Monday 18 June 2018

வடகொரியாவில் வசந்தம் மலருமா?

வடகொரியாவில் வசந்தம் மலருமா? மா.வெங்கட்டராமன், உதவிப் பேராசிரியர், பாதுகாப்பு மற்றும் போர்த்திறனியல் துறை, சென்னை பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வட கொரிய அதிபர்களுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு பெரும் விவாதத்தை உலக நாடுகளிடையே கிளப்பி இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிகழ்வுகளால் கொரியா வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிளவு பெற்றது. 1950 மற்றும் 1953-ம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற கொரியப் போர் அவர்களை நிரந்தரமாகப் பிரித்தது. மேலும் இப்பகுதிகளில் பனிப்போரையும் அறிமுகப்படுத்தி அப்போரில் தென் கொரியாவுக்கு அமெரிக்காவும், வட கொரியாவுக்கு சோவியத் யூனியனும் பின்னாளில் சீனாவும் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்ததுடன் இவர்களை கொம்பு சீவி கொரிய தீபகற்பத்தை அடிக்கடி பனிப்போர் நிகழும் களமாக மாற்றி வேடிக்கை பார்த்தன. சீனா வட கொரியாவுக்கு தேவையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை பெருமளவில் வழங்கியது. 1990-91-களில் நிகழ்ந்த பனிப்போர் முடிவு, சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவு ஆகியவை கொரியப் பகுதிகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. வட கொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு 2006-ல் தன் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இச்சோதனையின் காரணமாக கொரிய தீபகற்பமே அணு ஆயுதமயமாக்கல் பகுதியாக அறிவிக்கப்படும் சூழல் உருவானது. இதனால் கொரியா முழுவதும் குறிப்பாக தென் கொரியா மற்றும் அதன் கூட்டாளிகளாகக் கருதப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு விதமான அசாதாரண சூழலும், பதற்றமான நிலையும் ஏற்பட்டது. அன்று தொடங்கி வரிசையாக அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வந்தது வட கொரியா. குறிப்பாக, வட கொரியா ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடாகவும், அதிலும் குறி தவறாது தாக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைத் தயாரிப்பில் திறமை வாய்ந்த நாடாகவும் ஏற்றம் பெற்றது. மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீரர்களைக் கொண்ட ராணுவம், ஆயிரக்கணக்கான பீரங்கிகள், போர் விமானங்கள் எனத் தென் கொரியாவை ஒப்பிடும் போது வட கொரியாவின் ராணுவ பலம் சற்று வலுவானதாகவே உள்ளது. எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் அல்லது பிரச்சினையும் உலகின் எந்தப் பகுதியில் நடைபெற்றாலும் அது தொடர்புடையவர்களைப் பாதிப்பதுடன் அனைத்து நாடுகளுடனும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ள அமெரிக்காவையும் பாதிக்கும். இப்பிரச்சினைகள் சீனா எளிதில் தலையிடுவதற்கும் அதன் மூலம் தொலைவில் உள்ள கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் வழிவகுக்கின்றது. வட கொரியாவின் நிலையான ஆதரவாளராக சீனா தொடர்ந்து இருப்பதால் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் சூழலில் அனைத்து வழிகளிலும் தன் தார்மீக ஆதரவை வட கொரியாவிற்கு அளிப்பதற்கும் சீனா எப்போதும் தயாராக உள்ளது. எனவே பொருளாதார மற்றும் நிதி தொடர்பான தடைகள் ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளால் பல தருணங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் நடந்த வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வேளை வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லாமலிருந்தால் இது நிகழ வாய்ப்பில்லை. அணு ஆயுதங்களை அமெரிக்காவிற்கு ஈடாகப் பெற்று அதற்கு இணையான அல்லது அதை மிரட்டும் அணு ஆயுத நாடாக தகுதி பெற்றிருப்பது மட்டுமே பேச்சுவார்த்தைக்கான நிர்பந்தமாக இருக்கலாம். எது எப்படியோ இரு தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரங்கில் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, அணு ஆயுதங்கள் ஒழிப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர ஒப்புதலுடன் நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமயம் ஒழிப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இணை அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் குவாம் தீவில் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறினர். தற்போது அணு ஆயுத போர் அச்சம் அறவேயின்றி அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்ததாக சீனாவின் பங்களிப்பையும் மறந்து விடக்கூடாது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் பெருமளவில் பாதிக்கப்பட்ட சீனா, இந்தியப் பசிபிக் பகுதிகளில் வட கொரியா-அமெரிக்கா இடையிலான புதிய உறவுகளால் சீனாவிற்கு அமெரிக்கா பெரும் சவாலாக இருக்கும் என அஞ்சப்படுகின்றது. எனவே சீனாவின் எதிரியாகக் கருதப்படும் அமெரிக்காவுடன் வட கொரியா ஏற்படுத்தியுள்ள வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சீனாவிற்கு மகிழ்ச்சியைத் தராது. மறுபுறம் அமெரிக்காவையே மிரட்டும் அளவிற்கு பலமான அணு ஆயுத நாடாக சீனாவால் வார்த்தெடுக்கப்பட்ட வட கொரியா இனி அமெரிக்காவுடன் கைகோர்ப்பதால் அப்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் நிலை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது சர்வதேச அளவில் ராஜ தந்திர உறவுகளில் விரிசலையும் பின்னடைவையும் சீனாவிற்கு ஏற்படுத்தும். இரு கொரிய நாடுகளும் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் இரு நாடுகளின் பிரிவினை என்பது அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி நடந்த ஒரு வரலாற்றுப் பிழை. ஆனால் இப்போது அது மாறுவதற்கான சாத்தியம் உருவாகியிருக்கிறது. வட கொரிய மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் வலிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தென் கொரியாவின் பொருளாதார மேம்பாடுகள் வட கொரியாவிற்குப் பரவுவதும், ஒரே மொழி மற்றும் கலாசாரத்தின் கீழ் வாழும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயப்பதும் உறுதிப்படுகின்றது. இறுதியாக ஒருங்கிணைந்த அமைதியான கொரிய தீபகற்பம் உருவாகும் பட்சத்தில் அது இந்தியா மற்றும் ஜப்பானுடனான உறவுகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவும். டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள். இது நிலைக்குமா? அல்லது நிலைக்காதா? என்பதைக் காலம்தான் சொல்லும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts