Saturday, 16 November 2019

குழந்தைகள் பாதுகாப்பு பிரதான கடமை

குழந்தைகள் பாதுகாப்பு பிரதான கடமை

முனைவர். செ. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்,

காவல்துறை தலைமை இயக்குனர்

ம னிதனின் தேவைகளில் உணவு, குடிநீர், இவைகளுக்கு அடுத்த பெரிய தேவை, பாதுகாப்பு என்றார் உளவியல் அறிஞர், ஆபிரகாம் மேஸ்லோ. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இவரது தேவை படிக்கட்டுகள் எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறது.

பெரியவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவேதான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பொறுப்பை பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும், கவனக்குறைவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது நடுக்காட்டுப்பட்டி நிகழ்வு நமக்கு உணர்த்தியது. நாடே சோகத்தில் ஆழ்ந்த நிலையும், தீபாவளி கொண்டாட முடியாத நிலையும் இதனால் ஏற்பட்டது.பெற்றோரின் பொதுவான கவனக்குறைவு நமக்குத் தெரியாதது அல்ல. கிராம திருவிழாக்களில் குழந்தைகளை தவறவிட்டு விடுவார்கள். காவல் கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன பல குழந்தைகளை கண்டுபிடித்து திருப்பி ஒப்படைக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். ஓர் ஊரில் ஒரு குழந்தையை மகளிர் காவலர் தாயாரிடம் ஒப்படைத்தபோது அந்த குழந்தையை, ‘எங்கே தொலைந்து போனாய்?’ எனக் கூறி சரமாரியாக தாக்கினார் அந்த குழந்தையின் தாய். ஆனால் எல்லா பெற்றோரும் அப்படியல்ல, கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழும் பெற்றோர்தான் அதிகம். ஏன் சில பெற்றோர்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள்?

பெற்றோரை குறை சொல்ல முடியாது, அவர்களின் வாழ்க்கை முறை அப்படி! இது ஒரு கலாசார பிரச்சினை எனலாம்.இப்படிதான் வளர்ந்தோம், இதுதான் எனக்குத் தெரியும், எனவே இப்படிதான் நடந்து கொள்வோம் என்ற வகையில் பெற்றோரின் நடவடிக்கை இருக்கிறது. படித்தவர்களும் பெரியதாக மாறவில்லை. தலைக்கவசம் அணியச் சொல்கிறோம், எத்தனை பேர் அணிகிறார்கள்? இருக்கை பெல்ட் அணிய வற்புறுத்துகிறோம், எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள்?

கட்டுபாடில்லாத சுதந்திர வாழ்க்கை வாழ பழக்கமாகிவிட்டோம். கடமைகளை மறந்து உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்கிறோம். நமது பழக்கங்களும் அப்படியே இருக்கின்றன. பழக்கங்கள் சிலந்தி வலைகள், ஆனால் காலப்போக்கில் கம்பி வலை என்பது ஸ்பெயின் நாட்டு பழமொழி. கம்பி வலைகளான அலட்சிய பழக்கங்களை அறுத்தெறிந்து நல்ல பாதுகாப்பு பழக்கங்களை நாம் பழக வேண்டும். அதில் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியமான பழக்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.ஆழ்துளை கிணறு மீட்பு நடவடிக்கையை நேரலையில் பெற்றோர் பார்த்த வண்ணம் இருந்தபோதே, நீர் தொட்டியில் விழுந்து ஒரு குழந்தை இறந்திருக்கிறது. இதுபோலத்தான் மாடி வீட்டிலிருந்து குழந்தை விழுவதும், இருசக்கர வாகனத்திலிருந்து குழந்தைகள் தவறி விழுவதும்.முன் காலங்களில் வீடுகளில், பெரிய அளவில் சமையல் நடக்கும். கொதிக்கும் பானையில் விழுந்து உயிர் போன குழந்தைகளும் உண்டு, பிழைத்துக் கொண்ட குழந்தைகளின் தோல் கருகி, உடல் உருக்குலைந்ததைப் பார்க்க முடியும். அது அந்த நபரின் தலைவிதி என்றே நம்பினார்கள். இன்று சிறிய குடும்பங்கள், பாதுகாப்பான சமையல் எரிவாயு அடுப்புகள், அதனால் அது போன்ற பரிதாப விபத்துகள் குறைந்தன. ஆனால் பாதாள மரண கிணறுகள் இன்று தோன்றிவிட்டன.நிலத்தடி நீர் குறைந்ததால் கண்மூடித்தனமாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுவிட்டன. இதில் பல கிணறுகள் மூடியும்,சில மூடாமலும், சில சரியாக மூடாமலும் இருந்தன. தமிழ்நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் நடந்த 16 விபத்துகளில் இரண்டு குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. இந்திய அளவில் இதுவரை 59 நிகழ்வுகள் நடந்துள்ளன. இனியும் இது போன்ற சோக நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மிக நேர்த்தியாக எல்லா ஆழ்துளை கிணறுகளையும் மூடிய தமிழக அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அதை ஒரு புனிதப்போராகவே செய்து முடித்தனர் அரசு அதிகாரிகள்.குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தவுடன் அங்கு முதலில் வருபவர் தீயணைப்புத் துறையினர்தான். சமீபத்தில் சங்கரன்கோவிலில் நடந்த ஒரு சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் வடிவமைத்த கருவியின் உதவியுடன் துளையில் விழுந்த சிறுவனை காப்பாற்றி விட்டனர். அந்த ‘மணிகண்டன்’ கருவிகளும், தீயணைப்பு துறையில் வாங்கப்பட்டது. ஆனால் நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் அக்கருவியை பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆழ்துளை வெறும் ஆறு அங்குல விட்டம் மட்டுமே கொண்டது. ஆறு அங்குல விட்டம் கொண்ட ஒரு துளையில் குழந்தை விழுமா என்று நாம் ஆச்சரியப்படக் கூடும். ஆனால் விழுந்திருக்கிறது. அப்படியும் ஒரு குறுகலான கருவியை மணிகண்டன் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சில மணி நேரத்தில் தயாரித்திருக்கிறார்.

இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் இந்த பணியில் கைத்தேர்ந்தவர்கள்தான் என்றாலும் சிறு குழந்தை வெகு ஆழத்தில் இறுக்கமாக மாட்டிக்கொண்டதால் உயிருடன் மீட்க முடியாமல் போனது. இணை கிணற்றின் துளை வழியாக உள்ளே சென்று சிறுவனை மீட்பது ஆபத்தானது. இருந்தும் 16 தீயணைப்பு வீரர்கள் அந்த பணியை செய்ய முன்வந்தார்கள். உயிரை விட கடமை பெரியது என்பது அவர்களது கொள்கை. ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பது தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நோக்கம்; அதை சரியாகவே நிரூபித்தனர் அந்த மாவீரர்கள்.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு வாகன விபத்துகளில் ஒரு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலகின் 2 சதவீதம் வாகனங்கள் மட்டும் இருக்கும் இந்தியாவில் உலகின் 11 சதவீதம் உயிரிழப்புகள் நடக்கிறது. அந்த அளவுக்கு கவனக்குறைவு மற்றும் அலட்சியம் நம்மிடம் உண்டு. தங்களது உயிரை பாதுகாக்கத் தவறியவர்களாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பில் எப்படி கவனம் செலுத்தப் போகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

குழந்தைகளை விட பெரிய செல்வம் வேறில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு விபத்துகள் எப்படியும் நேரலாம் என்பதை பெற்றோர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, எப்படியெல்லாம் அதை தடுக்க முடியுமோ அப்படியெல்லாம் தடுக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோரின் கவனம் அதிகம் தேவை.

2001-ம் ஆண்டு, சென்னை மண்ணடியில் 9 அங்குல ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தமிழ்மணி என்ற மூன்று வயது சிறுவனை மீட்கும் பணி, அப்போது இணை ஆணையராக இருந்த எனது (செ. சைலேந்திரபாபு) தலைமையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Popular Posts