Tuesday 17 April 2018

டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதம்

டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதம் பேராசிரியை அமிர்த கவுரி, திருச்செந்தூர் உலகளாவிய தக வல்களை நொடிப் பொழுதில் விரல் நுனியில் அறியும் இணைய காலம் இது. டிஜிட்டல் நூலகம் என்ற கருத்து இன்றல்ல 1892-ம் ஆண்டே பால் அவுட்லெட் என்பவர் மனதில் உதயமான ஒன்றாகும். உக்கிரமான போர்களை தவிர்த்து மனிதன் நிம்மதியாகவும், நிதானமாகவும் வாழ்வதற்கு பொதுவான ஒரு தகவல் பரிமாற்றம் தேவை என்பதை அவர் உணர்ந்தார். இந்தக் கருத்தை முன்வைத்து தன்னுடைய ‘தகவல் பரிமாற்ற உலகின் பிறப்பு’ (பர்த் ஆப் இன்பர்மேஷன் ஏஜ்) என்ற நூலில் எப்படி பல கோடி புத்தகங்கள், படங்கள், ஒலி கோப்புகள் மற்றும் காணொலிகளையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக அனைவரும் தேடிப் பரிமாரிக்கொள்ளும் வகையில் அமைக்க முடியும் என்பதை தீர்க்க தரிசனமாக எழுதியுள்ளார். இந்தக் கருத்துதான் படிப்படியாக உருப்பெற்று தற்போது “இணைய வழியாக தகவல் பரிமாற்றம்” என உருவாகியுள்ளது. இது கற்பனைக் கெட்டாத ஒரு அதிசயம் தான். இந்த அமைப்பின் மூலம் நாம் நமது அறையிலிருந்து கொண்டு லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு நூலகத்தில் உள்ள தகவல்களை ஒரு சில வினாடிகளில் பெறலாம். ஒரு வழக்கமான நூலகத்தில் தேர்ந்தெடுத்து வாங்கிய புத்தகங்களையும் பிற நூலகத் தகவல்களையும் வகைப்படுத்தி, தொகுத்து, அடுக்கி, அதற்கு பட்டியல் தயாரித்து, பராமரித்து வைத்திருப்பார்கள். அங்கு வரும் வாசகர்கள் அந்நூல்களை எடுத்து படித்து பயனடைவார்கள். ஆனால் டிஜிட்டல் நூலகத்தில் மின்னணு சாதனங்கள் மற்றும் இணைய வழித்தகவல்கள் மூலம் நூலகம் உருவாக்கப்படுகிறது. உரைநடை, ஒலிகோப்புகள், காணொலி மற்றும் படங்கள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டு டிஜிட்டல் நூலகங்களாக மாற்றப்படுகின்றன. தினமும் 24 மணி நேரமும் வாசகர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம். நூலகத்தின் அனுமதி பெற்று எந்த ஊரிலிருந்தும் இந்த நூலகத்தை பயன்படுத்த முடியும். மேலும் தேவையான ஒரு மென் நூலை (இ-புக்) ஒரே நேரத்தில் பல நூலக பயனாளர்கள் படிக்க முடியும். இந்த வசதி வழக்கமான நூலகத்தில் நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. தாள்களால் ஆன நூல்களைப் போல் மென் நூல்கள் கிழிவதும், வீணாவதும் இல்லை. மேலும் முக்கியமான, அரிதான பழைய நூல்களையும் சிறிதும் பழுதின்றி மென் நூல்களாக மாற்ற முடியும். இதனால் மிக பழைய அரிய நூல்களையும் பாதுகாக்க முடியும். நூலக பயனாளர்களும் பழைய நூல்களை எளிதாக தேடிப்படிக்கவும் முடியும். புத்தகங்கள் எவ்வளவு பெரிய அளவில் அதிக பக்கங்களைக் கொண்டிருந்தாலும் மின்னணு சாதனங்கள் மூலம் குறைந்த செலவில் அவற்றை மென் நூல்களாக மாற்ற முடியும். டிஜிட்டல் நூலகத்தின் இன்னொரு சிறப்பு வசதி என்னவென்றால், ஒரு டிஜிட்டல் நூலகத்தில் இருக்கும் மென்நூல்களையும், பிற தகவல்களையும் மற்ற டிஜிட்டல் நூலகங்களும் மிகக் குறுகிய நேரத்தில் மிக எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது மிகத் தொலைவில் இருக்கும் டிஜிட்டல் நூலகங்கள் தங்களுக்குள் மிக எளிதாக தங்களிடம் இருக்கும் மென்நூல்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு டிஜிட்டல் நூலகத்தில் இருக்கும் மென் நூல்களையும், பிற தகவல்களையும் படங்களாகவும், காட்சி அமைப்புகளாகவும் நூலக பயன்பாட்டு மென்பொருள் மூலம் வடிவமைப்பு செய்துவிட்டால் அவைகளை வகுப்பறைகளில் கற்பித்தலுக்காகவும், கருத்தரங்குகளில் உரை நிகழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம். வழக்கமான நூலகங்களில் நூல்கள் பெருக பெருக நூலக இடவசதி அதிகமாக தேவைப்படலாம். ஆனால் மென் நூல்கள், கணினி கோப்புகளிலும், கோப்புரைகளிலும் சேமிக்கப்பட்டு கணினியின் கொள்திறன் அளவிற்கு நூல்களை சேகரிக்க முடிவதால் டிஜிட்டல் நூலகத்திற்கு அதிக இடம் தேவையில்லை. டிஜிட்டல் நூலகத்தில் இணைய வழியாகவும், இணையமில்லா வழியாகவும் தகவல் கோப்புகளை பெறமுடியும். பதிவிறக்கம் செய்யப்பட்ட மின் தகவல் கோப்புகளை வழக்கமான நூலக பட்டியலிடும் முறைப்படி தொகுத்து கணினியின் முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) வைத்துக் கொள்ள முடியும். இது டிஜிட்டல் நூலகத்தின் இன்னொரு சிறப்பான பயனாகும். மேலும் டிஜிட்டல் நூலக தகவல்களை மென் தகடுகள் மூலம் நூலக பயனாளர்களுக்கு பரிமாற்றம் செய்யலாம். நூலக பயனாளர்களின் சந்தேகங்களையும், கேள்விகளையும் இ-மெயில் மூலம் தீர்த்து வைக்கவும் முடியும். டிஜிட்டல் நூலகத்தில் மின் தகல்களை சேமித்தல், பட்டியலிடுதல், தகவல்களை பெறுதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு பல நூலக மென்பொருள்கள் (சாப்ட்வேர்) பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கிரின் ஸ்டோன் டிஜிட்டல் லைப்ரரி சாப்ட்வேர், அகாடமிக் ரிசர்ச் இன் நெதர்லாண்ட் போன்றவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல் நூலகம் என்பது இந்த இணைய காலத்துக்கு ஏற்ற விரைந்து தகவல் பரிமாற்றத்தைப் பெறக்கூடிய மிக அரிய ஒரு அமைப்பாகும். இன்னும் கூடிய விரைவில் இதன் விரிவாக்கமாக நம் செல்போன்களிலும் இந்த மின் தகவல் பரிமாற்ற வசதிகள் பெருகுவதற்கான வாயப்புகள் அதிகமாக உள்ளன. வழக்கமான நூலகங்களுக்கு சென்று நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் தற்காலத்தில் இணையதளம் மூலம் இயங்கும் டிஜிட்டல் நூலகப் பயன்பாடு நிச்சயம் அதிகரிக்கும். கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், வியாபாரம், விளையாட்டு, மென்கலைகள், பொறியியல், கலாசாரம் போன்ற அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

No comments:

Popular Posts