Monday, 16 April 2018

அதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்!


தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணம் கொழிக்கும் தொழில்துறையாகவே உள்ளது. உங்களுடன் படித்த நண்பனோ, தெரிந்தவர்களோ ஐ.டி. துறையில் பணியாற்றி, அவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்டிருந்தால் வியந்திருப்பீர்கள். சாதாரணமாக 30 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை மாத சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இந்த சம்பளமெல்லாம், அவர்களது நிறுவனம் கிள்ளிக் கொடுக்கும் தொகைதான். நிஜத்தில் அந்த நிறுவனம் அந்தப் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இருந்து, ஊழியரின் சம்பளத்தைப்போல சில மடங்கு தொகையை ஊதியமாகப் பெற்றுவிடும் என்பதே உண்மை. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு சான்று.அமெரிக்காவின் ஐ.டி. துறையில் அதிக ஊதியம் தரப்படும் சில பணியிடங்ளும், அதற்கான படிப்புகளையும் அறிவோம்...

கிளவுட் ஆர்கிடெக்ட்
கிளவுட் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பை படித்தவர்களே இந்த பணிக்குச் செல்ல முடியும். உலகப் பணிகள் யாவும் டேட்டா மயமாகி கணினிக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. எனவே டேட்டா சேமிப்பை சுருக்கி, நுட்பமாக்கி ஒரு கட்டுமானம்போல நிர்வகிக்கும் இந்தப் பணிக்கு வாய்ப்பும், சம்பளமும் அதிகம். சராசரியாக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் ஈட்டுகிறார்கள் கிளவுட் ஆர்கிடெக்ட் பணியாளர்கள்.

டேட்டா மாடலர்
டேட்டா வடிவமைப்புடன், அவற்றுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமையின் அடிப்படையில் பகுப்பதும், மொழிமாற்றம் செய்வதும் தொடர்பான பணிகளைச் செய்கிறார்கள் இவர்கள். இப்படி தரம் பிரிப்பது வேலையை எளிமையாக முடிக்க உதவும் என்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கணிதம், கணினி அறிவியல், ஐ.டி. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்குச் செல்லலாம். இவர்களின் சம்பளமும் ஆண்டுக்கு சராசரி 70 லட்சம் ரூபாய்.

ஐ.டி. கன்சல்டன்ட்
ஊதிய அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கிய பணியானாலும், அதிகமான வாய்ப்புகளையும், அனைவரும் விரும்பும் பணியாக முன்னிலை பெறுகிறது ஐ.டி. கன்சல்டன்ட். கணினிகள் வேகமாக இயங்கத் தேவையான மாற்றங்களை ஆராய்வதும், உருவாக்குவதும், கணினியின் பயனை மலிவாக்கிப் பெருக்குவதும் இவர்களின் பணியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருந்தால் இந்த பணிக்கு செல்ல முடியும். திறமையை வெளிப்படுத்தி பணியைப் பெற்றுவிட்டால் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தப் பணி செய்யும் அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60 லட்சம் ரூபாய்.

வெப் டெவலப்பர்
இணையதளத்தை வடிவமைக்கும் இந்த பணி அதிகமான வாய்ப்புகளைக் கொண்டது. தங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் எளிமையும், கவர்ச்சியும், வேகமும் நிறைந்த இணைய பக்கத்தை உருவாக்குபவர்கள் ஐ.டி. துறையின் உச்சத்திற்கே செல்வது சுலபம். எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற இணைய கணினி மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற படிப்புகளைப் படித்து சரியான வேலைவாய்ப்பு அமையாத பலர், இந்த கணினி மொழிகளைக் கற்றுக் கொண்டு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றது உண்டு. இந்த பணிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 55 லட்சம் ரூபாய்.

மென்பொருள் என்ஜினீயர்
வீடியோ விளையாட்டு உருவாக்குவது, பேஸ்புக் போல புதுமையான ஒரு தளத்தை சொந்தமாக வடிவமைப்பது, நண்பனின் பணியை சுலபமாக முடிப்பதற்காக சிறு அப்ளிகேசன் உருவாக்கிக் கொடுப்பது எல்லாமே மென்பொருள் பணியாளரின் வேலை. இவர்களின் பணியின் பின்னணியில்தான் நமது செல்போன்கள், கணினிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட இந்தப் பணிக்கு சாப்ட்வேர் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் ரூபாய் சாம்பாதிக்கலாம்.

மொபைல் அப்ளிகேசன் டெவலப்பர்
ஸ்மார்ட்போன்களின் அபரிமித பெருக்கத்தால் அதற்கான அப்ளிகேசன் உருவாக்குபவர்களின் தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருந்த இடத்திலிருந்தே புதுமையான அப்ளிகேசன் உருவாக்குபவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திறமை இருந்தால் யாரும் இந்தப் பணியில் சம்பாதிக்க முடியும். மென்பொருள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படித்தவர்கள், கணினி மொழி கற்றவர்களுக்கு இந்தப் பணி கைவரப் பெறும். இவர்களும் சராசரியாக 50 லட்சத்திற்குமேல் சம்பாதிக்கிறார்கள்.

இதில் குறிப்பிட்டுள்ள ஊதியம், அமெரிக்காவில் இதே பணியைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்தியாவில் இந்த பணியைச் செய்பவர்கள் அனுபவத்திற்கேற்ப இந்த ஊதியத்தில் மூன்றில் 2 பங்கு வரை ஊதியம் பெறலாம்.ஐ.டி. துறையில் திடீர் வேலை இழப்பு சிலருக்கு அச்சத்தைத் தருகிறது. திறமையானவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதும், பதவி உயர்வு பெறுவதும் எல்லாத் துறைகளிலுமே இருப்பதுதான். எனவே திறமையை வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த சூழலிலும் அச்சப்படாமல் உயரஉயரச் செல்ல முடியும். நம்பிக்கையுடன் ஐ.டி. துறையை தேர்வு செய்து படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் வளம் சேர்க்கும்!

No comments:

Popular Posts