Saturday 7 July 2018

மானுடம் தோற்க வேண்டாம்!

மானுடம் தோற்க வேண்டாம்! By சா. பன்னீர்செல்வம் | படித்தவன் பழங்கணக்குப் பார்த்தான் என்பர். சில நேரங்களில் பழைய விவரங்களும் தேவையாகின்றன. அந்த வகையில், முன்னாள் தலைமையமைச்சர், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை தொடர்பாக விவாதங்கள் மட்டுமின்றி, போராட்டங்கள், மோதல்கள் என்பனவும் தொடர்வதால் பழங்கணக்கையும் கொஞ்சம் பார்க்க வேண்டியதாகின்றது. இன்றைய நிகழ்வுகளைக் கவனிக்கின்ற இளைய தலைமுறையர்க்குப் பழங்கணக்கும் தெரிய வேண்டுமல்லவா? இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இருபத்தாறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடாச்சட்டம் எனப்படும் - பயங்கரவாதத் தடைச்சட்டப்படி, சென்னை, தடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தடா நீதிமன்ற விசாரணை என்பது இரகசிய விசாரணை. மூடிய அறையில் நடைபெறும். நீதிபதி அல்லது வழக்கறிஞரின் கேள்விகள், அவற்றுக்குக் குற்றவாளிகள் அல்லது சாட்சிகள் கூறும் பதில்கள் அனைத்தும் இரசியம். தடா நீதிமன்ற - இரகசிய விசாரணை முடிவில், உலகில் வேறெந்த கொலை வழக்கிலும் கேள்விப்படாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட இருபத்தாறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடும் முயற்சிகளுக்குப் பின்னர், மேல்முறையீடு இந்திய உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது உச்சநீதிமன்றம் மேற்கொண்ட ஒரு சுயமுரண்பாடும் இங்கே கவனத்திற்கொள்ள வேண்டிய பழங்கணக்காகிறது. முதலாவது, இராஜீவ் காந்தி படுகொலை என்பது, பழிக்குப்பழி வாங்குதல் என்னும் முறையில் நடைபெற்ற செயலன்றி, பயங்கரவாதச் செயலாகக் கொள்ளத்தக்கதல்லவாதலால், இந்த வழக்கு இந்தியக் குற்றவியல் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியதன்றி, தடாச்சட்டப்படி விசாரிக்கத் தக்கதல்ல' எனக் கூறியது. ஆனாலும் தடாச் சட்டப்படி பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், 1991-இல் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருபத்தாறு பேரில் பத்தொன்பது பேரை முற்றாக விடுதலை செய்து, மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. ஒரு வழக்கு, தவறான - பொருத்தமற்ற சட்டப்பிரிவின்படி விசாரிக்கப்பட்டிருக்கிறது என மேல்நீதிமன்றம் கருதுமானால், உரிய விதியின்படி மறு விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டுமென வழக்கு முழுவதையும் கீழ்நீதிமன்றத்திற்கு அனுப்புதலே நீதிமன்ற மரபாகும். அந்த மரபின்படி, வழக்கை முழுமையாக சென்னைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஏன் அவ்வாறு நடைபெறவில்லை ? அப்படி அனுப்பினால் வழக்கு விசாரணை இந்தியக் குற்றவியல் சட்டப்படி வெளிப்படையாக நடைபெறும். விசாரணையில் வெளிப்படும் அனைத்து விவரங்களும் பத்திரிகைகளிலும் வெளியாகும். அது இந்தியாவின் பாதுகாப்புக்குத் தீங்காகும் என, இந்திய அரசுத் தரப்பில் எழுப்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே வழக்கை குற்றவியல் சட்டப்படியான விசாரணைக்கு அனுப்பவில்லை. ஆக, இராஜீவ் காந்தி கொலையில் முழு உண்மையும் வெளியாதலை இந்திய அரசு விரும்பவில்லை என்பது மீண்டும் உறுதியாயிற்று. கொலை வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டப்படி நடத்துவதில் இந்திய அரசுத் தரப்புக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. வேறு ஆதாரம் ஏதுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை அதிகாரியிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. குற்றவாளி அளித்த வாக்குமூலம் என்பதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வாக்குமூலங்கள் எல்லாமும் உண்மையான வாக்குமூலம் ஆவதில்லை என்பதுதான் பட்டறிவான உலகியல் மெய்ப்பாடாகிறது. அதனால் அப்படியொரு விதி குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மரணதண்டனையாளரில் ஒருவர் பேரறிவாளன். அவருக்கு மரண தண்டனையளிப்பதற்குக் கொண்ட ஆதாரம் ஒன்றேயொன்றுதான். அதுதான் பேரறிவாளன் வாக்குமூலம். ஆனால், பேரறிவாளன் வாக்குமூலத்தைப் பதிவு செய்தபோது, குண்டு சாந்தன் என்பாருக்கு பேட்டரி' வாங்கிக் கொடுத்தபோது அது இராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக என்பது எனக்குத் தெரியாது எனப் பேரறிவாளன் கூறியதை தெரியும் எனக் கூறியதாகப் பதிவு செய்து விட்டேன் என அப்போது பேரறிவாளன் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி இப்போது வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆக பேரறிவாளனுக்கு எதிரான ஒரேயொரு ஆதாரமும் தவறானது என்றாகிறது. பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, இருபத்தாறு பேர்களுக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்காக நீதிபதி ஏற்றுக் கொண்ட ஆதாரங்கள் என்னென்ன என்பது இன்றளவும் சிதம்பர ரகசியம். இதுதான் மனித நீதிக்கு அநீதியாகிற தடா நியதி. ஆங்கிலேயரின் ரெளலத்' சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடிய இந்திய தேசியவாதிகள் அதே சட்டத்தையே தடா-பொடா என்னும் மாற்றுப் பெயர்களில் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமா? நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த அமர்வில் இடம் பெற்றிருந்த - உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி - மரண தண்டனையை உறுதி செய்தபோது, சட்டப்படி குற்றவாளிகள் சார்பாக கவனத்திற் கொள்ள வேண்டிய சில அம்சங்களை அப்போது நாங்கள் கவனத்திற் கொள்ளாமல் விட்டு விட்டோம்' என்று, இப்போது வெளிப்படையாகக் கூறுகிறார். யாரோ சொல்லவில்லை. வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரியும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் கூறுகிறார்கள். கொலை நடைபெற்று இருபது - முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, கொலையாளி பற்றிய துப்பு கிடைத்தால் அவரைக் கைது செய்து, வழக்குத் தொடுத்துத் தண்டிக்கலாம் என்கிறது குற்றவியல் சட்டம். அதே சட்டப்படி, தண்டனை வழங்கி பல ஆண்டுகளுக்குப் பின்னரும், குற்றவாளிகளுக்கு சாதகமான ஆதாரம் கிடைக்கும்போது அதன்படி அவர்க்கு விடுதலை வழங்க வேண்டாமா ? அதுதானே சரியான சட்ட நீதியாகும் ? தடா நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இன்னொரு பழங்கணக்கும் இருக்கிறது. உலகப் பொதுமறையாகிற திருக்குறளில், செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் முதல் குறள் பின்வருமாறு அமைகிறது. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மட்டும் தேர்ந்து செய்வஃதே முறை குற்றம் இழைத்தவர் - இழைக்கப்பட்டவர் என இரு திறத்தும், தனக்கு இனியவர் - இன்னாதவர், மேலோர் - கீழோர் என யார் பக்கமும் கண்ணோடாது, நடுவுநிலையுடன் நடைபெற்ற செயலை ஆராய்ந்து, அதற்குரிய தீர்வு யாதென்பதைத் தெளிவாக உணர்ந்து தீர்ப்பு வழங்குதல் செவ்விய நீதியாகும் என்பதே குறட்பாவின் பொருள். வள்ளுவப் பெருந்தகை இவ்வாறு கூறியிருந்தாலும், குற்றம் புரிந்தவன் எந்த வருணம், பாதிக்கப்பட்டவன் எந்த வருணம் என்னும் கண்ணோட்டத்தில் தீர்ப்பு வழங்குதலே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டின் நீதிமுறையாக நீடித்தது. மனுநீதி தவறாதவன் என்றுதான் மன்னர்கள் போற்றப்பட்டார்கள். நம்மையெல்லாம் அடக்கி, இந்தியா என்னும் பொது அமைப்பை ஏற்படுத்திய ஆங்கிலேயரே சாதி, மதம், மொழி, இனம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் கண்ணோட்டமின்றிக் குற்றத்திற்குத் தக தண்டனை வழங்கும்படியாக அனைவர்க்கும் பொதுவான இந்தியக் குற்றவியல் சட்டம் என்பதையும் உருவாக்கிக் கொடுத்தனர். ஆனால் தடா நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்புரையின் முதல் சில பக்கங்களில் கொலைக்கு ஆளான இராஜீவ் காந்தி பற்றிச் சொல்மாலையாகும் புகழ்மாலைகளைப் பலபடியாகச் சூட்டி அதன்பிறகே, குற்றம் சாட்டப்பட்ட இருபத்தாறு பேருக்கும் மரணதண்டனை' எனத் தீர்ப்பளிக்கிறார். அதாவது குற்றம் இழைக்கப்பட்டவர் சார்பான கண்ணோட்டத்தில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு வள்ளுவர் வகுத்த நெறிக்கும், இந்தியக் குற்றவியல் சட்டத்திற்கும், உலகம் முழுமையும் பின்பற்றும் அடிப்படைக் கோட்பாட்டிற்கும் முற்றிலும் முரணாகும். சரி, இந்தப் பழங்கணக்குகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைய விவகாரம் என்ன ? மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலும் தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், குற்றவாளி மரண பயத்திலேயே நீண்ட நாள்கள் கழித்துவிட்டதாகக் கருணை கோரலாம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தெளிவுரைகளில் ஒன்று. குறிப்பிட்ட யாரொருவருக்காகவும் வழங்கப்பட்ட கருத்துரையல்ல அது. அந்த அடிப்படையில்தான் மரண தண்டனை விதிக்கப்பட்டு பத்தாண்டுகள் - இருபதாண்டுகள் என மரண பயத்தில் உழல்பவர்களுக்கு ஆயுள் தண்டனையாகக் குறைப்பு செய்யும் நடைமுறையைப் பின்பற்றுகிறது உச்சநீதிமன்றம். இதுவும் குறிப்பிட்ட யாருக்காகவுமல்ல. அதே அணுகுமுறையில் இருபதாண்டுகளுக்கும் கூடுதல் என்னும் நெடிய கால அளவை முன்னிட்டு அத்தகையவர்களை விடுதலை செய்தல் குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்பதையும் ஒரு தெளிவுரையாகத்தான் கூறியிருக்கிறது. இதுவும் பலர்க்கும் பொதுவானதுதான். குறிப்பிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டால், இராஜீவ் காந்திக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகும் என்கிறார்கள். ஒரு கொலை வழக்கில் யாருமே தண்டிக்கப்படாதபோது, கொலையுண்டவருக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதாக வருத்தப்படுதல் நியாயமானது. ஆனால், இராஜீவ் காந்தியைக் கொலை செய்த தனு என்பவள் தானும் செத்து அழிந்துவிட்டாள். அவளை மனித வெடிகுண்டாகத் தயார்ப் படுத்திய குண்டு சாந்தனும் தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டு விட்டான். எனவே உயிருக்கு உயிர்' என்பது நேராகி விட்டது. அதற்கு மேல் ஏழு பேரையும் சாகடித்தால்தான் இராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையும் என அவரைக் கேவலப்படுத்த வேண்டாமே ? மானுடம் வென்றதம்மா' என்றார் கம்பர். நம்மால் மானுடம் தோற்க வேண்டாம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts