Monday, 18 June 2018

மாமனிதர் கக்கன்

மாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் என்பவருக்கும், பெரும்பி அம்மாள் என்பவருக்கும் 1909-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி மகனாக பிறந்தார் கக்கன். அவரது தந்தை கோவில் பூசாரியாகவும், அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் பல்வேறு சிரமங்களுக்கிடையே 8-ம் வகுப்பு வரையே கக்கன் படித்தார். தினமும் 10 கி.மீ. நடந்து பள்ளி சென்றார். தொடர்ந்து படிப்பதற்கு வசதி இல்லாத காரணத்தால் மதுரை தனவந்தராக கருதப்பட்ட எம்.எம்.ஆர்.சுப்பராமனை பூசாரி கக்கன் அணுகி தமது மகனின் மேல் படிப்பிற்கு உதவி செய்யுமாறு கோரினார். அவர் செய்த உதவியின் காரணமாக அனைத்து பாடங்களிலும் நல்ல முறையில் பயின்றும், பள்ளி இறுதி வகுப்பு தேர்வில் கக்கன் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. பள்ளி படிப்பை முடித்த கக்கன் பொதுவாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் சேர்ந்தார். சீர்திருத்த சிந்தனையும், முற்போக்கு கருத்துகளையும் கொண்டவராக கக்கன் விளங்கினார். தாம் ஒடுக்கப்பட்ட இந்துவாக இருந்தாலும் கிறிஸ்துவ பெண்ணை மணந்துக் கொள்ள சம்மதித்தார். இதை அந்த காலத்தில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தி மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு 1932-ல் சீராவயலில், பிற்காலத்தில் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவராக கருதப்பட்ட ப.ஜீவானந்தம் தலைமையில் கக்கனின் திருமணம் சீர்திருத்த திருமணமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. காந்தியடிகளின் உயிர்த் துடிப்பான அரிஜன முன்னேற்றத்தில் முதல் படியாக அரிஜன கோவில் நுழைவு இயக்கத்தை ராஜாஜி தொடங்கினார். அவர் சென்னை மாகாண பிரதமராக இருந்த போது அரிஜனங்கள் கோவில் நுழைவை சட்ட வடிவமாக்கினார். இதன்படி 1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் நாள் மதுரை காந்தி என்றழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யர் தமது தொண்டர்களுடன் அரிஜனங்களும் இந்துக்களே என்று உரக்க குரல் எழுப்பி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை தொடர்ந்தார். இதில் அவரோடு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன் பங்கேற்றது மிகுந்த வரவேற்பை பெற்றது. 1940-ல் மேலூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயலாளராக தேர்வு பெற்றார். தனிநபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்மீது ஆங்கில அரசு தேசத் துரோக குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தது. மீண்டும் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாத கடுங்காவல் தண்டனைக்குப் பிறகு 1944-ல் விடுதலையானார். சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் 1946-ல் காமராஜரின் ஆதரவோடு கக்கன் தேர்வு செய்யப்பட்டார். ஆன்றோர்களும், சான்றோர்களும், மெத்த படித்தவர்களும் நிறைந்த மேன்மை மிகுந்த சபையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன் உறுப்பினராக அமர்வதற்கு காங்கிரஸ் கட்சி வழிவகை செய்தது. 1957-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கக்கன் சமயநல்லூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்குப் பிறகு காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணி, அரிஜன நலம் ஆகிய துறைகளின் பொறுப்பை ஏற்று அமைச்சரானார். 1962 சட்டமன்றத் தேர்தலில் மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற கக்கனுக்கு மீண்டும் காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடைத்துறை, அரிஜன நலம் ஆகிய துறை சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டன. 1963-ல் காமராஜர் திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகியதால் எம்.பக்தவச்சலம் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் கக்கனுக்கு உள்துறை, நிதி, கல்வி, சிறை, தொழிலாளர் நலன், அறநிலையத்துறை, அரிஜன நலன் ஆகிய முதன்மையான துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கக்கனுக்குப் பிறகு எந்த தாழ்த்தப்பட்டவருக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்றுவரை வழங்கப்படவில்லை. பெருந்தலைவர் காமராஜருக்கும், கக்கனுக்கும் மிக நெருங்கிய நட்பு உண்டு. தமது கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியமான பொறுப்புகளை கக்கனுக்கு வழங்கியவர் காமராஜர். காமராஜரின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராக விளங்கியவர் கக்கன். பெருந்தலைவருக்கு அரசியலில் சோதனை ஏற்பட்ட போது அவரை விட்டு விலகாமல் உற்ற துணையாக இருந்தவர் கக்கன். ஒருமுறை ராயப்பேட்டை, அஜந்தா ஹோட்டல் பக்கத்துச் சந்தில், கிருஷ்ணாபுரம் தெருவில் இருந்த வாடகை வீட்டிற்கு திடீரென்று ஒருநாள் மாலை 7 மணியளவில், கக்கன்ஜியைப் பார்க்க காமராஜர் வந்தார். காமராஜர் வருவார் என்று கக்கன்ஜி கனவிலும் எண்ணியிருக்க மாட்டார். பெரியவரைப் பார்த்ததும் நிலைதடுமாறி விட்டார். ‘என்னங்கய்யா... நீங்க என் வீட்டுக்கு வருவதா?’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘ஏன் நான் வந்தது தப்பா?’ என்றார் அந்த ஏழைப் பங்காளர். ‘சரி... சரி... என்ன கக்கன்... வீடு ரொம்ப சின்னதா இருக்கா? உங்கள் குடும்பமோ பெருசு. இருந்தாலும் அட்ஜஸ்ட் செஞ்சிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்’ என்றார் காமராஜர். காமராஜரின் கைகளைப் பற்றிக் கொண்டு கக்கன்ஜி சொன்னார். ‘தும்பைப்பட்டி என்னும் குக்கிராமத்தில் பூசாரிக் கக்கனின் மகனாக பிறந்த என்னை, ஊருக்கு, நாட்டிற்கு தெரியவைத்து, ஸ்தாபனத் தலைவராக்கினீங்க. பத்தாண்டுகள் மந்திரியாகவும் இருக்கச் செய்தீங்க. முக்கியமான இலாகாக்களின் பொறுப்புகளையும் என்னிடம் நம்பிக் கொடுத்தீங்க. இதுவே எனக்குப் போதும்’ என்று நா தழுதழுக்கச் சொன்னார். காமராஜரும் நெகிழ்ந்து போனார். புறப்படுமுன், உரிமையுடன் கேட்டு வாங்கி காபி அருந்தினார் காமராஜர். வீட்டையும் ஒருமுறை வலம் வந்தார். அக்கம் பக்கத்துக்காரர்கள் எல்லாரும் வியப்புடன் தலைவரையும், தொண்டரையும் பார்த்து மனம் நெகிழ்ந்தனர். இன்றைய அரசியலில் தனிமனித ஒழுக்கம் நாளுக்கு நாள் சிதைந்து வருகிற காலக்கட்டத்தில் தியாகி கக்கன் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களை நினைவு கூர்வது அவசியமாகும். அரசுத் துறையில் எந்த உயர் பொறுப்பை ஏற்றாலும் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் தொண்டு செய்வதே தமது தவ வாழ்க்கை என்று வாழ்ந்தவர் மாமனிதர் கக்கன். இன்று (ஜூன் 18-ந்தேதி) கக்கன் பிறந்த தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts