Tuesday, 12 November 2019

தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும்

தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும்

வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி

ப ல்வேறு கலாசாரங்கள், மொழிகளைக் கொண்டிருந்தாலும் ஒரே தேசமாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது. அசாதாரணமான இது, நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும்.

இந்தியாவில் நிலைத்திருக்கும் பல மொழிகளும், நமது தேசத்துக்கு தனித்துவத்தை அளிக்கின்றன. ஆனாலும் நாம் நமது சொந்த மொழிகளை பாதுகாப்பதற்காக போதிய அளவில் செயல்படவில்லை என்பது எனக்கு ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.

கல்வியை அளிக்கும் மொழிகள் பற்றிய கொள்கை முடிவெடுக்கும்போது, குறிப்பாக தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி அளிப்பதற்கான கொள்கையை பின்பற்றுவதில் அரசு இரண்டு மடங்கு கவனமுடன் செயல்பட வேண்டும். படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் தாய் மொழிதான் சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தரும்.

அறிவாற்றலையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் மொழி ஒரு கருவியாக பயன்படுகிறது. கலாசாரம், அறிவியல் அறிவு, உலகப் பார்வை போன்றவற்றை தலைமுறைகளுக்கு இடையே கொண்டு செல்லும் வாகனமாக மொழி அமைந்துள்ளது. கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத நூலாக மொழி முக்கிய இடம் பிடிக்கிறது.

மனிதப் பரிணாம வளர்ச்சியுடன் மொழியும் பரிணாமம் பெற்று வருகிறது. ஒரு சமுதாயமாக நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கும், கலாசாரம், வரலாற்றிலும் நமது மொழி முக்கியம் இடம் பிடிக்கிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தில் உட்புகுந்து நமது நாகரிகத்தின் அடிப்படையை அமைத்துத் தருவது மொழிதான்.

தனிநபருக்கான, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கான, பாரம்பரியத்துக்கான அடையாளங்களை வாழச் செய்வது மொழியே. மக்களிடையே உள்ள இணைப்பை உருவாக்கவும், உறுதிப்படுத்தவும் அதுவே முக்கிய பணி ஆற்றுகிறது.

இந்தியாவில் 19 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் வட்டார மொழிகள், தாய் மொழியாக பேசப்படுகின்றன. 121 மொழிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பேசப்படுகின்றன.

சில மொழிகள் அப்படியே நிலையாக இருந்துவிடுவதில்லை. அவை மாற்றம் பெறுவதோடு, சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்றபடி பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. சில மொழிகள் வளர்ந்து, சுருங்கி, மாற்றம் பெற்று, ஒருங்கிணைந்து, இறுதியில் மரணிக்கின்றன.

நமது நாட்டில் 196 மொழிகள் அழிந்து வரும் மொழிகளாக கணக்கிடப்பட்டுள்ளன. இது மனதை மிகவும் வலிக்கச் செய்வதாக உள்ளது. இந்த எண்ணிக்கை இனி உயரக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மொழியின் ஒளி வீசாவிட்டால், நாம் இருண்ட உலகில் தடுமாறிக்கொண்டிருப்போம் என்று கவிஞர் ஒருவர் கூறியுள்ளார். நமது மொழி பாதுகாக்கப்பட வேண்டுமானால் அவை தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒரே வழியாக உள்ளது. நமது மொழியை தவிர்ப்போமானால், நமது அடையாளத்தின் மிகப் பெரிய பங்கை நாம் இழக்க நேரிடும்.

மொழி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, பல்நோக்கு கூர்களோடு அணுகப்பட வேண்டும். நமது பள்ளிகளில் தாய்மொழியையே பயிற்று மொழியாக வைக்க வேண்டும். தொடக்கக் கல்வியில் தாய்மொழி கட்டாயம் இருக்க வேண்டும். கல்வியின் ஆரம்ப நிலையில் தாய் மொழியை கற்றுத் தருவது, அந்தக் குழந்தையின் மன வளர்ச்சிக்கும் எண்ணங்களுக்கும், உத்வேகம் அளிப்பதாகவும், குழந்தைகள் மேலும் படைப்பாற்றலுடன் வளர உதவுவதாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்த நவீன உலகத்தில் ஆங்கில வழிக் கல்விதான் அதிக வேலை வாய்ப்புகளை அளிப்பதாக தவறான புரிந்துகொள்ளுதல் நிலவுகிறது. அது உண்மையல்ல. ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, அமெரிக்கா என ஆங்கிலம் பேசும் நாடுகளை கைவிரல்களால் எண்ணிவிடலாம். சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகள், ஆங்கிலக் கல்வி இல்லாமலேயே மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.

மற்ற சர்வதேச மொழியை கற்று பயன்படுத்திக் கொள்வது போன்றதுதான் ஆங்கிலமும் உள்ளது. தாய்மொழியின் இடத்தைப் பிடித்துவிடும் அளவுக்கு ஆங்கிலம் நுழைய இடமளித்துவிடக் கூடாது. தாய்மொழியில் வலுவான அறிவைப் பெற்ற பிறகு, வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் ஆங்கிலத்தை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

தொடக்கக் கல்வியில் கற்பித்தல் மொழியாக தாய்மொழியை கொண்டு வரும் முயற்சியோடு நின்றுவிடக் கூடாது. நிர்வாகம், வங்கியியல், நீதி பரிபாலனை ஆகியவற்றிலும் தாய்மொழியை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நம் குழந்தைகளுக்கு பல மொழிகளைச் சொல்லித்தரக் கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

இலக்கியம், அறிவியலை உலகளாவிய அளவில் கற்க மொழிகள் உதவும். மனிதவளத்தை மேம்படுத்தி இன்றைய பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெறுவது இந்தியாவின் தற்போதைய தேவையாக உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை பார்க்கும்போது, உள்ளூர் மொழிகள் மற்றும் தாய்மொழி மூலம் கற்றலை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வீடு, சமுதாயம், கூட்டம், நிர்வாகம் ஆகிய இடங்களில் சொந்த மொழிகளையே மக்கள் இனி பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை.

கவிதை, கதைகள், பெருங்கதைகள், நாடகங்களை இந்திய மொழிகளில் எழுதுங்கள். இந்த மொழிகளில் பேசி, எழுதி, தொடர்புகொள்பவர்களுக்கு பெருமையையும், கண்ணியத்தையும் அளிக்க வேண்டும்.

இந்திய மொழியிலான பதிப்புகள், பத்திரிகைகள், குழந்தைகளுக்கான புத்தகங்களை ஊக்குவிக்க வேண்டும். வட்டார மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களுக்கு போதுமான அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உள்நாட்டு வளர்ச்சிக்கு மொழி ஒரு கிரியாஊக்கியாக இருக்க வேண்டும். தேசிய வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகவும், குறியீடாகவும் மொழி அமைந்துள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றில் உறுப்பினர்கள் பேசலாம் என்று டெல்லி மேல்சபையில் விதி வகுக்கப்பட்டுள்ளது. 6 வட்டார மொழிகளில் தீர்ப்பை வெளியிடுவதாக சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் முடிவெடுத்துள்ளது. மொழித் தடையை தகர்க்க இது உதவும்.

வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் வேறு 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய நிதித்துறை முடிவெடுத்துள்ளது. மாநில ஆட்சி மொழிகளில் ரெயில்வே, தபால்துறை தங்களின் தேர்வை நடத்துகின்றன.

இதுபோன்ற தைரியமான முடிவுகள், நமது மொழிகளை பாதுகாப்பதோடு வளர்க்கவும் செய்யும். உலகத்தில் இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். 35 வயதுக்கும் கீழானோரின் எண்ணிக்கை இங்கு 65 சதவீதமாகும். பேச்சு வழக்கில் தாய்மொழி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். மொழியை நேசிக்க குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அவசரமாக இதைச் செய்யாவிட்டால், நமது தனிச்சிறப்புடன் கூடிய கலாசாரத்தை பாதுகாக்க முடியாமல் போய்விடும். பின்னாளில் வருந்தி பயனில்லை. ஆத்மாவின் வெளிப்பாடுதான் தாய்மொழி.

No comments:

Popular Posts