Saturday 7 July 2018

அறமற்ற உணவு வணிகம்!

அறமற்ற உணவு வணிகம்! By "கோதை' ஜோதிலட்சுமி | சமைக்கப்பட்ட உணவை மனிதன் என்றைக்கு உண்ணத் தொடங்கினான் எனும் கேள்விக்கு விடை இல்லை. உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த இயற்கை விளைபொருட்களின் அடிப்படையில் அந்தந்தப் பகுதி மக்களின் உணவுப் பழக்கம் அமைந்திருந்தது. நிலவுடைமைச் சமூகத்தில் மனிதன் ஒரே இடத்தில் வாழத் தலைப்பட்ட பிறகே வகை வகையான உணவுகளைச் சமைத்து உண்ணும் வழக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும். உயிர் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையில் இருந்து உணவு சுவை இன்பத்திற்கானதாக அதன் பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். தங்கள் மண்ணில் விளைந்த பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும், அதனை சமைக்கவும் பழகிக் கொண்ட பின்னர் அந்தந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும் இந்த உணவு மாறிவிடுகிறது. உணவு என்பது ஒரு சமூகத்தின் அல்லது இனக்குழுவின் செழிப்பின், வசதியின் அடையாளமாகவும் மாறி விட்டிருக்கிறது.அதனால் தான் நதிக்கரைகளில், அதாவது விவசாயம் செய்யத் தகுந்த இடங்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்துள்ளது. வரலாற்றுக் காலத்திற்கும் முன்பே மனிதன் சமைத்த உணவுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான். எவ்வளவு வகையான உணவுகள் இந்த மண்ணில் இருக்கின்றன என்று கணக்கிடுவது சாத்தியமற்றது. ஒவ்வொரு இனத்திற்கும், பிராந்தியத்திற்கும், நாட்டிற்கும் இதிலே மிகுந்த வேறுபாடு உண்டு. "உணவெனப்படுவது நிலத்தோடு நீரே' என்னும் தெளிவு கொண்ட தமிழ்ச் சமூகத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் நிலவியல் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் பல்வேறுபட்ட, ஆயிரக்கணக்கான வகையிலான தானியங்களை விளைவிக்கின்றன. அதன் அடிப்படையில் உணவின் வகைகளும் விரிகின்றன. வகைகள் பல்வகைப்பட்டதாக இருந்தாலும் நமக்கென ஒரு உணவு முறை வழக்கத்தில் உள்ளது. அறுசுவையோடு மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு ஒரு சமையல் முறை இங்கே இருந்துள்ளது. இந்த உணவு முறை நமக்கான அடையாளமாக நிலைத்து நிற்கிறது. உணவு என்பது அடிப்படை உயிர்த் தேவை என்று இருக்கும் பொழுது அது தொடர்பான பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் காலப்போக்கில் அச்சமூகத்தின் பண்பாடாக மாறிப் போவதில் வியப்பில்லை. நம்முடைய பண்பாட்டில் உணவைப் பகிர்ந்து உண்பதும், விருந்தினருக்கு உணவிட்டு மகிழ்வதும் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் இன்பம் தர வல்லன என்பது நம்பிக்கை. " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்னும் கலாசாரம் இந்த தேசத்தின் சிறப்பாக இருந்துள்ளது. இலக்கியங்களும் நம் உணவு முறை, வழக்கம் அதனால் ஏற்பட்ட பழக்கம், அதன் பின் அவை நமது பண்பு என்ற அடையாளமாகிப்போன விபரங்களைத் தாங்கி நிற்கின்றன. அதோடு மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலும் நமது பாட்டிமார்களும், தாய்மார்களும் உணவு தருவதைத் தம் அறம் எனக் கருதி வந்தமையை நாம் கண்டிருக்கிறோம். வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும் என்பதில் தொடங்கி மழைக் காலம், கோடை காலம் என காலத்திற்கு ஏற்ப உணவையே மருந்தாகத் தந்து நமது ஆரோக்கியம் பேணுவதிலும் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். விழாக் காலங்களில் கூடிச் சமைத்து உறவுகளோடு பகிர்ந்து உண்டமை நமது பால்ய கால நினைவுகளாய் இன்றைக்கும் இருக் கின்றன. இன்றைக்கு, அதி நவீன அறிவியல் யுகத்தில் உலகின் எந்த மூலையில் விளையும் பொருளையும் ஒருவரால் பெற முடிகிறது. தாராளமயம் என்னும் வலைக்குள் உருளும் பந்தாக உலகம் மாறிவிட்ட நிலையில் எந்தக் கண்டத்து உணவும் நமது தெருக்கோடி கடைகளிலும் கூட விற்பனைக்கு வந்துவிடுகின்றன. அதோடு குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்களும்,காய்களும் எல்லாக் காலத்திலும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வணிக முறையை வளர்ச்சி என்று பலரும் பெருமையாகச் சொல்லிக்கொள்கின்றனர். பூச்சிகள் தாக்காத, கெட்டுப்போகாத உணவு வகைகளும் பழரசம் போன்றவையும் பெட்டிகளில் அடைக்கப்பட்டு உடனடி உணவுகளாக நமது கைக்கு வந்து சேர்ந்து விட்டன. விதைகளின் தன்மை, அவை விளைவிக்கப்படும் முறை, பின் பதப்படுத்தும் நிலை, சமைக்கப்படும் இயந்திர முறைகள், அவற்றை பல மாதங்கள் கெடாமல் காக்கப் பயன்படுத்தும் பல்வேறு வேதிப் பொருட்களின் இயல்பு என நம் உணவு முறையானது முற்றிலும் ஓர் அன்னியத் தன்மை பெற்றுவிட்டது. நமது வீதியில் பால் விற்பவரைப் புறக்கணித்துவிட்டு பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட பல வேதிப்பொருட்கள் கொண்டு பதப்படுத்தப்பட்ட பாலின் மீது ஈர்ப்புக் கொள்கிறோம். ஒருபுறம் உணவுப்பொருட்கள் இப்படி உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து குவிகின்றன. மறுபுறம் பயணம் மேற்கொள்ளும் பாதைகள் எங்கும் உணவகங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. பாதையோரக் கடைகளில் திடீர் உணவுகள் தான் பயணத்தின் தேவை என்பது போல நிலைமை தோன்றிவிட்டது. மாநகர வீதிகள் உணவகங்களின் பெயர்பலகைகளால் நிறைந்து விட்டன. ஆண், பெண் இருவருமே பணி நிமித்தம் வெளியில் செல்லும் நிலை அதிகரித்துவிட்டதே இந்த உணவகங்களின், உடனடி உணவுகளின் பெருக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறலாம். சமைப்பதும் உணவு பரிமாறுவதும் இன்பமாகக் கருதிய பரம்பரையின் மக்கள் சமைப்பதை, பிறருக்கு உணவிடுவதை, பகிர்ந்து உண்பதையே சுமையாகக் கருதும் அளவுக்கு இந்த திடீர் வணிக உணவுகள் நம் மனத்தைக் கெடுத்துள்ளன. கொண்டாட்ட மனப்பான்மையை தவறாகப் புரிந்து கொண்டு உணவகங்கள் அதனைத் தருவதாகக் கருதி பிறந்த நாள், திருமண நாள் போன்ற இன்ன பிற விசேஷ நாட்களிலும் மக்கள் உணவகங்களில் கூடும் வழக்கம் தற்போது பெருகி விட்டது. தன் தகுதி அந்தஸ்து போன்றவற்றைக் காட்டும் விதமாகவும் உணவகங்களை மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டனர். நிலைமை இப்படி நகர, பாரம்பரிய உணவுகளைத் தரும் உணவகங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நமக்கு எந்த வகையிலும் ஒவ்வாத சர்வதேச உணவகங்களும் பெருமளவில் எல்லா மூலை முடுக்குகளிலும் முளைத்து நிற்கின்றன. சர்வதேச உணவகங்களின் உணவுக்கான மூலப்பொருட்கள், தயார் செய்யப்பட்ட நிலையிலான உணவுப்பொருட்கள் ஆகியவை அந்த நாடுகளிலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. இவை முற்றிலும் செயற்கையான உணவுகளே.எந்த வகையிலும் ஆரோக்கியமானவை அல்ல. அறமற்ற ஒரு உணவு வணிகத்தின் பிடியில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் சாதக பாதகங்களை தற்போது ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பெருகும் உணவகங்கள் போலவே மனிதருக்கு நோய்களும் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளன. நாம் உண்ணும் உணவு நமக்கானது தானா என்னும் கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி பார்வைக் குறைபாடுகள், மலட்டுத் தன்மை என உயிர்கொல்லி நோயான புற்றுநோய் வரை எல்லா நோய்களுக்கும் காரணமாக இன்றைய நமது உணவுப் பழக்கத்தைக் குறிப்பிடுகின்றனர். உள்ளூர் உணவகங்கள் தொடங்கி பன்னாட்டு உணவகங்கள் வரை வணிக நோக்கில் பல்வேறு விஷத் தன்மை கொண்ட பொருட்களைச் சமைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பல பன்னாட்டு உணவகங்கள் மீது உணவின் தரம் பற்றிய வழக்குகளும் உள்ளன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பே அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன், "எந்த ஒரு நிறுவனம் உணவு வணிகத்தைக் கட்டுப்படுத்துகிறதோ அது ஒட்டுமொத்த மனித குலத்தைக் கட்டுப்படுத்தும் " என்று கூறியதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. ஆக, எளிதாகக் கிடைக்கிறது, சுவை அலாதியாக தனித்துவம் கொண்டதாக இருக்கிறது என்னும் வியாபாரத் தந்திரங்களில் சிக்கிக் கொண்டு நாம் நமது பழைய உணவு முறைகளிலிருந்து சற்றே தடம் புரளத் துவங்கும் பொழுதே இத்தனை பின்விளைவுகளைச் சந்திக்கிறோம். இந்த நிலையில் நாம் விழிப்புணர்வு கொண்டு நமது பழைய உணவு முறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தைப் பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் நமக்கு உணர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள். உணவு சார் அரசியல் எத்தனை பெரிய சதியாக இருந்தாலும் அதனை நம் உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதனாலும், நமது மனநிலையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதாலும் மட்டுமே கூட பெருமளவு தவிர்த்து விட முடியும் என்னும் எண்ணத்தை இவர்கள் ஏற்படுத்த முயல்கின்றனர். விழித்துக் கொள்வதும், ஆரோக்கியம் காப்பதும், அடுத்த தலைமுறையைப் பேணுவதும் நமது கைகளில் தான் இருக்கிறது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts