Tuesday 12 November 2019

தேர்தல் வரலாற்றை புரட்டிப் போட்ட டி.என்.சேஷன்

தேர்தல் வரலாற்றை புரட்டிப் போட்ட டி.என்.சேஷன்
டி.என்.சேஷன், (1932 - 2019)
டி.எ ன்.சேஷன் என்ற பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது அவரது அசாத்திய துணிச்சல். தலைமை தேர்தல் கமிஷனர் என்ற அதிகாரத்தின் சக்தி என்ன? என்பதை முதன்முதலாக அகில இந்தியாவிற்கும் அதிரடியாக உணர்த்தியவர். தேர்தல் கமிஷனராக இருந்த (1990-1996) காலகட்டத்தில் தினமும் ஊடகங்களில் பேசப்படுபவராக திகழ்ந்தார். உண்மையில் அதை அவர் விரும்பினார்.

ஆனால், 1990-ம் ஆண்டு வரையிலும் அவர் பெரிய அளவில் அறியப்படாத ஒரு ஆளுமையாக தான் இருந்தார். முதலில் அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக விரும்பி 1953-ம் ஆண்டு அதற்கான தேர்வை எழுதினார். ஆனால், பணிக்காலம் முழுவதும் குற்றவாளிகளோடு இரும்பு இதயத்தோடு உறவாடும் வேலை தேவையில்லை என முடிவெடுத்தார். 1955-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். படித்து முடித்த அவர், பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்திற்கான உயர்கல்வியையும் கற்றார். கோவையில் துணை கலெக்டர், மதராஸ் மாகாணத்தின் போக்குவரத்து துறை இயக்குனர் என்று தமிழகத்தில் பணியாற்றிய சேஷன், டெல்லியில் பல்வேறு பதவிகளில் இருந்தபோதிலும் பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் மத்திய அரசின் செயலாளராக இருந்த போது தான் ஓரளவு கவனம் பெற்றார்.

வி.பி.சிங் இவரை திட்டக்குழு உறுப்பினராக நியமித்தார். அதில் விருப்பம் இன்றி இருந்த டி.என்.சேஷன், சந்திரசேகர் ஆட்சியில் சட்டத்துறை மந்திரியாக இருந்தவரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தனக்கு நன்கு தெரிந்தவருமான சுப்பிரமணியசாமியின் பரிந்துரையால் இந்திய தேர்தல் கமிஷனராக்கப்பட்டார். அன்று முதல் சுமார் 6 ஆண்டுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் பரபரப்புக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.

டி.என்.சேஷனின் ‘பஞ்ச்’ வசனங்கள்

“நான் அரசாங்கத்தின் அங்கமல்ல”.

“நான் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்”.

“நான் யாரிடம் இருந்தும் அதிகாரத்தை பெறவில்லை. இந்திய அரசியல் சட்டம் எனக்கு அதிகாரம் தந்துள்ளது”.

“பிரதமரென்ன?, கவர்னரென்ன? ,அரசியல்வாதியாக இருந்தால் என்ன..? சட்டத்தின் முன் அனைவரும் சமம்.”

“தேர்தலை எப்படி நடத்துவது என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பேன். அரசியல்வாதிகள் தங்கள் முட்டாள்தனத்தை தூக்கி கொண்டு தூரப்போய் வெகு தொலைவில் நில்லுங்கள்...”

தேர்தலில் அதிரடி சீர்திருத்தங்கள்

இந்தியாவில் தேர்தலை சுதந்திரமாக, நேர்மையாக, பாரபட்சம் இல்லாமல் நடத்த முடியும் என்பதை அரசியல் சட்ட வழிமுறைகளை கொண்டு நிறுவியதில் தான் சேஷனின் வெற்றி அடங்கியுள்ளது.

தேர்தலில் அதீத செலவுகளை அனுமதிக்க மறுத்தது, தேர்தல் செலவு கணக்கு காட்ட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது, விடிய, விடிய நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரசாரங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் கூடாது என கறாராக நிர்ணயம் செய்தது, அரசியல் கட்சியினர் வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவதற்கு தடை போட்டது, வாக்குச்சாவடிக்கு அருகில் அரசியல் கட்சிகள் முகாம் அமைக்கக்கூடாது என உத்தரவிட்டது... என்று பலவற்றை அதிரடியாக அமல்படுத்திய வகையில் அவர் மக்களால் மிகவும் விரும்பி போற்றப்பட்டார். அதே சமயம் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமானார்.

இது மட்டுமல்ல, சேஷனின் புகழ் வானுயர பறந்ததற்கு முக்கிய காரணம் அவர் அரசியல் சட்டத்தில் தேர்தல் கமிஷனருக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு என்பதை நன்கு படித்து வைத்துக் கொண்டது தான்.

அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டின் முழு நிர்வாக அதிகாரத்தையும், போலீஸ் மற்றும் ராணுவத்தையும் தேர்தல் கமிஷன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி, அதிகாரம் செய்ய முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தார்.

குறிப்பாக உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் தேர்தல் காலங்களில் நடந்த அத்துமீறல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது தான் அவரது சாதனை. அதுவும் பீகாரில் சுமார் 4 மாத இடைவெளிவிட்டு 4 கட்டங்களாக தேர்தலை நடத்தியதோடு 4 தொகுதிகளுக்கு தேர்தலை தள்ளி வைத்தார். சுமார் 650 கம்பெனி ராணுவ படைகளை அழைத்து வந்து ரவுடிகளை, சமூகவிரோத சக்திகளை முடக்கினார்.

பஞ்சாபிலும், மத்தியபிரதேசத்திலும் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் சென்ற நேரத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்ட காரணத்தால் அதிரடியாக தேர்தலை நிறுத்தினார்.

தேர்தல் கணக்குகளை ஒப்படைக்க தவறியதால், 1,488 வேட்பாளர்களை 3 ஆண்டுகள் தகுதி இழக்க செய்தார். தவறான தகவல்கள் தந்ததற்காக 14 ஆயிரம் வேட்பாளர்களை தகுதி இழக்க வைத்தார்.

அதிகாரத்திற்கு வைக்கப்பட்ட கிடுக்கிப்பிடி

மக்களின் பாராட்டு, ஊடகங்களின் புகழ்ச்சி, சட்டம் தந்த அதிகாரம் ஆகியவற்றால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்ட சேஷனை வழிக்கு கொண்டு வருவதற்கு ராஜதந்திரத்துடன் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கிடுக்கிப்பிடி போட்டார். அதன்படி, 1993-ம் ஆண்டு தேர்தல் கமிஷனுக்கு மேலும் 2 பேரை இணை கமிஷனர்களாக எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நரசிம்மராவ் நியமித்தார். எந்த முடிவானாலும் 3 பேரும் சேர்ந்து தான் எடுக்க வேண்டும் அல்லது 3 பேரில் 2 பேர் மெஜாரிட்டியுடன் தான் முடிவு எடுக்க முடியும் என்ற சூழலை உருவாக்கினார். இதனால், சேஷன் மிகவும் கொந்தளித்து போனார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஆனால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சேஷனுக்கு கிடைத்த விளம்பரம் மற்றும் புகழ் அவருக்கு அரசியல் ஆசையை தந்தது. அவர் எந்த அரசியல் தலைமைக்கும் கட்டுப்பட்டோ, விசுவாசமாகவோ இருக்கக்கூடிய சுபாவம் கொண்டவரல்ல என்பதால் அவரால் எந்த கட்சியிலும் சேர முடியவில்லை. அ.தி.மு.க.வில் சேரும் விருப்பத்துடன், தனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கோரி அவர் ஜெயலலிதாவை சந்தித்ததாக அன்றைய ஊடகங்களில் செய்தி அடிபட்டது. முன்னதாக அவர் ஒரு முறை அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டிருந்தார் என்பதையும் கடந்து அவருக்கு அரசியலில் ஜெயலலிதாவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

கடந்த 1997-ம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்கு சிவசேனாவை தவிர வேறு எந்த கட்சியும் ஆதரவு தரவில்லை. ஆகவே மிகக்குறைவான வாக்குகள் பெற்று பரிதாபத்திற்குரிய தோல்வியை பெற்றார். 1999-ஆண்டு காந்தி நகர் தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து போட்டியிட்டார். அதிலும் படுதோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு (2018) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், டி.என்.சேஷனை நேரில் சந்தித்து அரசியல் ஆலோசனை பெற சென்றபோது, “எனக்கு மட்டும் உடல்நலன் சரியாக இருந்தால் உன் கட்சியில் சேருவேன்” என்று கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

சேஷனின் ரசனைகள்

கர்நாடக சங்கீதத்தை கேட்பதில் அவருக்கு அலாதி ஆர்வம் இருந்தது. அதிலும் தெய்வீக பாடல்களை விரும்பி கேட்டவண்ணம் இருப்பார்.

காஞ்சி சங்கராச்சாரியாரிடமும், புட்டபர்த்தி சாய்பாபாவிடமும் தீவிர பக்தி கொண்டிருந்தார். காஞ்சி பரமாச்சாரியார் மறைந்த போது அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

பிறந்து வளர்ந்தது பாலக்காடு என்பதால் அவருக்கு பாலக்காட்டு பிராமணர் சமையல் அத்துபடியாக இருந்தது. அதை பெருமையாகவும் சொல்வார்.

சேஷனுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கடைசிக்காலத்தில் தன் மனைவி ஜெயலட்சுமியுடன் சென்னைக்கு வெளியே ஒரு முதியோர் இல்லத்தில் சிலகாலம் தங்கினார். சென்ற வருடம் அவரது மனைவி இறந்துவிட்டார். சேஷன் அவ்வப்போது அடையாறில் உள்ள தன் வீட்டிற்கும் வந்து விடுவார்.

No comments:

Popular Posts