சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். மனிதர்கள் மரங்களோடு கொண்டுள்ள ரத்த உறவை மூன்று விதமாக வகைப்படுத்தி, அவ்வுறவைக் காப்பாற்ற மக்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முதலாவது, மைத்' என்று அறிவித்து ஒரு ஆண் ஒரு மரத்தை தத்தெடுத்துக் கொண்டால், அம்மரம் அவரின் சகோதரனாகக் கருதப்படும். இரண்டாவது, மைத்தினி' என்று அறிவித்து ஒரு பெண் ஒரு மரத்தைத் தத்தெடுத்துக் கொண்டால் அம்மரம் அந்தப் பெண்ணின் சகோதரனாகக் கருதப்படும். மூன்றாவது, குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக, குடும்பத்தினர் ஒரு மரத்தைத் தத்தெடுப்பது. இதனை ஸ்மிருதி' என்று குறிப்பிடுவர். அதாவது நீத்தார் நினைவு. இப்படிப்பட்ட உறவுப்பெயர்கள் சூட்டி மரங்களைத் தத்தெடுக்க வேண்டும். அவரவர் தங்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் உள்ள மரங்களை மட்டுமே தத்தெடுக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. மற்றவர் நிலத்தில் வளரும் மரத்தையும் மேற்குறிப்பிட்ட முறைகளில் தத்தெடுக்கலாம். அவ்வாறு தத்தெடுக்கும்போது மற்றொருவர் நிலத்தில் உள்ள மரத்திற்கு நிகராக, மரமதிப்பை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்து நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதே போன்று, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களையும் தத்தெடுக்கத் தடையில்லை. வனத்துறையிடம் முறையான ஒப்புதல் பெற்றால் போதுமானது. சாதாரணமாக நமது மாநிலத்தில் அடிக்கடி மரம் நடு விழா' என்று விளம்பரப்படுத்தப் படுகிறது. சிலர் பிறந்தநாள் விழாவில் மரம் நடுவதாக புகைப்படத்திற்கு போஸ்' தருவதுண்டு. சிலர் மரக்கன்றுகள் பரிசளிப்பார்கள். ஆனால் மரம் நட்டார்களா? நட்ட கன்று வளர்ந்ததா என்ற சந்தேகங்கள் உள்ளன. ஆனால், சிக்கிமில் அப்படி அல்ல. மரம் தத்தெடுப்பவர்கள் எழுத்து மூலம் வனத்துறையில் பதிவு செய்யவேண்டும். வனப் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பத்தாள் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். எந்த மரத்தை யார் தத்தெடுத்தாலும் அவர் இறக்கும் வரை அதை வளர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பேற்பு உறுதிமொழி ஏற்கப்பட்ட பின்புதான் மர வளர்ப்பு அனுமதிக்கப்படுகிறது. மைத்', மைத்தனி', ஸ்மிருதி' ஆகிய மூன்று முறையில் மரங்களைத் தத்தெடுத்து வளர்ப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மரத்தை வெட்ட அனுமதி இல்லை. சரியான காரணம் இருக்குமானால் வனத்துறை அனுமதி வேண்டும். மீறி தாங்கள் தத்தெடுத்த மரத்தை வெட்டினால், அது வனத்துறை நிலத்தில் உள்ள மரமானால் அந்த மரத்தின் மதிப்புக்கு நிகராக நான்கு மடங்கு பணம் அபராதம் செலுத்த வேண்டும். தனியார் நிலம் என்றால் இரண்டு மடங்கு பணம் அபராதம். ஏற்கெனவே ஒரு மரத்தைத் தம் குடும்ப உறுப்பினராக, ஒரு சகோதரனாக, நீத்தார் நினைவாக ரத்த பாசத்துடன் தத்தெடுத்து வளர்க்கும் முறை சிக்கிமில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட அந்தஸ்தை பெற்றுவிடுவதால் தத்தெடுத்த மரத்தை யாரும் வெட்டமாட்டார்கள். இந்த சட்டம் மக்கள் வரவேற்பைப் பெற அடிக்கடி ஆங்காங்கே வன மகோத்சவம்' நடத்தி பிரசாரமும் நடக்கும் என்று சிக்கிம் மாநிலத் தலைமை வனக் காவலர் கூறியுள்ளார். மேலும் அவர் சிக்கிம் மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்கள் இந்தசிக்கிம் வன வளர்ப்பு விதிமுறைச் சட்ட' அடிப்படையில் ஒரு மரம் வளர்க்க முன்வந்தால், வனங்களில் அடர்த்தி உருவாகி புவிவெப்பமாதலுக்கு அரணாகவும், இமயத்து வெள்ளிப் பனிமலை உருகாமலும் காப்பாற்றலாம்' என்று கூறியுள்ளார். சிக்கிம் மாநில அரசின் மர வளர்ப்புக் கொள்கை இமயமலை சார்ந்த உத்தராஞ்சல், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுமானால் இமயமலைக் காடுகள் காப்பாற்றப்பட்டு நிலச்சரிவுகளிலிருந்தும் மீள முடியும். இப்படிப்பட்ட சுற்றுச் சூழலுடன் தொடர்புள்ள மர வளர்ப்பு என்ற வேள்வியை மாநில வனச் சட்டமாகவே இயற்றிய சிக்கிம் முதல்வர், மலைப்பிரதேசமாயுள்ள இம்மாநிலத்தில் மர வேளாண்மை உயிர்ச்சூழல் அமைப்பை உறுதியாக்குவதுடன், சரிவுள்ள நிலங்களில் மண்வளம் பாதுகாக்கப்பட்டு, நீர்வளமும் பெருகும். மேலும், காற்றில் கலந்துள்ள மாசு நீங்கவும் மரம் அவசியமே' என்கிறார். சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் முழுமைய பெற்றுள்ளது. சிக்கிமில் ரசாயன உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் தடை உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ள மாநிலம் சிக்கிம். இந்த மர வளர்ப்பு வனச்சட்டம் மூலம் உயிர்ச்சூழலை உயர்த்தி ஒரு மரம் சார்ந்த உயிரினங்களையும் வளர்த்து கால்நடைகள், விலங்குகள், மற்றும் பறவைகளின் சரணாலயங்களாகப் பல இடங்கள் உருவாகிப் பல்லுயிர்ப் பெருக்கத்தை உயர்த்துவதிலும் சிக்கிம் வழிகாட்டுகிறது. இன்று அதன் நிலப்பரப்பில் 43 சதவீதம் வனப்பகுதி உள்ள சிக்கிமில் வரும் ஆண்டுகளில் 50 சதவீதமாக வனப்பகுதி உயர இப்புதிய வனச் சட்டம் உதவும். சிக்கிமைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கற்க வேண்டும். மர வளர்ப்பு பற்றிய உணர்வு தமிழ்நாட்டில் மங்கி விடவில்லை. நடுவதற்கு இடமில்லாத நகர மாந்தர் உணர்வது போல் மண்ணுள்ள கிராம மக்கள் உணர்வதாகத் தெரியவில்லை. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்', வன விரிவாக்கத் திட்டம்' எல்லாம் அந்நிய நிதியுதவி, குறிப்பாக, போர்டு அறக்கட்டளை, டென்மார்க் ஸ்வாலோஸ் போன்ற வரவுகள் இருந்தபோது இருந்தன. இப்போதும் வன வளர்ப்புக்கு உலக வன வளர்ப்பு நிதியம், அழியும் தாவரங்களின் மீட்டுயிர்ப்புக்கான நிதி அமைப்புகள் உண்டு. வனப்பகுதிகளில் இழந்த மரங்களை ஈடு செய்யவும் திட்டங்கள் உண்டு. வன வாழ்வில் வாழ்வுரிமை, பழங்குடி மக்களின் பாதுகாப்பு போன்ற மனிதாபிமானப் பிரச்னைகளை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டு அரசியல் செய்யும் போராளிகள் மிகுந்துள்ளதைப் போல் ஏராளமாக மரங்களை நட்டு உலகம் முழுவதும் அடர்த்தியான பசுமைப் போர்வையை உருவாக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்ட சூழல் ஆர்வலர்கள் இல்லை. மர வளர்ப்பை மனித ரத்த உறவுடன் பிணைத்து ஒவ்வொரு மனிதனும் மரத்தைத் தம் உடன்பிறப்புகளாகவும், ரத்தத்தின் ரத்தமாகவும் எண்ணித் தத்தெடுத்து மரம் வளர்க்கும் திட்டத்தை மாநில வனத் துறையுடன் நல்லெண்ணமுள்ள தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயலாற்ற முன்வருமா? தமிழ்நாடு அரசு, மரங்களையே உடன் பிறப்புகளாகவோ, ரத்தத்தின் ரத்தமாகவோ அறிவித்து மர வளர்ப்பில் ஈடுபடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts