Monday 18 June 2018

உயிலே உன் ஆயுள் என்ன?

உயிலே உன் ஆயுள் என்ன? ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் KARTHIKEYAN.AUDITOR@GMAIL.COM உயில் சாசனம் என்றாலே மரணப்படுக்கையில் உள்ள முதியவர் எழுத வேண்டிய ஒன்று என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது வாழ் நாளுக்குப் பிறகு தனது சொத்துகள் என்ன செய்யப்பட வேண்டும், யாருக்கு சேர வேண்டும் என்பதை குறிப்பிடும் நோக்கம்தான் உயில். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பூனையின் பெயரில் சொத்துகளை எழுதிய மூதாட்டி பற்றிய செய்திகளை படித்திருக்கிறோம். உயில் எழுதாமல் திடீரென்று மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரின் அனுபவங்கள் பல. சொத்துகள் மட்டுமல்லாமல், சில கூட்டுக்குடும்பங்களில், வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை, எல்.பி.ஜி கேஸ், தொலைபேசி, தண்ணீர் இணைப்பு போன்றவற்றில்கூட உயில் இல்லாமல் சிரமப்பட்டவர்களது அனுபவங்களைப் பார்த்திருக்கிறேன். யார் எழுதலாம் உயில் எழுதுவது மிகவும் எளிமையான ஒன்று. முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரண வெள்ளைத் தாளில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும்கூட எழுதலாம். வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. கையில் எழுதுவது நல்லது. உயிலில் சொத்துகள் பற்றிய விபரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில் முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் ? என்பதை விபரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும். உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களது கையெழுத்து இருக்க வேண்டும். வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும். பொதுவாக நான் எனது வாடிக்கையாளர்கள் 50 வயதைக் கடந்தவர்களுக்கு உயிலின் அவசியத்தையும் எழுத வேண்டியதின் முக்கியத்துவத்தையும் அவ்வபோது கூறிவருகிறேன். உயிலை மாற்ற முடியுமா ? எழுதிய உயிலை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். ஒன்றிற்கு மேற்பட்ட உயில்கள் இருக்குமாயின் எந்த உயில் கடைசியாக எழுதப்பட்டதோ அதுவே செல்லுபடியாகும். தேதி, நேரப்படி செல்லுபடியாகும். பதிவு அவசியமா ? உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயமில்லை. இரண்டு சாட்சிகளோடு சார்பதிவாளர் முன்னிலையில் உயிலை பதிவு செய்து விட்டால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும். மைனர் எழுதும் உயிலுக்கு மதிப்பு இல்லை. குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்குட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் இராணுவ வீரர்களுக்கு சலுகைகள் உட்பட்ட உயில் போன்ற பல வகையான உயில்கள் உள்ளன. இதில் சலுகை உயிலுக்கு சாட்சியாக ஒருவர் கையெழுத்து போட்டால் போதுமானது. ஆன்லைன் உயில் பல வெளிநாடுகளில் இணையதளம் (Internet) மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்து விட்டது. ஒரு வழக்கறிஞர் உயில் எழுத விரும்புகிறவரிடம் இணையதளம் மூலம் கலந்துரையாடல் செய்து அதன் பின்னர் 24 மணி நேரத்திற்குள் உயில் பதிவு செய்யப்பட்டு விடும். இந்தியாவில் இந்த வசதி இன்றும் இல்லை. கூடிய விரைவில் வரலாம். வாழும் உயில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை புரிதல் பொருட்டு அவசியம் என்பதால் பகிர்கிறேன். சமீபத்தில் என்னுடைய தந்தை மரணமடைந்தார். அவரது கடைசி காலத்தில் சில நாட்கள் அவரால் பேச முடியவில்லை. ஆனால், உணர்வும், நினைவும் வெகுவாக இருந்தது. வயோதிகம் தொடர்பான நினைவு குறைபாடு காரணமாக உணவை விழுங்க மறந்தார். அவருக்கான உணவை அவருடைய மூக்கின் வழியாக செலுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் எங்களுடைய குடும்பத்தாரிடையே நிலவியது. அவருடைய வாழ்க்கை காலத்தில் பொதுவாக மருத்துவமனைக்கே செல்ல வேண்டாம் என்று கூறி வந்தவர், தனது இறுதிக் காலத்தில் பேச முடியாத சில நாட்கள். அவரது எண்ணத்தை நிறைவேற்றுவதா ? அல்லது பசியோடு மரணிக்க விடுவதா ? என்ற கடினமான முடிவெடுக்கும் நிலை உருவாகியது. அப்பொழுதுதான் ‘வாழும் உயில்’ பற்றி நான் ஆழமாக படிக்க நேர்ந்தது. அதாவது, தனது வாழ் நாளிலேயே தன்னுடைய இறுதிக் காலத்தில் எந்தவிதமான மருத்துவ வசதிகளை கொடுப்பது, எத்தகைய மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சையினால் ஏற்படும் வலிகளில் இருந்து தன்னை மீட்டுக் கொள்வது என்பது குறித்து எழுதுவதுதான் இந்த ‘வாழும் உயில்’. அதாவது, தன்னால் பேச முடியாமலோ, சரியான முறையில் தான் நினைப்பதை மற்றவரிடம் தெரிவிக்க முடியாத நிலையில் இத்தகைய ‘வாழும் உயில்’ உபயோகமாக இருக்கும். வாழ்க்கை உயில் என்பது ஒரு முன்னோடியாக Advanced Directive வாழ்நாளுக்கான வழிகாட்டி. இது ஒரு பத்திரம். இவற்றில் தனது வாழ்க்கையின் கடைசி காலத்தில் எந்தவிதத்தில் மருத்துவ வசதி கொடுப்பது என்ற தனது விருப்பத்தை தெரிவிக்கும் உயில். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வாழுகின்ற போது அவர்கள் உயில் எழுதாவிட்டால், அவர்களுடைய மருத்துவச் சிகிச்சை குறித்து யார் கவனிப்பது என்பது குறிக்கப்படாவிட்டால், ஒரு நீதிபதி இது குறித்து ஒரு முடிவை அறிவிப்பார். உதாரணமாக செயற்கை சுவாசம், மூக்கு மூலம் உணவுக் குழாய், தொண்டைக்குழி மூலம் உணவுக் குழாய், வயிற்றின் மூலம் உணவுக்குழாய் போன்றவற்றில் எத்தகைய சிகிச்சை மூலம் உங்களை வாழ வைப்பது போன்ற விதமாக நீங்கள் உங்களுடைய வாழ்க்கை உயிலை எழுதி வைக்கலாம். தனக்கான மருத்துவ சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது மூத்த மகன் அல்லது மனைவிக்கு அளிக்கலாம். அவ்விதம் வாழும் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட நபர் எடுக்கும் முடிவுதான் செல்லுபடியாகும். உங்களுடைய சந்ததியினரோ அல்லது உங்களை பராமரிப்பவர்களோ அதனைப் பின்பற்ற வேண்டும். இதுதான் ‘வாழும் உயில்’. உறுப்பு தானம் பற்றிய விருப்பத்தையும் எழுதலாம். கடைசிகால நோயாளிகளுக்கு கண்ணியமான சாவு (Die with Dignity) என்கிற அடிப்படை உரிமையை வாழும் உயில் மூலம் எழுத உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. வாழும் உயிலிலேயே, தனது வாரிசு சான்றிதழை, அவரே சான்றளிக்கும் உரிமையை கொடுக்கும் சட்டம் தற்போது இல்லை. இந்த சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பின்னர் வரக்கூடிய நிறைய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எறும்பு போல சேர்த்த சொத்துகளை அடுத்த தலைமுறைக்கு சிரமமின்றி சென்றடைய சில எளிய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மரணம் என்கிற தவிர்க்க முடியாத நிகழ்வினால் வரும் சோகங்களை இத்தகைய உயில்கள் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். தவிர இருக்கும் போது தன் விருப்பத்திற்கு ஏற்ப பார்த்துக்கொள்ளும் வகையிலும் உயில் எழுதும் நடைமுறையும் வந்துவிட்டது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts