Saturday 17 February 2018

பறவைத் தாங்கிகள்

பறவைத் தாங்கிகள் | ப. ஜெகநாதன் | உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். இதுதான் 'ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு' (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுண்ட்) எனப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு, பிப். 16-ம் தேதி (நேற்று) தொடங்கி 19-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பை 'பேர்டு கவுண்ட் இந்தியா' அமைப்பு ஒருங்கிணைக்கிறது. வயல்வெளி, ஏரி, குளங்கள் என உங்கள் வீட்டைச் சுற்றி, நீங்கள் பணியாற்றும் இடத்தைச் சுற்றி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால், ஒவ்வோர் இடத்திலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பறவைகளைப் பார்க்க வேண்டும். பறவைகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டு, அவற்றை www.ebird.org வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://birdcount.in/event/gbbc2018/4/ எங்கள் தெருவில் ஒரு வீட்டில் டிவி ஆண்டெனா ஒன்று உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருக்கும். அதைப் பார்த்தவுடன் சிறு வயதில் டிவி பெட்டியில் தெளிவாக சேனலை வரவழைக்க நாங்கள் பட்ட பாடுதான் எனக்கு உடனே நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் எங்கேயாவது ஆண்டெனாவைப் பார்த்தால் அதில் ஏதாவது பறவை அமர்ந்திருக்கிறதா என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. சில வீடுகளில் துணிகளைக் காயவைக்க மாடியில் கம்புகள், தடிகளை வைத்து நடுவில் கயிற்றைக் கட்டியிருப்பார்கள். இது போன்ற மொட்டைக் கம்புகளில் ஒரு பறவைதான் அமர முடியும். அதில் இடம் பிடிப்பதற்குப் பறவைகளிடையே ஏற்படும் சண்டை வேடிக்கையாக இருக்கும். சின்னான்கள் இருந்தால் மைனாக்களும் மைனாக்களைக் காகங்களும் விரட்டி விட்டு அந்தக் கம்பின் மேல் இடம் பிடிக்கும். ஆனால், ஆண்டெனாவில் பல கிடைமட்டக் கம்பிகள் இருப்பதால் பெரும்பாலும் சண்டை வராது. என்றாலும் சில வேளைகளில் மற்ற பறவைகளை கரிச்சான் அண்டவிடாது. இருந்தபோதும் கரிச்சானும் வெண்மார்பு மீன்கொத்தியும் ஆண்டெனாவின் இரு முனைகளில் அமர்ந்திருப்பதை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். சில பறவைகள் இது போன்ற உயரமான கம்பங்களைச் சற்று நேரம் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. சில பூச்சியுண்ணும் பறவைகள், குறிப்பாகப் பறந்து சென்று பூச்சியைப் பிடித்துண்ணும் இயல்புடையவை (flycatching) இது போன்ற இடங்களுக்கு வருகின்றன. என் வீட்டு எதிரே உள்ள ஆண்டெனாவில் அந்தி சாயும் வேளைகளில் மட்டுமே கரிச்சான்கள் வந்து அமர்கின்றன. அவ்வழியே பறந்துசெல்லும் பூச்சிகளைப் பறந்து பிடித்து மீண்டும் ஆண்டெனா கம்பியில் அமர்ந்துகொள்கின்றன. ஆனால், சில பறவைகளுக்கு இது போன்ற இடங்கள் மிகவும் முக்கியம். குறிப்பாகக் கழுகு, வல்லூறு போன்ற இரைகொல்லிப் பறவைகள் உயரமான மரத்திலோ செல்போன் கோபுரங்களிலோ அமர்ந்து கீழே நோட்டம் விடும். இரையைக் கண்டவுடன் சரியான தருணத்தில் கீழ் நோக்கிப் பறந்து அவற்றைப் பிடிக்கும். இதுபோல் பெரிய ராஜாளி (Peregrine Falcon) ஒன்று தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியில் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே வெட்டவெளிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களின் மேல் கருந்தோள் பருந்தைக் காணலாம். வாடிக்கையாக இப்படி அமரும் இடங்களை இப்பறவைகள் மற்ற பறவைகளுக்கு (அதே இனத்துக்கோ வேறு வகைப் பறவைகளுக்கோ) அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை. இது போன்ற இடங்களுக்குக் கீழே தெறித்து விழுந்திருக்கும் எச்சங்களை வைத்து, எந்த வகைப் பறவை அங்கே அடிக்கடி அமர்கிறது என்பதை ஓரளவு கணிக்க முடியும். பெரிய வெள்ளை நிறத் திட்டுக்கள் இருந்தால் அவை இரைகொல்லிப் பறவையாகவோ நீர்ப்பறவையாகவோ இருக்கலாம். விதைகளுடன் இருந்தால் பழவுண்ணிகள். நீள்வட்ட உருளை வடிவில் சிறிய எலும்புகளும் முடிகளும் கொண்ட சிறிய கொழுக்கட்டைபோல இருந்தால் அவை ஆந்தைகளாக இருக்கும். ஆந்தைகள் இரையை (சிறிய பறவை, எலி, பூச்சி, வண்டு, ஓணான் முதலியவை) விழுங்கிய பிறகு அவற்றின் செரிக்கப்படாத எலும்பு, தாடை, சிறகுகள் முதலியவற்றை வாய் வழியே எதிர்க்களித்து துப்பிவிடும். இந்த உமிழ் திரளைகளை (Bird Pellets) அவை வந்து அமரும் அல்லது பகலில் தங்கும் இடங்களின் கீழே காணலாம். ஆந்தைகள் குறிப்பாகக் கூகைகள், எலிகளை அதிகமாக உண்ணும். விவசாயிகள் வயல் வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்த இப்பறவைகள் வந்து அமர ஏதுவாக 'T' வடிவக் கம்புகளை நட்டு வைப்பார்கள். அதற்குச் செலவாகுமென்றால் தேங்காய் மட்டையைத் தலைகீழாகக் குத்தி வைப்பார்கள். சோலைக்கொல்லை பொம்மைகள் சில பறவைகளை விரட்டுவதற்காக மட்டும் வைக்கப்படுவதல்ல, இது போன்ற ஆந்தைகள் வந்து அமர்வதற்காகவும்தான். மனிதர்களால் திருத்தப்பட்டு வெட்டவெளியான வனப்பகுதிகளை மீளமைக்க (restoration) இது போன்ற 'T' வடிவக் கம்புகளை நட்டுவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பறவைகள் மூலம் பரவும் விதைகள், அந்தப் பகுதிகளுக்குச் சற்றே துரிதமாக வந்தடைவதைக் கண்டிருக்கிறார்கள். 'கர்ண' பறவை இரைகொல்லிப் பறவைகளைத் தவிர இது போன்ற உயரமான இடங்களில் பொதுவாகப் பார்க்கக்கூடிய பறவைகளில் பனங்காடையைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை இரையைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது அவற்றின் இணையைக் கவரவும் இது போன்ற இடங்களில் அமர்கின்றன. ஆண் பனங்காடை மொட்டைப் பனை மர உச்சியிலிருந்து மேல் நோக்கிப் பறந்து வானில் கர்ணம் அடித்து சட்டெனக் கீழேயும் பின் மேல்நோக்கியும் பறக்கும். நீல வானத்தின் பின்னணியில், ஊதாவும், இள நீலமும் கொண்ட இறக்கைகளை அது அடித்துப் பறக்கும் காட்சியைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். குண்டுகரிச்சானும் இது போலத்தான். ஆனால், இவை கர்ணம் அடிப்பதில்லை. உயரமான கம்பத்திலோ மரத்தின் உச்சிக்கிளையிலோ அமர்ந்து இணையைக் கவர்வதற்காகவும், தமது வாழிட எல்லையைக் குறிக்கும் வகையிலும் இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கும். பற்றிக்கொள்ள (Grasping feet) ஏதுவாக உள்ள கால்களைக் கொண்ட பறவை இனங்களே இது போன்ற இடங்களில் அமர முடியும். எனினும், திருநெல்வேலி பகுதியில் இதுபோல மொட்டைப் பனை மரத்தின் மீது செண்டு வாத்து அமர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகள் மட்டுமல்ல, கிடைமட்ட மின்கம்பிகளிலும் பல வகைப் பறவைகளைப் பார்க்கலாம். ரயில் பயணங்களில் நம் கூடவே வரும் மின் கம்பிகளில் பல பறவைகளைக் கண்டிருப்போம். நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகளில் அமர்ந்தால் பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும், மின்கம்பிகள் பறவைகளுக்கு ஆபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. பெருங்கொக்குகள் (Cranes), பாறுக் கழுகுகள் (Vultures), கானமயில்கள் (Bustards) போன்ற பறவைகள் வலசை வரும் வேளையில் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கின்றன. காகங்கள், ஆந்தை போன்ற உருவில் சிறிய பறவைகளும் சில வேளைகளில் மின் கம்பிகளில் மாட்டிக்கொண்டு உயிரிழந்து தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கலாம். மின் கம்பிகளில் அமர்வதால் அவற்றை மின்சாரம் தாக்குவதில்லை. அதேநேரம், அவற்றின் இறக்கைகள் அல்லது உடலின் பாகங்கள் ஒரே நேரத்தில் இடைவெளி குறைந்த இரண்டு மின்கம்பிகளில் பட்டுவிட்டால் அவை மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றன. உருவில் சற்றே சிறிய பறவைகள் எப்படியோ தப்பித்துக்கொள்கின்றன. பொதுவாக, பஞ்சுருட்டான்களும் காட்டுத் தகைவிலான்களும் இது போன்ற மின் கம்பிகளில் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அண்மையில் சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு மேலே செல்லும் ஒரு மின்கம்பியின் மேல் சுமார் ஆயிரம் தகைவிலான்கள் அமர்ந்திருப்பதை வியப்புடன் கண்டுகளித்தேன். நாகாலாந்தின் ரஷ்ய விருந்தினர்கள் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே சென்றிருந்தால் அங்கிருக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் நூற்றுக்கணக்கான சாம்பல் கூழைக்கடாக்கள் அமர்திருப்பதைக் காணலாம். எனினும், இதுவரை கண்டத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு என்னை வியப்பிலாழ்த்தியது நாகாலாந்தில் மின் கம்பிகளின் மேல் அமர்ந்திருந்த அமூர் வல்லூறுகள்தான். நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரமாயிரம் அமூர் வல்லூறுகள்! ரஷ்யாவில் உள்ள அமூர் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் வழியில் டோயாங் நீர்த்தேக்கப் பகுதியைத் தாப்பாகக் (தங்குமிடமாக) இவை கொண்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர உயரழுத்த மின் கம்பியின் மேல் ஆயிரக்கணக்கில் இவை அமர்ந்திருப்பதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். நெருக்கமாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கம்பியில் அமர்ந்திருக்கும் வேளையில் அந்தப் பறவைகளின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு கம்பியே தாழ்ந்து கிடக்கும். திடீரென அவை அனைத்தும் ஒரே நேரத்தில் கம்பியை விட்டு வானில் பறக்கும் வேளையில், அந்தக் கம்பி மேலும் கீழும் ஆடுவதைக் காணலாம். இயற்கையான நிலவமைப்பில் செயற்கையான இது போன்ற அமைப்புகள் இயற்கை ஆர்வலர்களின் கண்ணை உறுத்தத்தான் செய்யும். எனினும், இவை இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கடினம்தான். சில பறவைகளும் நிலவமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களின் விருப்பத் தேர்வுகளையும் மாற்றிக்கொள்கின்றன. பழைய ஆண்டெனாக்கள் இல்லாமல் போனால் என்ன? புதிய டிஷ் ஆண்டெனாக்களில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று அவை முடிவு செய்திருக்கக்கூடும். மின் கோபுரங்களும் மின் கம்பிகளும் இல்லாத காலத்தில் இந்தப் பறவைகள் எங்கே, எப்படி அமர்ந்திருக்கும்? என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை. கட்டுரையாளர், பறவையியல் நிபுணர் தொடர்புக்கு: jegan@ncf-india.org 

No comments:

Popular Posts