Friday, 22 June 2018

வழிப்பறியை ஒழிப்போம்...!

வழிப்பறியை ஒழிப்போம்...! பழிச்செயலைத் தவிர்ப்போம்...! மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு உயிரே போனாலும் பரவாயில்லை.இன்று விடக்கூடாது என்ற எண்ணத்துடன் காவலர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அந்த நகை பறிப்பு திருடர்களை துரத்தி சென்று அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளினார். இருவரும் விழுந்தனர். அடி ஏதும் படாமல் தப்பி ஓடிவிட்டான் ஒருவன். மற்றொருவன் நொண்டிக்கொண்டே ஓடினான். காவலருக்கும் காலில் பலத்த காயம். இவரும் நொண்டி கொண்டே அவனை துரத்தினார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த திருடனை பிடித்து விசாரணை செய்யப்பட்டது. அவன் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவன். அங்கு சிறையில் இருந்தபோது சக தோழர்கள் அவனிடம், ‘நீ சென்னைக்கு சென்றால் ஒவ்வொரு முறையும் கொத்து கொத்தாக நகை பறிக்கலாம். லக்னோவில் 10 பெண்கள் அணிந்து வரும் நகைகளை சென்னையில் ஒரே பெண்ணிடம் பறித்துவிடலாம்’ என்று சொன்னதாகவும், அதன் காரணமாகவே அவன் பலமுறை சென்னை வந்து நகை பறிப்பு தொழில் செய்வதாகவும், அவன் ஆறுபேர் கொண்ட குழுவில் ஒருவன் என்றும் தெரியவந்தது. மேலும் இது போன்ற பல குழுக்கள் சென்னையில் தங்கி நகை பறிப்பதாகவும் சொன்னான். இது நடந்து ஆறு வருடங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில். இது போன்று நம் தமிழ் மண்ணை சேர்ந்த நகை பறிப்பு திருடர்கள் நாலாபுறங்களில் இருந்தும் நகர் புறம் சென்று அடையாளம் தெரியாமல் இருக்க தலை கவசம் அணிந்து துணிந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயம் நகை பறிக்கும் போது கொலை செய்து விடுவதும் உண்டு.இக்கூட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களும் உண்டு. கல்லூரி மாணவர்களும் உண்டு. அழகாக உடை அணிந்த அடித்தட்டு இளைஞர்களும் உண்டு. பதினெட்டு வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் உண்டு. நொடிப் பொழுதில் கை நிறைய லட்சங்கள். எந்த தொழிலிலும் இத்தனை எளிதில் ஈட்டமுடியாது. சாந்தமான உடல் மொழியுடன், சந்தேகமே இல்லாத வகையில், நேராகவே சென்று, தன் அருகில் யாரும் இல்லாத நிலையில் இருக்கும் பெண்ணிடம் நகை பறிக்கும் இக்கயவர்கள், தன் உடையின் நிறத்தை வைத்துக்கூட காவலர்கள் தம்மை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது உடை மாற்றிக்கொள்ளும் லாவகம் கொண்டவர்கள். துரத்தி வருவோரை கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் துணிச்சலும் உண்டு. வாகனம் இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு கட்டுக்கடங்கா வாகனப்பெருக்கம், குற்றத்தை நடத்திவிட்டு எளிதில் தப்புவதற்கு வாய்ப்பு உள்ள நகர அமைப்பு, போலியான பதிவு எண்களுடன் விரைந்து செல்லும் இரு சக்கர வாகனம், இவை அனைத்தும் இக்கயவர்களுக்கு சாதகமானவை. காவல்துறையில் பணியாற்றிய காலத்தில் தினமும் 20 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு சீருடை கழற்றவே இயலாத நிலை இருந்தது. அதனால் குற்றங்களை குறைக்க முடிந்தது. இருப்பினும் 20 பவுன் நகைகளை கோலமிடும்போது பறிகொடுத்த சென்னை கே.கே.நகர் ஒல்லி பெண்ணும், தன்னிடம் இருந்த ஒரே தங்க செயினை பறிக்கொடுத்த ராமாவரம் ஆசிரியை போன்று பல பாதிக்கப்பட்ட பெண்களின் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் என் மண்டை ஓட்டுக்குள் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நகை பறிப்பு சம்பவத்தின்போதும் தடுக்க இயலாமல் போனதால் நான் மன வேதனை அடைந்து பாதிக்கப்பட்டவர்களை காண்பதற்கே வெட்கப்பட்டுள்ளேன். ஆனால் நகை பறிகொடுத்த பெண்களில் 90 சதவீதம் பேர் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் நமது சென்னை போலீசார் 2017-ல் 90 சதவீத வழக்குகளை கண்டுபிடித்து உள்ளனர். பதிவான 615 வழக்குகளில் 814 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு மே மாதம் வரை பதிவான 175 நகை பறிப்பு வழக்குகளில் 149 பேர் கைது செய்யப்பட்டு 90 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக 90 சதவீத பெண்கள் தாங்கள் பறிக்கொடுத்த நகைகளை திரும்ப பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 2017-ல் பதிவான 2051 வழக்குகளில் 1447 வழக்குகளில் துப்புதுலங்கி இருக்கிறது. இது சுமார் 70 சதவீதம் ஆகும். அப்படி இருந்தும் ஏன் இவ்வாறு தொடர்ந்து இக்குற்றங்கள் அரங்கேறுகின்றன? குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை. சரியான சாட்சியங்கள் இல்லாமையால் பெரும்பாலான வழக்குகள் தண்டனையில் முடிவதில்லை. கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டால் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் வெளிவந்து இதே தொழிலை மீண்டும் செய்கின்றனர். பிடிபடாமல் வழக்கு விசாரணையை தாமதம் செய்கின்றனர். தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி. அதேபோல் தாமதப்படும் நீதி சமூகத்தில் குற்றங்களை கூட்டவும் செய்கிறது. ‘அவன் ஜாமீனில் வந்து அதையேதானே செய்கிறான். நாமும் செய்வோம். வழக்கு முடியறப்ப பார்த்துக்கலாம்’ என்று ஊக்கம் பெற்று சபலபுத்தியுள்ள இளைஞர்கள் இக்குற்றசெயலில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வழிப்பறி சம்பவம் நடைபெறாமல் தடுக்க என்ன செய்யலாம்? 1. இக்குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டனை அடைய வேண்டும். இந்திய தண்டனை சட்டம் 392-வது பிரிவின்படி இக்குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்சம் 10 வருடங்கள் தண்டனை உண்டு. 2. குறைந்தபட்சம் தண்டனை 5 ஆண்டுகள் என்றும், சாதாரணமாக 90 நாட்களுக்குள் ஜாமீனில் விடக்கூடாது என்றும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். 3. இயன்ற அளவு இவ்வழக்குகளில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்கும் வகையில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜாமீனில் விடுதலையானால் இக்குற்றவாளிகளை திரும்பவும் பிடிப்பது மிகவும் கடினம். 4. குற்ற விசாரணை முறை சட்டப்பிரிவு 110 ன் கீழ் நடவடிக்கை எடுத்து பழையகுற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.மேலும் மாநகரங்களில் மாநகர சட்டப்படி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மாநகருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.மீறினால் சிறையில் அடைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 5. அடகு வைக்கப்படும் நகைகள் ஏலம்போகும்போது அதைபற்றி விசாரணை செய்தால் குற்றவாளிகள் பிடிபட வாய்ப்புள்ளது. திருட்டு நகைகளை வாங்குவோர் பட்டியலை தயாரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. தெருவை பார்க்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வீடு கட்ட அனுமதி வழங்கும்போது கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 7. இரு சக்கர வாகன ஓட்டிகளின் முகத்தினை தெளிவாக படம் எடுக்கும் வகையில் கேமராக்களை இக்குற்றம் நடைபெற சாத்தியமான இடங்களில் பொருத்தி அவற்றை காவல் நிலையத்துடன் இணைத்து திருடர்களின் நடமாட்டத்தை கணினி வழியில் கண்டுபிடித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 8. மாநில நுண்ணறிவுப்பிரிவில் இவ்வழக்குகளை கண்டுபிடிப்பதற்கென ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தி அதை மாவட்ட பிரிவுகளோடு ஒருங்கிணைத்து நுண்ணறிவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு பரிமாறிக்கொள்ள வேண்டும். காவல்துறையில் நடைமுறையில் உள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த படவேண்டும். இவ்வழக்குகளில் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளிகள் ஜாமீனில் விடுதலை ஆகும் முன்பே வழக்கு விசாரணையை முடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொற்ப நகைகளை அணிவதால் உத்தரபிரதேச பெண்கள் இக்குற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை எண்ணும் உண்மையை பற்றி நாமும் சிந்திக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts