Sunday 22 December 2019

அங்கோர் வாட்: கல்லிலே கலைவண்ணம் - இந்தியர்களின் இமாலயப் பணி

தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் புகழுடன் செயல்பட்ட சிற்பிகளின் கலைத்திறனை பிரதிபலிக்கும் கம்போடிய நாட்டுக் கோவில்கள், 800 ஆண்டுகளுக்கு முன்பு கவனிப்பார் யாரும் இன்றி சேதம் அடையத் தொடங்கின.

அந்தக் கோவில்களின் ஆக்கத்திற்கு இந்தியாவில் இருந்து நிபுணர்கள் செல்ல வேண்டி இருந்தது போலவே, சிதிலம் அடைந்த அந்தக் கோவில்களைச் செப்பனிட 800 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்தே நிபுணர்கள் செல்ல வேண்டியதாகி விட்டது.

பல தலைமுறைகளையும் தாண்டி, தொப்புள் கொடி உறவு நீடிப்பதையே இது காட்டுவதாக அமைந்து விட்டது.

பிரான்ஸ் நாட்டின் ஆட்சி வரம்புக்கு உட்பட்ட நாடாக இருந்த கம்போடியா, 1953-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

புதர்களுக்குள் சிக்கி, இடிபாடுகளுடன் காட்சி அளித்த அரிய கோவில்கள் மீது அதன் பிறகே அரசு கவனம் செலுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த யுத்தத்தின் நெடி, அந்தக் கோவில் வளாகங்களில் இன்னும் மறையாமலே இருந்தது.

இயற்கை ஏற்படுத்திய சேதம் தவிர, கேமர் ரூஜ் தீவிரவாதி களின் அட்டூழிய முத்திரைகளும் அங்கே பதிவாகி இருந்தன.

அந்தக்கோவில்களைத் தங்கள் வாழ்விடங்களாக ஆக்கிக்கொண்ட வனவிலங்குகளின் எச்சம், குறிப்பாக வவ்வால்களின் எச்சம், அந்தக் கோவில்களின் வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தன.

சேதம் அடைந்த கோவில்களைச் செப்பனிட்டுத் தருவதாகக் கூறி, பிரான்ஸ் நாடு 1972-ம் ஆண்டு பணிகளைத் தொடங்கியது.

ஆனால் அது அபாயகரமான வேலை என்பதால் அந்த நாடு, பணிகளை பாதியில் நிறுத்திக்கொண்டு வெளியேறி விட்டது.

இதைத்தொடர்ந்து, கோவில்களைச் சீரமைக்கும் பணிகளை ஏற்று நடத்த உதவி செய்யுமாறு உலக நாடுகளுக்கு கம்போடிய அரசு வேண்டுகோள் விடுத்தது.

வேறு எந்த நாடுகளும் இந்தக்கோரிக்கையை காதிலே போட்டுக்கொள்ளாத நிலையில், கம்போடியாவுக்கு உதவ இந்தியா முன்வந்தது.

1986-ம் ஆண்டு, இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே இது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி இந்தியா ரூ. 3 கோடி செலவில் புனரமைப்புப் பணி களைச் செய்வது என்றும், இந்தப் பணி 6 ஆண்டுகளில் முடி வடையும் என்றும் அதில் கூறப்பட்டது.

உடனடியாக இந்தியாவின் பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பி. நரசிம்மையா தலைமையில் ஒரு குழு கம்போடியாவுக்குச் சென்றது.

இந்தக்குழுவினர், அங்கோர் வாட் கோவிலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கோவிலில் இருந்த வவ்வால்களின் எச்சம் அகற்றப்பட்டு, மேலும் வவ்வால்கள் வந்துவிடாதபடி கோவிலின் மேற்புறச் சுவரில் வலைகள் அடிக்கப்பட்டன.

உடைந்து கீழே விழுந்து கிடந்த கற்கள், எந்த இடத்தில் இருக்க வேண்டியவை என்று சரி பார்க்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டன.

பழமை சிறிதளவும் மாறிவிடாமல் மிகக்கவனமாக சீரமைப்புப் பணிகள் நடந்தன.

கோவிலின் முக்கியமான இடங்களில் அவர்கள் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

குறிப்பாக, அங்கோர் வாட் கோவிலில் ஓர் இடம் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

மூன்றாம் பிரகாரத்தின் நடைபாதை (கேலரி) முடிவடையும் இடத்தின் இடது பக்க மூலை, ‘எதிரொலி மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது.

அங்கே சுவர் பக்கம் முதுகை வைத்துக்கொண்டு நின்றபடி, நமது இதயம் உள்ள மார்புப் பகுதியை லேசாகத் தட்டினால், இதயம் துடிக்கும் சப்தம் எதிரொலியாக நமக்குக் கேட்கும்.

இந்த அரிய நிகழ்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை.

இதுபோன்ற சிறப்பான இடங்களில் ஏதும் மாற்றம் செய்யாமல், அதே சமயம் சுற்றுலாப்பயணிகள் தாராளமாக வந்து செல்லும் வகையில் சீரமைப்புப் பணிகளை இந்திய நிபுணர்கள் 1993-ம் ஆண்டு செய்து முடித்தார்கள்.

அப்போது அங்கோர் வாட் கோவிலைப் பார்வையிட்ட கம்போடிய நாட்டு கலாசாரத்துறை மந்திரி செங் பான் என்பவர், “வாடிக் கிடந்த கம்போடியாவின் ஆன்மாவை இந்தியா வருடிக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறது” என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.

இந்தப் புகழ்ச்சி பிரான்ஸ் நாட்டுக்குப் பொறுக்கவில்லை.

“அங்கோர் வாட் கோவிலின் பழைமையை இந்தியா பாழ்படுத்தி விட்டது” என்று பிரான்ஸ் கூறியது.

இந்தக்குற்றச்சாட்டை கம்போடியா புறந்தள்ளிவிட்டது.

இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், 2004-ம் ஆண்டு கம்போடியாவுக்குச் சென்று அங்குள்ள கோவில்களைப் பார்வையிட்டார்.

கோவில் வளாகம் முழுவதும் ராட்சத மரங்கள் வளர்ந்து, அதனால் அதிக அளவில் சேதம் அடைந்து காணப்பட்ட ‘தா புரோம்’ என்ற கோவிலை சீரமைத்துக் கொடுக்க, அப்போது இந்தியா முன்வந்தது.

‘தா புரோம்’ கோவில், 7-ம் ஜெயவர்மனால் அவரது தாயார் நினைவாக 1181-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதையும், தற்போது ராட்சத மரங்களின் பிடியில் சிக்கி இருக்கும் அந்தக் கோவில், ‘டோம்ப் ரைடர்ஸ்’ என்ற ஆங்கிலப் படம் மூலம் உலகப்புகழ் வெளிச்சம் பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அந்தக்கோவிலின் மையத்தில் கலை அழகுமிக்க ‘நடன மண்டபம்’ என்ற கட்டிடம் இருக்கிறது.

இந்த மண்டபத்தின் மேற்கூரையை 48 தூண்கள் தாங்கி நின்றன. அந்தத் தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்தக்கோவிலைச் செப்பனிடும் பணியை இந்தியா மேற்கொண்ட காலத்தில், இந்த நடன மண்டபத்தின் அத்தனை தூண்களும் இடிந்து விழுந்து, அந்த இடம் கற்குவியலாகக் காட்சி அளித்தது.

அங்கோர் வாட் கோவில் சீரமைப்புப் பணிகளில் பி.நரசிம்மையாவுடன் இணைந்து பணியாற்றிய இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை துணைக்கண்காணிப்பாளர் டி.எஸ். சூட் என்பவர் தலைமையில் 5 பேர் குழு வந்து, தா புரோம் கோவிலைப் பார்வையிட்டனர்.

கோவில் கட்டிட சுவர்களும் தூண்களும் இடிந்து விழுந்து, அவற்றில் இருந்த கற்கள் குவியல் குவியலாக சிதறிக் கிடந்ததோடு, அந்த இடம் முழுவதும் முழங்கால் அளவுக்கு சேறும் சகதியுமாக அலங்கோலமாகக் காட்சி அளித்தது.

இடிந்து கிடந்த நடன மண்டபத்துக்குள்ளேயே, இலவம் பஞ்சு மரங்கள் 60 அடி உயரத்துக்கும் அதிகமான உயரத்தில் வளர்ந்து இருந்தன.

இவற்றை எல்லாம் பார்வையிட்ட இந்திய நிபுணர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்று திட்டமிட்டார்கள்.

2007-ம் ஆண்டு அங்கே ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் அங்குலம், அங்குலமாகப் புகைப்படங் களாக எடுக்கப்பட்டன.

2010-ம் ஆண்டு முழுவீச்சிலான பணிகள் தொடங்கின.

2014-ம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இது சவாலான பணி என்பதால் அந்த கால கட்டத்திற்குள் முடிக்கப்படவில்லை.

இப்போதும் (2019-ம் ஆண்டு) அங்கே இந்திய அதிகாரிகள் சீரமைப்புப் பணிகளை நடத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

இந்தப்பணிகள் குறித்து இந்திய அதிகாரி டி.எஸ்.சூட் கூறி இருப்பதாவது:-

தா புரோம் கோவிலுக்குள் நாங்கள் முதல் முறையாகச் சென்ற போது கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி முழங்கால் அளவுக்கு சகதியாக இருந்தது.

நடன அரங்கம் என்ற கட்டிடத்தின் உள்ளேயும், கோவில் சுவர்களிலும் இலவம் பஞ்சு மரங்களும், அரச மரங்களும் ராட்சத அளவில் வளர்ந்து இருந்தன.

நடன அரங்கம் முழுவதும் இடிந்து கிடந்தது. எந்த எந்த கல் எங்கே இருக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்த கோவில் முழுவதும் புகைப்படங்கள் எடுத்தோம்.

கட்டிட சுவர்கள் முழுவதையும் அகற்றி, பின்னர் அந்தப் புகைப்படங்கள் உதவியுடன் புதிதாக சுவர்களைக் கட்டினோம்.

சீரமைப்புப் பணிக்கு அங்கே கிடக்கும் கற்களை மட்டுமே பயன்படுத்துவது என்று தீர்மானித்தோம்.

உடைந்த தூண்களையும், சுவரில் இருந்து உடைந்து விழுந்த கற்களையும் நடுவே இரும்பு ஆணிகள் மூலம் ஒன்றிணைத்து பயன்படுத்தினோம்.

கோவில் கட்டிடம் முழுவதையும் எந்த சாந்துப்பூச்சும் இல்லாமல் அந்தக் காலத்தில் கட்டி இருக்கிறார்கள்.

எனவே நாங்களும் சாந்துப்பூச்சு இல்லாமல் கற்கள் ஒவ்வொன்றையும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டினோம்.

கோவில் கட்டப்பட்டபோது அங்கே வைக்கப்பட்டு இருந்த ஏராளமான புத்தர் சிலைகள், பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னரால் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.

மூன்றாம் பிரகாரத்தில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. அந்த சிற்பங்களையும் வழித்து எடுத்தது போல அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அவை போன்றவற்றை நாங்கள் அப்படியே விட்டு விட்டோம்.

நடன மண்டபத்தின் உள்ளே வளர்ந்து இருந்த மரங்களை அப்புறப்படுத்தினோம். சுவர்களில் வளர்ந்து இருக்கும் மரங்களை அகற்றினால் சுவர்கள் முழுவதும் இடிந்து விழுந்துவிடும் அபாயம் இருந்தது.

இதற்கிடையே, சுவர்களில் உள்ள மரங்களை அகற்ற வேண்டாம் என்றும், அங்கு வரும் பார்வையாளர்கள், கோவில் சுவர்களில் மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து இருக்கும் அதிசயக்காட்சியைப் பார்க்கட்டும் என்றும் ஐ.நா.சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு கேட்டுக்கொண்டது.

இதனால் சுவர்களில் வளர்ந்து இருக்கும் பிரமாண்ட மரங்கள் அப்படியே விட்டுவிடப்பட்டன.

அந்தக் கோவிலைச் சுற்றிலும் உள்ள இடங்களில் கெமர் ரூஜ் தீவிரவாதிகள் புதைத்து வைத்த கண்ணி வெடிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டதால் நாங்கள் உயிரைக் கையில் பிடித்தபடியும் பலத்த பாதுகாப்புடனும் சீரமைப்புப் பணிகளைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு டி.எஸ்.சூட் கூறினார்.

சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது தொல்பொருள் இலாகா முன்னாள் கண்காணிப்பாளர் டி.சத்யமூர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் அங்கே சென்று பணிகளைப் பார்வையிட்டனர்.

அப்போது டி.சத்யமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், “ஒரு குழந்தையை தாய் அன்போடு அணைத்துக் கொள்வது போல பிரமாண்ட மரங் களின் வேர்கள், கோவில் சுவரை இறுகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. கோவில் இடிந்து விழாமல் அந்த வேர்கள் பாதுகாக்கின்றன என்பது சாதகமானது என்றாலும், அந்த வேர்களை அகற்றினால் கோவில் முழுவதும் விழுந்துவிடும் என்பது பாதகமாக உள்ளது” என்றார்.

உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாத இந்த வகையான கோவிலையும், இந்தியா சார்பாக அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருப்பதையும் இப்போது அங்கே செல்பவர்கள் பார்த்து வியக்கலாம்.

கம்போடியாவில் உள்ள கோவில்களின் வியப்பான செய்திகளை எல்லாம் இதுவரை பார்த்த அதே நேரத்தில், கெமர் மன்னர்கள் காலத்தில் கம்போடியா நாடு, நாம் அனைவரும் நினைப்பதைவிட மிக உன்னதமாக இருந்தது என்பது சில ஆண்டுகளுக்கு முன் நவீன கருவிகள் மூலம் நடந்த ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.

கம்போடியா கோவில்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆய்வாளர்
வெஸ்ட் மெபோன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு சிலையுடன் ஹென்றி மார்செல் (வலது ஓரம் நிற்பவர்).

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரும் அரசு அதிகாரியுமான ஹென்றி மார்செல் என்பவர், 1905-ம் ஆண்டு கம்போடியாவில் உள்ள பிரான்ஸ் நாட்டு மியூசியப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1916-ம் ஆண்டு ஆய்வாளர் கொமெய்ல்லி என்பவர், அங்கு கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கம்போடியாவில் உள்ள கோவில்களின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஹென்றி மார்செல் நியமிக்கப்பட்டார்.

அங்குள்ள பழங்காலக் கோவில்கள் அவரை மிகவும் கவர்ந்துவிட்டன. அங்கோர் வாட், அங்கோர் தாம், பண்டிஸ்ரீ உள்பட பல கோவில்களை அவர் சீரமைத்தார்.

1938-ம் ஆண்டு ஒருமுறை பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் வழியில் இந்தியா வந்த அவர், புதுச்சேரி அருகே பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த அரிக்கமேடு என்ற இடத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற அகழ்வாய்வுகளைக் கண்டு வியந்தார்.

அவர், 1957-ம் ஆண்டு வரை கம்போடியாவில் தங்கி இருந்து கோவில்களை சீரமைத்தார். அதன் பின்னரும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல மனம் இன்றி, கம்போடியாவின் சியம் ரீப் நகரிலேயே தங்கிவிட்டார்.

1970-ம் ஆண்டு, 93-வது வயதில் மரணம் அடைந்த அவரது உடல் சியம் ரீப் நகரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தனது வாழ்வின் பெரும் பகுதியான 52 ஆண்டுகள் அவர், கம்போடியாவின் கோவில் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள்.

No comments:

Popular Posts