Tuesday 13 December 2016

தொலைநோக்கு திட்டம்!

தொலைநோக்கு திட்டம்! | பெ. சிதம்பரநாதன் | முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 14 தனியார் வங்கிகளை 1969-இல் தேசிய மயமாக்கிய நடவடிக்கைபோல, பிரதமர் மோடியின் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய நடவடிக்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய் ஆட்சியில் துணைப்பிரதமராக இருந்த அத்வானி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை ரூ.70 லட்சம் கோடி என்று மதிப்பிட்டார். அத்தொகையை ஒரு பத்திரிகையின் புள்ளிவிபரம் ரூ.30 லட்சம் கோடி (479 பில்லியன் டாலர்) என்கிறது. இந்தக் கருப்புப்பணம் மறைமுகமாக ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. நமக்கும் ஒரு பிரதமர். கருப்புப்பண ஆட்சிக்கும் ஒரு பிரதமர் என்றே கூறலாம். தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள், பதுக்கல்காரர்கள், மதுபான நிறுவனங்கள், வைர வியாபாரிகள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் இதில் அதிக சம்பந்தமுடையவர்களாகக் கூறப்படுகிறது. இவர்களின் கருப்புப் பணம்தான் மக்கள் தேர்ந்தெடுக்கும் மத்திய ஆட்சியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. நமது மத்திய அரசினுடைய ஆண்டு வரி வருமானம், சுமார் ரூ.17.5 லட்சம் கோடி. இந்த வருமானத்தில்தான் 43 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளமும், மற்ற செலவினங்களும் செய்யப்பட்டு வருகின்றன. கருப்புப்பணம் என்ற மலைப்பாம்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வளைத்து இறுக்காமல் இருக்க வேண்டுமானால், அப்பாம்பைச் சாகடித்தாக வேண்டும். பிரதமர் மோடி பிரதமர் நாற்காலியில் வெறுமனே உட்கார்ந்தே மீதியுள்ள இரண்டரை ஆண்டுகளைக் கழித்து விடுவாரேயானால், யாருக்கும் பிரச்னையே வந்திருக்காது. அவரோ மலைப்பாம்பினுடைய வாயையே பிளந்துள்ளார். ஒன்று அந்த மலைப்பாம்புக்கு இவர் இரையாகலாம். அல்லது அந்த மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து இவர் வெளிப்படலாம். இந்தப் பின்னணியில் பிரதமர் மோடி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் அவர் அளந்துதான் எடுத்து வைக்கிறார். அதேபோல அவர் கொடுக்கும் ஒவ்வோர் அடியும் கருப்புப் பணத்தின்மீது விழுகிற மரண அடியாகத்தான் இருக்கிறது. இந்தியாவுக்குள் இருக்கக்கூடிய பணப்புழக்கத்தின் கன அளவு ரூ.19.5 லட்சம் கோடித் தொகையில் அதிக மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகள் 85 சதவீதம் எனப்படுகிறது. ரூபாய்க் கணக்கில் அத்தொகை ரூ.16.5 லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.3 லட்சம் கோடி, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 கரன்சி நோட்டுகள். நவம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்து, இந்த 16.5 லட்சம் கோடிக்குத்தான். புழக்கத்திலுள்ள இந்தத் தொகை, முடக்கப்பட்டுவிட்டதால், புதிய கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதற்கான பிரசவ வேதனைதான் இது.இதுவரை ரூ. 11 லட்சம் கோடி செல்லாத பழைய நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்துவிட்டன. இதேபோல ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளிலிருந்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பொதுமக்களும் எடுத்திருக்கிறார்கள். முடக்கப்பட்ட ரூ. 16.5 லட்சம் கோடி கரன்சி நோட்டுகளில் பெருமளவு கரன்சிகள், கள்ள நோட்டுக்கள் எனப்படுகிறது. இவை பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு வங்கதேசம் வழியாகவும் பயங்கரவாதிகளின் மூலம் இந்தியாவுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ரூ.500, ரூ.1000, ரூ.5000 நோட்டுக்களை இந்தியாவைப் போலச் செல்லாது என்று அறிவிப்பீர்களா என்று பாகிஸ்தான் நிதியமைச்சரிடம் பத்திரிகை நிருபர் கேட்டபோது, அப்படி அறிவிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காரணம், பாகிஸ்தான் போல, இந்தியாவும் கரன்சிகளை அச்சடித்து அங்கே அனுப்பியிருந்தால், இந்தியாதான் அதற்குக் காரணம் எனக் குற்றமும் சாட்டியிருப்பார்கள். பாக் நிதியமைச்சரே இந்தியாவைப் போலக் கள்ளநோட்டு பாகிஸ்தானில் இல்லை என்பதே நமக்குக் கொடுக்கப்பட்ட நற்சான்றிதழ். ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு இருக்கத்தான் செய்தது. தங்கள் கைவசம் மீதி இருந்த சம்பளம், ஊதியம், கூலி இவை அனைத்தும் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களில்தான் உள்ளன. ஆனால், அந்தக் கரன்சி நோட்டுகளில் எது நல்ல கரன்சி, எது கறுப்புப் கரன்சி என்று வைத்திருப்பவர்களுக்கே தெரியாது. இந்தக் கரன்சிகள் செல்லாது என்ற அறிவிப்பு, பாமர மக்களையும், சம்பளம் வாங்கும் பிரிவினரையும், கூலி வேலைக்காரர்களையும் ஒட்டு மொத்தமாகச் சொன்னால், மத்தியதர வர்க்கத்தைத்தான் பாதித்துள்ளது. அவர்கள் வரிசையில் நின்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்வதைப் பிரதமர் மோடி செய்த கொடுமை என்கிறார்கள். வலது கை விரலில் மை வைத்து அடையாளப்படுத்துவது தங்களுக்கு அவமானம் என்கிறார்கள். ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, ப.சிதம்பரம், கபில் சிபல், முலாயம்சிங், முதல்வர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், ஸ்டாலின், விஜயகாந்த் முதலிய அரசியல்வாதிகளின் விமர்சனங்களாகும். இதற்குப் பிரதமரின் பதில், 50 நாட்கள் பொறுத்துக் கொண்டால் போதும், இதிலிருந்து பூரண விடுதலையை மக்களுக்குத் தர முடியும் என்பதாகும். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் 2008-இல் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவே நிலைகுலைந்தபோது, இந்தியக் கருப்புப் பணம்தான் இந்தியாவையே காப்பாற்றியது என்று கருப்புப் பணத்துக்கு ஆதரவாகவும் அபத்தமாகவும் சொல்லியிருக்கிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமோ, நாட்டிலுள்ள மொத்தக் கள்ளநோட்டே ரூ.400 கோடிதான் என்கிறார். இதனை ஒழிக்க 16.5 லட்சம் கோடிப் பணப் புழக்கத்தை முடக்குவதா என்கிறார். அதுமட்டுமல்ல ரூ.2 ஆயிரத்து 800 கோடிதான் கறுப்புப் பணம் உள்ளது என்றும் கூறியுள்ளார். ரூ.400 கோடி கருப்புப் பணம் என்றால் கவனத்தில் கொள்ளவே தேவையில்லை. இதனால்தான் காங்கிரஸ் கூட்டணி அரசு, கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த அக்கறை காட்டவில்லை. சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளது குழப்பமாகவும் குதர்க்கமாகவும் உள்ளது. தோழர் சீதாராம் யெச்சூரியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட அழைப்பது. மம்தாஜிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்காகத்தான். யெச்சூரிக்கு என்ன ஆபத்து? அநேகமாக அரசியல் கட்சிகள் எல்லாமே வெள்ளம் வந்தால், புயல் வீசினால், விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைப் போட்டி போட்டுச் செய்கின்றன. இதனைச் செய்ய எங்கிருந்து அவர்களுக்கு வருமானம் வருகிறது தொண்டர்கள் தரும் பணமா அது? வரிசையில் நிற்பது கொடுமை என்கிறார்களே, ரயில் நிலையங்களில், திரையரங்குகளில், நியாயவிலைக் கடைகளில் வரிசையில் நிற்பதில்லையா? 97 வயதுள்ள மோடியின் தாயாரே, அவருடைய சொந்தக் கிராமத்திலுள்ள ஓரியண்டல் வங்கிக் கிளையின் முன்பு வரிசையில் நின்றுதானே பணத்தை மாற்றியிருக்கிறார். கை விரலில் மை வைப்பது அவமானம் என்கிறார்கள். 16 முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், 16 முறை வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதே, அதுவும் அவமானமா? கருப்புப்பணத்தைக் கூலி நபர்களிடம் கொடுத்து ஒவ்வொரு வங்கியாகச் செலுத்தி புதுக் கரன்சிகளை வாங்கி, மீண்டும் கருப்புப் பணத்தைத் திரட்டுவதைத் தடுக்கத்தான் இந்த மை வேலையை மத்திய அரசு செய்துள்ளது. இதைத் தடுக்க மாற்று யோசனை இருந்தால் அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்குத் தாராளமாகச் சொல்லலாமே. அவர்களை யார் தடுத்தார்கள்? மத்திய அரசின் மகத்தான நோக்கம் புழக்கத்திலுள்ள கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் அப்புறப்படுத்திவிட்டால், தேசத்திற்குள் நல்ல பணம் புழக்கத்திற்கு வரும். விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால், நிச்சயமாகப் பலன் கிடைக்கும். கருப்புப்பணம் புழக்கத்தில் இருந்தபோது எடுத்த இதே நடவடிக்கை பலன் தரவில்லை. தராது. கருப்புப் பணத்தை ஒழித்தால்தான் விலைவாசியைக் குறைப்பதே சாத்தியமாகும். விலைவாசி குறையுமானால், ஏழை எளியவர்களுக்கு நல்லது. ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பொருள்களை ரூ. 750 ரூபாய்க்கு வாங்கலாம். அதே சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்தால் தேசப் பணிகளுக்கு அது பயன்படும். அப்பாவி ஏழை மக்கள் இந்த தேசத்திற்கான பொருளாதார விடுதலைக்கு ஒரு புதிய பரிமாணத்தில் போராடுகிறார்கள். ரத்தத்தைச் செலவழித்தார்கள் நமது மூத்த தலைமுறை. இந்தத் தலைமுறை வரிசையில் நின்று நேரத்தை மட்டும் செலவழித்தாலே போதும். தற்காலிகமாக வங்களினால் ஏற்படும் பண விநியோகத் தாமதத்திற்காக ஒரு தலைசிறந்த லட்சிய நடவடிக்கையை மலினப்படுத்திவிடக் கூடாது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது போல, இந்த நடவடிக்கையையும் வரவேற்றால்தான் அவர்கள் கை சுத்தமுள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.

No comments:

Popular Posts