Monday 18 June 2018

‘தன்னம்பிக்கை நாயகன்’ ஸ்டீபன் ஹாக்கிங்!

நம் காலத்தின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மிகப்பெரிய விஞ்ஞான மேதையாகக் கருதப்படுபவர். பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி, முற்போக்கு சிந்தனையாளர், தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாக கூறியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம்... 1942-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் பிறந்தார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவர் 1950 முதல் 1953 வரை செயின்ட் அல்போன்ஸ் பள்ளியிலும், உயர் கல்வியை ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களிலும் படித்தார். தனது 21-வது வயதில் நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினார். இதன்பிறகு ஹாக்கிங் வாழ்க்கை சக்கர நாற்காலியின் தயவில் சுழன்றாலும், இவருக்கான ஆய்வு உலகம் விரிந்துகொண்டே வந்தது. தன்னம்பிக்கையை கைவிடாத ஹாக்கிங் இயற்பியல், குவாண்டம், கருந்துளை ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கருந்துகள்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் இயற்பியல் துறை ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப் படுகிறது. காலத்தின் தொடக்கம் மற்றும் கோட்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல விஞ்ஞானி களையும் பிரமிக்க வைத்தது. நோய் பாதிக்கப்பட்டு தன் பேச்சுத்திறனையும் இழந்த ஹாக்கிங் கணினி மூலம் பேசத்தொடங்கினார். ஆம் அவர் பேச நினைப்பதை அந்த கணினி வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஹாக்கிங் பல அறிவியல் கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் நிகழ்த்தினார். ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். சர் ஐசக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்த பொறுப்பு வகித்தவர் இவரே. உலகின் பல நாடுகளில் உள்ள பல் கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் பல்வேறு கவுரவ பதவிகளையும் வகித்துள்ளார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடு களைப் பற்றியும், அண்டவியல் தொடர்பாகவும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது ‘காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற புகழ்பெற்ற அறிவியல் நூல் பலரையும் கவர்ந்தது. இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறை யிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். தனது பணிகளுக்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பதக்கம், உலக இயற்பியல் விருது என பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய குடியுரிமை விருதான சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தையும் 2009-ல் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆப்பிரிக்காவிலும் இவருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும், மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பல சாதனைகளை செய்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14-ந் தேதி தனது 76-வது வயதில் உயிர் இழந்தார்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts