Wednesday, 4 July 2018

ஐஏஎஸ் பணிகளை நீர்த்துப்போகச் செய்யும் அபாயம்

இணைச் செயலாளர்களைக் குறுக்குவழியில் நியமிப்பதா? ஐஏஎஸ் பணிகளை நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உருவாகிறது கே.அசோக் வர்தன் ஷெட்டி இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, கடந்த ஜூன் 10-ம் தேதி வெளியிட்ட விளம்பரத்தில், பக்கவாட்டு முறையில் 10 இணைச் செயலாளர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியத் தேர்வாணையம் மூலம் வெளியிடப்படாமல் பணியாளர் - பயிற்சித் துறையால் இவ்விளம்பரம் வெளிவந்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் கூறு 320 (3) இதுபோன்ற விதிவிலக்குகளுக்கு இடமளிப்பதால், சட்ட ரீதியாக இத்தகைய நியமனம் சரியாக இருக்கலாம். ஆனால், இணைச் செயலாளர் என்கிற பதவியின் முக்கியத்துவத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது இது சரியில்லை. இத்தகைய முறையானது நம்பகத்தன்மையையும் இழந்துவிடுகிறது. ‘எக்ஸ்ட்ரா - யுபிஎஸ்சி பக்கவாட்டு நியமனங்கள்’ எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும், எல்லா நிலைகளிலும் ஏற்படும் என்றும் பொதுவான யூகம் நிலவிவருகிறது. இந்தியாவின் 160 ஆண்டு தொன்மை வாய்ந்த தகுதி அடிப்படையிலான நியமனம் குழிபறிக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. பக்கவாட்டு நியமனம் என்பது கொடிய சீரழிக்கும் முறையின் இன்னொரு பெயர் என்றும் அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல் நியமனம் ‘குறிப்பிட்ட திறனோ, ஆற்றலோ மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்றால்’ தேர்வர்களிடையே பணியமர்த்தத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது மத்தியத் தேர்வாணையத்தின் விதி. எனவே அரசு, ‘திறமையும் ஊக்கமும் மிகுந்த’ நிபுணர்களை மட்டுமே பக்கவாட்டு நியமனம் மூலம் நியமிப்பதில் தீவிரமாக இருந்தால், அத்துறை யைச் சார்ந்த நிபுணர்களால் பணியமர்த்தத் தேர்வையும், அதைத் தொடர்ந்த ஆளுமைத் தேர்வையும் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தின்படி, சிறுபட்டிய லிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவோடு நேரடிக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று மட்டுமே தெரிகிறது. துறைசார்ந்த நிபுணத்துவத்தையும், தேர்வர்களின் திறனையும் சில நிமிடங்களில் கணிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. மதிப்பீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ள முறை வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற முறை ஆகியவை குறித்து நம்பிக்கையூட்டுவதாக இல்லை. இந்நியமனத்தைப் பணியாளர் பயிற்சித் துறை மேற்கொள்ளும் என்பதால் தவறுகள் நிகழ்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஓர் அலுவலர் இணைச் செயலாளர் ஆக வேண்டுமென்றால், பல கட்டங்கள் உள்ளன. மத்தியத் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இணைச் செயலாளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்குக் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், பக்கவாட்டு நியமனதாரரோ 15 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் போதும், நேரடியான கலந்துரையாடலுக்குப் பின்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படலாம். இது அனைவருக்குமான சமமான களனாகத் தோன்றவில்லை. இது நிரந்தர குடிமைப் பணியை நீர்த்துப்போகச் செய்துவிடும். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி, அனுபவத் தகுதிகள் இணைச் செயலாளர் பதவிக்கு மிகவும் குறைவாகவும், பொதுப்படையாகவும் இருக்கின்றன. எனவே, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள், அதுவும் குறிப்பாக தனியார் துறையிலிருந்து வருவதற்கு வாய்ப்பு கள் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தால் பணியமர்த்தத் தேர்வு அவசியம் என்பது மத்தியத் தேர்வாணையத்தின் விதி. இதுபோன்ற தேர்வில்லாமல் சிறு பட்டியலின் மூலம் நேரடி கலந்தாய்வுக்கு மட்டும் உட்படுத்துவது எளிதுமல்ல, சரியுமல்ல. சிறுபட்டியல் தயாரிப்பதற்கான தெளிவான, வெளிப்படையான காரணிகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. யார் சிறுபட்டியல் தயாரிப்பார் என்பதும் புரியவில்லை. அவர்களுக்கு அதற்கான தகுதி இருக் கிறதா என்பதும் தெரியவில்லை. வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரம் தட்டையாக இருக்கிறது. அதில் ஒவ்வோர் இணைச் செயலாளர் பதவிக்கும் தேவைப்படும் குறிப்பிட்ட நிபுணத்துவம் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களை வழிநடத்த தொடர்புடைய துறைகளில் இணையதள முகவரிகளை மேற்கோள் காட்டுகிறது. ஆனால், விண்ணப்பம் பெறத் தொடங்கக் குறிக்கப்பட்டுள்ள தேதியிலிருந்து இந்நாள்வரை எந்தத் துறையும் தேவைப்படுகிற கள நிபுணத்துவத்தைத் தெரியப்படுத்தவில்லை. உதாரணமாக, கப்பல் துறைக்கு ‘துறைமுகப் பொறியியல்’ பிரிவில் போதிய நிபுணத்துவம் இல்லாமலிருந்தால், அதைப் பட்டியலிட்டு அதில் அனுபவம் வாய்ந்தவர்களுடைய விண்ணப்பங்களை மட்டுமே பெறுவதாகத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். தேர்வுக் குழு வெவ்வேறு கள நிபுணத்துவத்தைச் சரியாக ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், புதிய கள நிபுணத்துவத்தை அரசுக்குக் கொண்டுவருவதுதான் என்றால், அதைக் குறிப்பிடாததாலும், தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துவதாலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு ஏராளமான நீதிமன்ற வழக்குகளை யும் வரவேற்பதாக இருக்கிறது. விதிவிலக்கு விதியாகக் கூடாது இந்தியாவில் மூத்த அலுவலமைப்புக்குப் பக்கவாட்டு நியமனம் என்கிற சிந்தனை புதிதல்ல. வி.கிருஷ்ணமூர்த்தி, பி.வி.கபூர், ஆர்.வி.சாஹி போன்ற சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், மன்மோகன் சிங், ஐ.ஜி. படேல், விஜய் கேல்கர் போன்ற பிரபலமான பொருளா தார வல்லுநர்களும் இந்திய அரசாங்கத்தில் செயலாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள செயலாளர் அளவில் கள நிபுணத்துவத்தையும், தேர்வர்களின் சிறப்புத்தன்மையையும் மதிப்பீடு செய்வது எளிது. ஏனென்றால், அவர்கள் குறித்த ஆவணங்களே அத்தாட்சியாக அமையும். அவர்களை நேரடியாக நியமிக்கவோ, நேர்காணலுக்குப் பிறகு நியமிக்கவோ முடியும். ஆனால், இது இணைச் செயலாளர் பணிக்கோ, அதற்குக் கீழ்நிலை யிலுள்ள பணிகளுக்கோ ஏற்றதல்ல. செயலாளர் அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமையைப் பக்கவாட்டு நியமனதாரர்கள் வைத்திருப்பார்கள். இணைச் செயலாளர் அளவிலோ அவர்கள் தாக்கம் குறைவாக இருப்பதோடு வெறும் கோப்புகளை மேலே அனுப்பும் இன்னோர் அலுவலராகவோ, அல்லது அதனினும் மோசமான அலுவலராகவோ இருக்கக் கூடும். எனவே, பக்கவாட்டு நியமனம் என்பது எங்கு தேவையோ அங்கு செயலாளர் அளவில்தான் இருக்க வேண்டும். பக்கவாட்டு நியமனம் விதிவிலக்காக இருக்க வேண்டுமே தவிர, விதியாகிவிடக் கூடாது. அரசின் மந்தமான செயல்பாடு பரந்துபட்ட சிக்கல் நிறைந்த பிரச்சினை. அதைத் தீர்க்க அரசியல், நிர்வாகம், நீதித் துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தனியார் நிறுவனங்களிலிருந்து பக்கவாட்டு நியமனம் என்கிற எளிமையான தீர்வுகளால் அதைச் சரிசெய்துவிட முடியாது. - கே.அசோக் வர்தன் ஷெட்டி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts