Tuesday, 13 December 2016

மொழியே அறிவின் அடையாளம்

மொழியே அறிவின் அடையாளம் | உதயை மு.வீரையன் | தனித் தமிழ் நூற்றாண்டு விழா தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1916 தொடங்கிய இந்த இயக்கம் 2016-ஆம் ஆண்டு நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர்களை நினைவு கூர்வதும், தமிழ் மொழியின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் திட்டமிடுவதும் தேவையாகிறது. தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையாகப் போற்றப்படும் மறைமலையடிகள் 1876-ஆம் ஆண்டு பிறந்து 1950-ஆம் ஆண்டு மறைந்தவர். எழுபத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். அவரது 140-ஆம் ஆண்டு பிறந்த நாளும் இதனோடு சேர்ந்து கொண்டுள்ளது. அவர் தனி மனிதராக இல்லாமல் தனித் தமிழ் இயக்கமாகவே வாழ்ந்து மறைந்தவர் என்பதே அவரது சிறப்பாகும். தமிழ் இலக்கியக் காலத்தைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் என்று பகுக்கலாம். சங்க காலத்தில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லை தமிழ் மொழியில் பிற மொழித் தாக்கங்களும் இல்லை. வடமொழித் தாக்கமும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இடைக்காலம் என்பது பக்தி இலக்கியக் காலமாகும். புத்தமும், சமணமும் தமிழகத்தில் பரவியபோது வடமொழிச் சொற்களையும் கலந்து எழுதும் முறையையும் கொண்டு வந்தனர். இது ஒரு புதிய மொழியாகவே உருவெடுத்தது. இதற்கு, மணிப்பிரவாளம் என்று பெயரிட்டு புதிய மொழியாக உருவாக்கத் தொடங்கினர். தென் மொழியும் வடமொழியும் சரிபாதியாகக் கலந்து எழுதினர். மணியும், பவளமும் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கு இன்பம் தருவது போல தமிழும், வடமொழியும் கலந்த மொழி செவிக்கு இன்பம் பயக்கும் என்று கூறினர். இதனைச் சமணர்கள் முன்னெடுத்துச் சென்றனர். ஸ்ரீபுராணம் என்னும் சமணநூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டதுதான். அத்துடன் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய தமிழ் நூல்களுக்கு விளக்கவுரை அளித்தவர்கள் இந்த மணிப்பிரவாள நடையையே வளர்த்தனர். அன்றியும் தமிழ்நூற் களவிலை யவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ -என்று கேலி செய்யும் அளவுக்குத் தமிழின் நிலை தாழ்ந்தது. இதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பலர் எழுந்தனர் இயக்கம் கண்டனர். திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், "தமிழ் பழைமையானது நலம் சிறந்தது உயர்நிலையில் உள்ளது. விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது' என்று மொழிந்துள்ளார். வடமொழி மறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர், "தமிழ் மிகப் பண்பட்ட மொழி தனக்கே உரியதான இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி' என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன. காலப்போக்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்தவை கணக்கில் அடங்கா. இவற்றில் செவ்வியல் மொழிகளும் அடங்கும். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி, சீனம், தமிழ் என்னும் செவ்வியல் மொழிகளில் சீனம், தமிழ் தவிர மற்றவையெல்லாம் வழக்கிழந்து போயின. எனினும் மொழிகளின் வரலாற்றில் அவை இறவா இடம் பெற்றுள்ளன. மொழியே ஓர் இனத்தின் முகவரியாகும். மொழியே மக்களின் மனத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். மொழியே மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மொழியே அறிவின் அடையாளமாகிறது. எக்காலத்திலும் மனித நாகரிகத்தின் குறியீடாக விளங்குவதும் மொழிதான். தமிழ் மொழி ஒரு மொழிக் குடும்பத்தின் தலைசிறந்த அடையாளமாக விளங்கி வருகிறது. தமிழ் மக்களின் நாகரிகச் சின்னமாகவும் இருந்து வருகிறது. இறந்து விடாமல் இலக்கியச் செழிப்போடு வாழ்ந்து வருகிறது என்பதே அதன் உயர்வை எடுத்துக் காட்டுகிறது. குமரிக் கண்டம் என்று அறியப்படும் தமிழ் நாட்டின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் முடிபாகும். இப்பகுதியே லெமுரியா என்று அழைக்கப் படுகிறது. அறிஞர் ஸ்காட் எலியட் இழந்த லெமுரியா என்னும் தம் நூலில் "லெமுரியாக் கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில்' என்று கூறியுள்ளார். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி' என்று போற்றப்படுவதும் அதனால்தான். ""அனுமன் சீதாபிராட்டியிடம் தூது சென்றபோது "மதுரமான மொழியில் பேசினான்' என்று வால்மீகி முனிவர் எழுதியிருப்பதைக் கொண்டு அம்மதுர மொழி தமிழ்மொழியென்றே கொள்ளலாம்'' என்று மகாவித்துவான் ரா. ராகவையங்கார் தமது "தமிழ் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். "வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினார்கள். அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம். ஆதலின் இப்பொழுது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்ற கொள்கையை இக்கூற்று மேலும் வலியுறுத்தி நிற்கின்றது' என்று ஹீராஸ் பாதிரியார் கூறியுள்ளார். முடியுடை மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தனர் எனினும் பாண்டியர்களின் முச்சங்கங்கள் முதலிடம் பெறுகின்றன. இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் இந்தச் சங்கங்களின் வரவு என்றே கொள்ளலாம். மொழியின் தொன்மைக்கும், வளமைக்கும், செவ்வியல் தன்மைக்கும் இவையே சான்றாக நின்று நிலவுகின்றன. காதலும், போரும் சங்க இலக்கிய வாழ்வியலாகவும், சமயமும், தத்துவமும் இடைக்காலக் கருத்தியலாகவும், அறிவியலும், மனிதநேயமும் இக்கால இலக்கியமாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு மொழியும், இலக்கியங்களும் காலம்தோறும் தம்மை புதுப்பித்துக் கொள்வதால்தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மொழித் தூய்மையைக் காப்பதில் அந்தக் காலத்திலேயே தொல்காப்பியம் விதிகளை வகுத்துள்ளது என்பதை இக்காலத்தினர் அறிய வேண்டும். பிறமொழித் தாக்கங்கள் வரும்போது அதற்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே -என்று தொல்காப்பியம் வழிவகுத்திருக்கிறது. இதற்கு இலக்கியமாகக் கம்பன் தன் காவியத்தைப் படைத்தளித்துள்ளான். வடமொழியில் வால்மீகி உரைத்த கதை மாந்தர் பெயர்களைத் தனித்தமிழாக்கினான். இராமன் (அழகன்), இலக்குவன், வீடணன் இவ்வாறு தமிழ்ப்படுத்தி வழிகாட்டியுள்ளான். மொழிக்கலப்பு என்பது வடமொழியிலிருந்து தொடங்கி பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபி, உருது, போர்ச்சுகீஸ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகள் ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் வழக்காகி தமிழில் ஊடுருவின. அவற்றை கண்ணும் கருத்துமாகக் கவனித்து எதிர்க்குரல் எழுப்பிய பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் சமயப்பூசல் மிகுந்திருந்தது. தமிழ்க் கல்வியிலும் ஊடுருவியது. சைவ சமய நூல்களைத் தவிர மற்ற இலக்கியங்களைப் படிப்பது கூடாது என ஒதுக்கி வைத்தநிலை பரவலாக இருந்தது. இதுபற்றி மயிலை சீனி. வேங்கடசாமி இவ்வாறு கூறுகிறார்: "சங்க நூல்களையும், சங்கம் மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். சைவ சமயத்தவர் இந்த நூல்களைப் படிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டனர். சமயப் பற்று காரணமாக உண்டான இந்தப் புதிய கருத்து தமிழரின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் பேராபத்தாக இருந்தது. இந்தப் பேராபத்து சென்ற நூற்றாண்டிலேயே தடுக்கப்பட்டு விட்டது. இப்போது எங்கும் சமயச் சார்பற்ற தன்மை பற்றியே பேசப்படுவதால் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை'. சீனத் தத்துவஞானி கன்பூசியஸிடம் (கி.மு. 551- 478) "பெரியீர் சமுதாயத்தை ஆளும் பொறுப்பு தங்களிடம் அளிக்கப்பட்டால் நீவிர் யாது செய்வீர்?' என்று வினவினர். அப்போது அவர் கூறினார்: "நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அதற்கு விளக்கமும் அளித்தார். எப்படி தெரியுமா? "நான் அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது? மொழியின் இன்றியமையாமையைத்தானே! மொழியைக் காப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அந்த ஞானியின் வார்த்தைகள் கூறாமல் கூறுகின்றன. அந்த எச்சரிக்கையின் விளைவுதான் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமாகும்.

No comments:

Popular Posts