Tuesday, 12 November 2019

வானொலியில் தன் குரலை கேட்டு வியந்த மகாத்மா காந்தி

வானொலியில் தன் குரலை கேட்டு வியந்த மகாத்மா காந்தி

முனைவர் இளசை சுந்தரம், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்.

இ ன்று (நவம்பர் 12-ந் தேதி) தேசிய ஒலிபரப்பு தினம்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையான தருணத்தில் பாகிஸ்தானில் இருந்து குருசேத்திராவில் முகாமிட்டிருந்த அகதிகளுக்காக மகாத்மா காந்தி தனது செய்தியை சொல்ல 1947 நவம்பர் மாதம் 12-ந் தேதி டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தார். அந்த நாளையே அகில இந்திய வானொலி தேசிய ஒலிபரப்பு நாளாக கொண்டாடி வருகிறது.

அந்த காலத்தில் வானொலி வந்த புதிது. பெரும்பாலான மக்கள் வானொலி பெட்டியை பார்த்ததே கிடையாது. வானொலி பெட்டியை பார்ப்பதற்கே பலர் ஆர்வமாக இருக்கும்போது வானொலியில் தன் குரலை கேட்டால் எவ்வளவு பரவசமாக இருக்கும். சுதந்திரத்திற்கு பின் காந்தியினுடைய உரையினை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்ப தொடங்கிய காலம். காந்தி அந்த உரையை கேட்பதற்கு எந்த முயற்சியும் செய்யவே இல்லை. ஒரு தடவை நேருவின் செயலாளர் எம்.ஓ.மத்தாய் இந்திரா காந்தியோடு காந்தியை சந்திக்க வந்தார். டிரான்சிஸ்டர் வந்த புதிது. அப்போது அவர் ஒரு டிரான்சிஸ்டரை கையில் வைத்துக்கொண்டு அதை காந்தியிடம் காட்டினார். அதன் பொத்தானை அழுத்தி அதில் ஒலிபரப்பாகி கொண்டிருந்த காந்தியின் உரையை போட்டு காட்டினார். “ஓஹோ இது என்னுடைய குரலா” என காந்தி அவரது உரையை முதன் முதலாக டிரான்சிஸ்டரில் கேட்டு வியப்பு தெரிவித்தார்.

மகாத்மா காந்தியடிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு காலமானார் என்ற செய்தியை வானொலி ஒலிபரப்ப வேண்டும். முதல் அறிக்கை ஒலிபரப்பப்பட்ட சில நிமிடங்களில் எச்சரிக்கையோடு அடுத்த அறிக்கை அவசர அவசரமாக ஒலிபரப்பப்பட்டது. மகாத்மாவை சுட்டவர் ஓர் இஸ்லாமியர் என்ற நினைப்பில் மதக்கலவரம் ஏற்பட்டுவிடலாம். அதற்காக மகாத்மாவைச் சுட்டவர் ஓர் இந்து என்ற தகவல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. அதனால் பெருங்கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அன்னியர் ஆட்சியில் நம் நாட்டில் ஆறு வானொலி நிலையங்கள் இருந்தன. நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை இந்த ஆறு வானொலி நிலையங்கள் அறிவித்தன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, சென்னை, திருச்சி ஆகிய நிலையங்கள் அவை. இவ்வாறினுள் தமிழ்நாட்டில் இரண்டு நிலையங்கள் அமைந்தது பெருமைக்குரியது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 1939-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதியன்று தொடங்கப்பட்டது.

வானொலி என்பது தகவல் தரவும், கல்வி புகட்டவும், உளம் கனிய உவகை நிகழ்ச்சிகளை அளிக்கவும் முனைவதேயாகும். எனவே வானொலி பொதுமக்களின் நண்பன். அவர்களை சிந்திக்க வைப்பவன். அவர்களிடத்திலே ஓர் அசைவை உண்டாக்குபவன்.

வானொலி என்பது நம்முடைய பண்டைய மரபு ஒன்றின் தொடர் செயலே. அதாவது வாய்வழி ஒரு தகவலை மற்றவருக்கு எடுத்துச்செல்லும் பழைய பக்கத்தில் தொடர் மரபையே நாம் வானொலியில் இன்று பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.

வேறு வேறு மொழிகளும், சமயங்களும் பிணைந்துள்ள இந்தியாவின் ஒருமைப்பாட்டை வெளிநாட்டவருக்கு உணர்த்தவும் இந்த ஒலிபரப்பு உறுதுணை செய்கிறது. ஒவ்வொரு மொழியிலும் செய்தி, வர்ணனை, இந்திய செய்தித்தாள்களின் ஒரு சுற்றுப்பார்வை, சஞ்சிகை நிகழ்ச்சிகள், செய்தி மலர்கள், பேச்சுகள், உரையாடல்கள், நேர்முக உரையாடல்கள், சொற்சித்திரங்கள், இசை ஆகியவை ஒலிபரப்புகளில் அடங்குகின்றன.

நாடகம், சொற்சித்திரம், இசை, இளைஞர் நிகழ்ச்சி, சிறுவர் சேர்ந்திசை, புதுமைப் படைப்புகள் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த நிகழ்ச்சிகளை அமைக்கும் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அகில இந்திய வானொலி 1977-ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களையொட்டி அரசியல் கட்சியாளர்கள் தங்கள் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்க கட்சியாளர்களை வரவேற்று செயல்பட செய்ததன் மூலம் ஒரு வரலாற்றை உண்டாக்கினர். ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தலின் போதும் போட்டியிடும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியல் கட்சியாளர்கள் பேச அழைக்கப்படுகின்றனர். ஒரு நிலையத்தில் பேசுவது எல்லா நிலையங்களிலும் அஞ்சல் செய்யப்படும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் வானொலி நிலையத்தின் பெயரை அறிவித்து பின் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவது, நிகழ்ச்சியின் பங்கேற்போரின் பெயர் விவரத்தை நிகழ்ச்சி தொடங்கும் முன்பும், நிகழ்ச்சி நிறைவுற்ற பின்பும் அறிவிப்பது, வேறு பிற சிறப்பு அறிவிப்புகளான வானிலை அறிக்கை போன்றவற்றை அறிவிப்பது ஒரு அறிவிப் பாளரின் பணிகள் ஆகும்.

செய்தி படிப்பவருக்கு இன்றியமையாத பண்புகளாக சிலவற்றை குறிப்பிடலாம். தாம் படிக்கும் பதினைந்து நிமிட செய்தி ஒலிபரப்பில் படிக்கும் வேகம் ஒரே கதியில் (வேகத்தில்) இருக்க வேண்டும். முதலில் ஒரு செய்தியை வேகமாக படிப்பது, பின்னர் இன்னொன்றை அவ்வளவு வேகமில்லாமல் படிப்பது போன்ற வேறுபாடு இருக்கக்கூடாது. படிக்கும்போது வேடிக்கை, ஏளனம், பயங்கரம், சோகம் போன்ற எவ்வித உணர்ச்சிக்கும் இடமளிக்காமல் படிக்க வேண்டும். அப்படி இடமளித்தால் அது செய்தியறிக்கையை படிப்பதாகாது. நடிப்பதாகிவிடும். செய்திகளை வேறுபடுத்த ஒரு செய்தியில் இருந்து மறுசெய்திக்கு வரும்போது சிறிது இடைவெளி கொடுத்து தொடங்க வேண்டும்.

செய்தி வாசிப்பவரின் குரலில் கண்ணியம் இருக்க வேண்டும். படிக்கும் செய்தியறிக்கையை முதலில் ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குரலில் ஒருவித உறுதியும், நம்பிக்கையும் படிக்கும்போது வெளிப்படும்.

இப்போதெல்லாம் வானொலி நாடகங்கள் முன்கூட்டியே ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகிறது. ஆனால் முன்பெல்லாம் வானொலி அரங்கத்தில் நடத்தப்படும்போதே ஒலிபரப்பாகும். அதனால் கதைக்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறிப்புகள் ஒலித்தகவை வைத்துக்கொண்டு இயக்க தயாராக இருப்பார். குழந்தை அழும் ஒலி, நாய் குரைக்கும் ஒலி, ஆடு, மாடு பறவைகள் ஒலி, புயல் சத்தம் போன்றவை தயாராக வைக்கப்பட்டிருந்தது. அந்த நாடகத்தில் பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் ஒலி ஒலிபரப்பப்பட்டது. ஆகா! குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது என்று ஒரு பெண் வசனம் பேசியதும் ஒலிக்குறிப்பை இயக்குபவர் குழந்தை அழும் ஒலியை பட்டனில் அழுத்த வேண்டும். ஆனால் அவர் தவறுதலாக நாய் குரைக்கும் ஒலியை அமுக்கிவிட்டார். வானொலி கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்குள் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தவர் “குழந்தை பிறந்த வீட்டில் நாயை விட்டது யாரு?” என்று பேசி சமாளித்தார். புரிந்து கொண்ட ஒலிக்குறிப்பாளர் குழந்தை அழும் ஒலியை ஒலிபரப்பினார். இப்படி பல மகத்துவம் நிறைந்த வானொலி நாட்டின் பொக்கிஷமாகும்.

No comments:

Popular Posts