Wednesday 12 February 2020

வெற்றியின் அடையாளம் ஆபிரகாம் லிங்கன்!

வெற்றியின் அடையாளம் ஆபிரகாம் லிங்கன்! முனைவர் இரா. வெங்கடேஷ், உதவி பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம். இ ன்று (பிப்ரவரி 12-ந்தேதி) ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம். தோல்வி கண்டு துவளாத மனவலிமை, அயராத உழைப்பு, விடா முயற்சி போன்ற சீரிய குணங்களால் தான் அடைய வேண்டிய சிகரத்தை மட்டுமல்லாமல் தன்னிகரற்ற டாலர் தேசத்தின் வரலாற்றையே மாற்றியமைத்த வல்லமை பொருந்திய ஒரு மகத்தான சமூகப் போராளி ஆபிரகாம் லிங்கன்.

1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தைச் சேர்ந்த ஹாட்ஜன்வில் என்ற பகுதியில் உள்ள ஹார்டின் எனும் சிற்றூரில் குடிசையொன்றில் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை நாயகனைப் பெற்றெடுத்தாள் நேன்சி எனும் தாய். செவ்விந்தியர்களால் படுகொலை செய்யப்பட்ட இவருடைய தாத்தாவின் நினைவாக தந்தை தாமஸ் இவருக்கு ஆபிரகாம் லிங்கன் என்று பெயர் சூட்டினார்.

வறுமையே வாழ்க்கையாகிப்போன குடும்பம்; கல்விப் பின்புலம் இல்லாத பெற்றோர்கள்; சிறு வயதிலேயே தாயின் பரிவையும், பாசத்தையும் இழந்த கொடுமை. இவற்றால் லிங்கனால் சரியாகப் படிக்க இயலவில்லை. தாயை இழந்தாலும் சிறு வயது முதலே வயதுக்கு மீறிய உயரத்தோடும், வலிமையோடும் திகழ்ந்தார். 7 வயதிலேயே துப்பாக்கியால் குறிபார்த்துச் சுடும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது தாய் பைபிள் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். வறுமையில் வாடிய போதும், வருமானம் குறைந்த போதும் கற்பதை மட்டும் நிறுத்தவில்லை. எனவே இளமைப் பருவத்தில் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பதில் தனி ஆர்வம் காட்டினார். இதன் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார்.

தனது 22-வது வயதில் ஒருஅலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் கடன் வாங்கி வியாபாரம் செய்தார். அடுத்து தபால்காரர் ஆனார். அதன் பிறகு தாமாகவே சட்டப் புத்தகங்களைப் படித்துச் சட்டம் பற்றிய நுணுக்கங்களையும் கற்று வழக்கறிஞரானார். வழக்கறிஞராக தொழிலை வெற்றிகரமாக நடத்தியதுடன் மக்கள் மத்தியிலும் சமூகப் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி சொற்பொழிவாற்றத் தவறியதில்லை.

வழக்குகளுக்கான கட்டணத்தில் பிடிவாதம் காட்டாமல் கட்சிக்காரர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். ஏன் குறைவாகக் கட்டணம் வாங்குகின்றீர்கள்? என மனைவி கேள்வி கேட்கும் போதெல்லாம் என் கட்சிக்காரர்கள் என்னை போல ஏழைகள் தான். அவர்களிடம் கட்டணம் கேட்டு வாங்குவதற்கு என் மனது இடம் கொடுப்பதில்லை என்று பதில் தருவார்.

நியூ ஆர்லியான்ஸ் நகரில் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பின மக்கள் விலைக்கு விற்கப்படுவதையும், சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதையும் கண்டு மனம் வெதும்பினார். 15-வது வயதில் அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை உணர்ந்து 25-வது வயதில் இல்லினாய்ஸ் மாநில சட்டமன்ற பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 8 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த அவர் அரசியலை விட்டு விலகி தனியார் துறையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனை மனதை உறுத்திக் கொண்டேயிருந்ததால் மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். அரசியலில் வெற்றிபெற கடுமையாக உழைத்தார்.

1859-ம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது? என நண்பர் ஒருவர் கேட்ட போது அதற்கான தகுதி எனக்கில்லை என்று பணிவுடன் கூறி மறுத்தார். ஆனால் காலமும் சூழலும் மக்களும் அதை ஏற்க மறுத்தனர். அதன் விளைவு தான் அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16-வது அதிபராகக் குடியரசுக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் அடைய நினைத்த உச்சத்தை அடைந்து விட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தாலும் 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டதாக அவர் மனது உரக்கச் சொன்னது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்பட்டு அடிமைத்தனம் ஒழிக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனத்தை அறிவித்தார் ஆபிரகாம் லிங்கன். இதனைச் செயல்படுத்தும் வகையில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கிடையிலான உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டுவந்து அடிமைத்தனத்தை ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி பெருமை சேர்த்தார்.

ஒரு நாள் அதிபர் மாளிகையில் உள்ள படிப்பக அறையில் படித்துக் கொண்டிருந்தார். ஊழியர் ஒருவர் அவரிடம் சென்று தங்களைச் சந்திக்க பாதிரியார் வந்திருப்பதாகச் சொன்னார். சந்திக்க அனுமதி தந்த அதிபர், அவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், தாங்கள் எந்த விதமான மதச் சடங்குகளிலும் ஈடுபடுவதில்லையே? அப்படியெனில் மதம் பற்றிய தங்கள் கருத்து என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அதிபர் “நல்லதைச் செய்யும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. கெட்டதைச் செய்யும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது. அதுதான் எனது மதம்“ என்றாராம்.

கெட்டிஸ்பர்க் நகரில் அவர் ஆற்றிய உரை அவரை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிவகுத்தது. அடிமை விலங்கறுத்து சமூகமும், மக்களும் சுதந்திரக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க வேண்டும் என்ற பெருங்கனவு கொண்ட லிங்கன் அதை பெருமையாக நினைக்கவில்லை. மாறாக “முட்புதர்களை அகற்றி முள்கள் இருந்த இடத்தில் மலர்களை மலரச் செய்தான் லிங்கன்” என்று வரலாறு என்னைக் குறிப்பிட்டாலே போதும் என்றார். ஆனால் வரலாற்றின் பார்வை வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் தனது மனைவியுடன் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த போது ஜான் பூத் எனும் நாடக நடிகன் அதிபர் லிங்கனைச் சுட்டுக் கொன்றான்.

ஆபிரகாம் லிங்கன் என்ற தனி மனிதன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் சந்தித்த தோல்விகள் ஏராளம். குடும்பம், வாழ்க்கை, தொழில், அரசியல் என அனைத்திலும் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்தவராகவும், ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம் கொண்டவராகவும், உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொண்டவராகவும் அறியப்பட்ட ஆபிரகாம் லிங்கன் தான் வலிகளை மறைத்து சிரித்துக் கொண்டே சிகரம் தொட்டதற்கு அவரின் வலிமை மிக்க எண்ணங்களும் மன உறுதியும் தான் காரணம் என்றால் அது மிகையில்லை.

பலமுறை வெற்றி அவரைக் கைவிட்டாலும் ஒரு முறை கூட முயற்சியைக் கைவிடாத உன்னத மனிதர் அவர். ஆகவேதான் தன் மகனின் ஆசிரியருக்கு கடிதம் எழுதுகையில் “எல்லாவற்றிற்கும் மேல் அவனுக்குத் தோற்கவும் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது எவ்வளவோ உயர்ந்தது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்“ என்று எழுதினார்.

மனித குலத்தின் ஏற்றத்தாழ்வான அடிமைத்தனத்தை அகற்றுவதில் லிங்கனின் பங்கு அளப்பரியது. எல்லோரும் போல் தாமும் வாழ்ந்து விட்டுப் போகலாம் என நினைத்திருந்தால் டாலர் தேசத்தின் வரலாற்றில் அவர் இடம் பிடித்திருக்க முடியாது.

தோல்விகள் துரத்திய போதும் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நமக்கான வாய்ப்பு வரும் என்று தன் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் இல்லாது போயிருந்தால் கறுப்பினத்தவர்கள் சுயமரியாதை பெற்றிருக்க முடியாது என்பதை விட அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்ற மாபெரும் சிறப்பை இழந்திருக்கும். அதற்கு வித்திட்ட விடுதலை நாயகன் லிங்கனின் வரலாற்றுச்சிறப்புகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.

No comments:

Popular Posts