Saturday 23 June 2018

உங்களுக்குள் ஒரு தலைவர்!

எவர் ஒருவர் வரலாற்றை ஆழ்ந்து, உணர்ந்து படிக்கிறாரோ, அவரால்தான் வரலாற்றைப் படைக்கமுடியும். வரலாறு என்றால் பழைய கதை அல்ல, நாம் எந்தத் துறையில் சாதிக்க நினைக்கிேறாமோ அதன் பின்னணியை, முந்தைய கதையை தெரிந்துகொள்வது. அப்படி ஆர்வம் காட்டுபவர்களால்தான் சாதிக்க முடியும். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது என்றார் காரல் மார்க்ஸ். நாம் எதை விரும்புகிறோமோ அதில் உயர்ந்த இடத்தை அடைவதையே நமது குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நம் செயல்களே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது முதுமொழி. தலைவராக எண்ணுபவர்கள், அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்பவர்கள் ஒருகட்டத்தில் நிஜமாகவே தலைவராகிவிடுகின்றனர். பிறக்கும்போதே யாரும் தலைமைப் பண்புகளுடன் பிறப்பதில்லை. சிறப்பான பயிற்சி, கவனக்குவிப்பு, சரியான தருணங்களைப் பயன்படுத்திக்கொள்வது இவையே ஒரு தலைவனை உருவாக்குகின்றன. தலைமைத் தகுதிக்கு முதல் தேவை, தன்னம்பிக்கையும், அதனோடு கூடிய பணிவும். ஏனென்றால் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகமாகிவிட்டால் அது அகந்தையாகப் பார்க்கப்படும். ‘நான் சிறந்தவன்’ என நமக்கு நாமே சொல்லிக்கொள்வது தன்னம்பிக்கை. அதேநேரம், பணிவு இல்லாமல் ‘நான்தான் சிறந்தவன்’ எனப் பேசுவது அகந்தை. தலைவராவதற்கு இரண்டாவது தேவை, கடின உழைப்பு. நம்முடைய வசதியான இடத்திலிருந்து வெளியே வந்து நம்முடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினால் சாதிக்கலாம். நாம் அனைவரும் இன்று ஸ்மார்ட்போன் உபயோகிக்கிறோம், பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகிறோம். அதன் இயக்கமுறைமையை எப்படி அவ்வப்போது புதுப்பிக்கிறோமோ அதுபோல் நம்முடைய இயக்கமுறையை மேம்படுத்திக்கொண்டு, புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு முன்னேற வேண்டும். நம்முடைய வளர்ச்சியின் எதிரி, ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற எண்ணம்தான். ‘புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்’ என்றார் ஹிட்லர். அனுபவத்தையே பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பல கோணத்திலிருந்து ஆராயும் தன்மை வேண்டும். ஒரு கணித ஆசிரியர், மாணவன் ஒருவனிடம், ‘உன்னிடம் இரண்டு மாம்பழம் தருகிறேன். உன் நண்பனிடத்தில் இரண்டு மாம்பழம் தருகிறேன். மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?’ என்று கேட்க அந்தப் பையன், ‘ஐந்து’ என பதில் கூறினான். உடனே ஆசிரியர், ‘சரி.. உனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்குமல்லவா? அதனால் உன்னிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் உன் நண்பனிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் தருகிறேன். மொத்தம் எத்தனை?’ என்றபோது, ‘நான்கு’ என்றானாம். உடனே அந்த ஆசிரியர் மீண்டும் பழைய கணக்கை சொல்லி பதில் கேட்க, மீண்டும் ‘ஐந்து’ என்றான். உடனே ஆசிரியர் கோபமாக, ‘நீ இதற்கு தெளிவான பதில் அளிக்காவிட்டால் உன்னைத் தண்டிப்பேன்’ எனச் சொல்ல, அவனோ பொறுமையாக, ‘டீச்சர்... என்னிடம் ஏற்கனவே ஒரு மாம்பழம் இருக்கிறது, அதனால்தான் ஐந்து என்றேன்’ எனப் பதிலளிக்க வகுப்பறையே அமைதியாகிப் போனது. எனவே, தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள், கருத்துரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் எது சரி எனப் புரிந்துகொள்ள முயல வேண்டும். சாதாரணமாக நம் பார்வைக்குப் புலப்படாத சில விஷயங்கள், நாம் அவற்றைப் பொறுமையாக உற்றுநோக்கும்பொழுதும், கேட்டுத் தெரிந்துகொள்ளும்பொழுதும் விளங்கிவிடும். நாம் விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயலும்போது நம்மைவிட பெரியவர்கள், அறிவாளிகளிடம் நம்மை ஒப்படைத்து அவர்கள் சொல்வதை தாழ்மையாக உள்வாங்கவேண்டும். நமக்கு இணையாக இருப்பவர்களிடம் கேட்க நமது தன்முனைப்பு தடுக்கும். நம்மை ஏளனமாக நினைப்பார்களோ என்று எண்ணுவோம். ஆனால் அவர்களிடம் நாம் எளிமையாக கலந்துரையாடி, சந்தேகங்களை நிவர்த்திசெய்யலாம். நம்மைவிட கீழே இருப்பவர்களிடம் நாம் கூர்ந்து கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கும். தலைவன் என்பவருக்கும், தலைமைப் பண்பு என்பதற்கும் வேறுபாடு உள்ளது. தலைவர் என்பது சூழ்நிலையால் கூட உருவாகலாம். ஆனால் தலைமைப் பண்பு என்பது, ‘தான்’ என்ற சுயநலம் தாண்டி யோசிப்பது. யார் ஒருவருக்கு தொலைநோக்குப் பார்வை, புதிய பாதையில் பயணிக்கத் தயாரான மனம், வெற்றி, தோல்விகளை சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், தீர்க்கமான முடிவை எடுக்கும் துணிவு, நிர்வாகத்திறன் மற்றும் நேர்மை இருக்கிறதோ அவரே சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். உங்களில் ஒவ்வொருவருக்கும் தலைவராகும் வாய்ப்பு சமமாகவே உள்ளது. யார் அத்தகுதியை வளர்த்துக் கொள்கிறாரோ அவர் தலைவராகிறார். இரண்டாவதாக, எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் அவசியம். ஆராய்ந்து பார்த்தால், நல்ல பல தலைவர்களிடம் இந்த ஆற்றல் இருப்பதை அறியலாம். மூன்றாவதாக, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொண்டு நடைபோடும் தன்மை. 1973-ல் சதீஷ் தவான் தலைமையில் அப்துல் கலாம், ரோகிணி செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். சக விஞ்ஞானிகள் இரண்டாயிரம் பேருடன், அப்பணியை 1980-க்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்தார். அதன் விளைவாக ரோகிணி உருவாக்கப்பட்டது, கணினி மூலம் அது ஆய்வு செய்யப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. விண்ணிலும் செலுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செயலிழந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது. பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் அதற்கான விளக்கத்துக்காகக் காத்திருக்கின்றனர். உடனே சதீஷ் தவான் பத்திரிகையாளர்களை சந்தித்து, பொறுமையாக விளக்கினார். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் அதே அணி மீண்டும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது. உடனே சதீஷ் தவான், கலாமை பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொன்னாராம். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘வெற்றிக்கு அனைவரும் காரணம். தோல்விக்கு நானே பொறுப்பு’ என்றாராம் தவான். இப்படிப்பட்ட சிறந்த அணுகுமுறை, நல்ல தலைவர்களை உருவாக்கும். நான்காவது, முடிவெடுக்கும் திறன். குறுகிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். முடிவெடுக்கத் தாமதமானாலோ, அவசரத்தில் தவறான முடிவுகளை எடுத்தாலோ பாதகமாகலாம். ஐந்தாவது, நிர்வாகத்திறன். ஒரு குடும்பம் என்றாலும் சரி, நிறுவனம் என்றாலும் சரி, அரசியல் கட்சி என்றாலும் சரி, நிர்வாகத்திறன் மிக்கவர்களே செம்மையாக அமைப்பைச் செலுத்த முடியும், கீழே உள்ளவர்களின் மதிப்பையும் பெற முடியும். கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, நேர்மை. இந்த உலகில் ஒரு நேர்மையாளன் சந்தர்ப்பத்தால் தோற்கலாம். ஆனால் நேர்மை எப்போதும் தோற்காது. குறுக்கு வழியில் விரைந்து பெறும் வெற்றி சில காலமே நீடிக்கும். நேர்மையாகப் பெறும் வெற்றிதான் நிலைக்கும். இந்த உலகில் 1 சதவீத மனிதர்களே 99 சதவீத சாதனைகளைச் செய்கின்றனர். ஒரு செயலின் கடினத்தைக் கண்டு விலகுபவர்கள் முதல் படியிலே நின்றுவிடுகிறார்கள். குறைகளைக் கண்டறிந்து கூறி விலகுபவர்கள் இரண்டாம் படியுடன் நின்றுவிடுகிறார்கள். ஊக்கத்துடன் தொடங்கி முயன்று பின் முயற்சியைக் கைவிடுபவர்கள் மூன்றாம் படியில் நின்றுவிடுகிறார்கள். மன அழுத்தத்தைத் தாங்கி முன்னேறுபவர் நான்காம் படியில் நின்றுவிடுகிறார். யார் இந்த சோதனைகளை எல்லாம் கடந்து முன்னேறுகிறார்களோ அவர்களே தலைவர் பொறுப்பை அடைகிறார்கள். இன்று தலைமைப் பதவியில் உள்ள பலரும், தம் மீதும், தம்மைச் சுற்றியுள்ள பிறர் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்தார்கள், அதனால் உயர்ந்தார்கள். அவர்களால் முடியுமென்றால் உங்களாலும் முடியும். உங்களுக்குள் இருக்கும் தலைவரை வெளிக்கொணர முடியும்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts