Monday 16 September 2019

குழந்தைகளுக்கு தேர்வு வேண்டுமா?

குழந்தைகளுக்கு தேர்வு வேண்டுமா?

பிரின்ஸ் கஜேந்திரபாபு,

பொதுச்செயலாளர்,

பொதுபள்ளிகளுக்கான மாநிலமேடை

க ல்வி பரவலாக்குவதில் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. பள்ளிக்கல்வி பரவலாக்கப்பட்டு அனைவரும் உயர் கல்வி செல்லும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல படி நிலைகளை தாண்டி வந்துள்ளோம். தொடக்கத்தில் முதல் வகுப்பு முதலே தேர்வு இருந்த காலம் உண்டு. எட்டாம் வகுப்பு முடிவில் ஒரு பொது தேர்வு என்பது நீண்ட காலம் நடைமுறையில் இருந்தது. இத்தகைய தேர்வுகளின் சாதக பாதகங்களை பரிசீலித்து தான் கல்வி உரிமைச் சட்டம் இயற்றும் போது 8-வது வரை எந்த மாணவரையும் தேர்ச்சியில்லை என்று கூறி அதே வகுப்பில் தங்க வைக்கக்கூடாது என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாகவும் இதை அறிவித்தது.

பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அதை மாற்றி அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில், பிளஸ்-2 பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 16-ல் திருத்தம் கொண்டு வந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தவும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தவும் அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் நிறுத்தவும் வழி செய்கிறது. அதே பிரிவில் மாநில அரசு விரும்பினால் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பவும் வழி ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு 5 - 8 வகுப்பிற்கு தேர்வு நடத்தவும் முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களை அதே வகுப்பில் நிறுத்தவும் வேண்டாம் என்று அறிவிக்கும் அரசாணை வெளியிட்டுள்ளது.

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேர்வு என்பது என்றுமே உளவியல் ரீதியான பல தாக்கங்களை ஏற்படுத்தும். தேர்விற்காக பயந்து மாணவர்கள் படிப்பார்கள் என்பது ஏற்க முடியாத வாதம். வெற்றி தோல்விகளை பற்றிய புரிதல் இல்லாத வயது. ‘நீ பாஸ்’ அல்லது ‘நீ பெயில்’ என்ற முத்திரை குத்தப்பட்டு வந்து தான் சிக்கலை உண்டாக்குகிறது. மாணவர் தானாக பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறவோ அல்லது பெற்றோர் புரிதல் இல்லாமல் இதற்கு மேல் படிப்பு வரவில்லை என்ற முடிவிற்கு சென்று குழந்தைகளை நிறுத்திவிடவோ வாய்ப்புள்ளது.

ஒரு தேர்வு மூலம் ஒரு மாணவர் கற்றல் திறன் வெளிப்பாட்டை மதிப்பிட்டு விட முடியாது. தேர்வு என்ற அச்சத்தோடு தேர்வு கூடத்திற்கு நுழையும் குழந்தை அறிந்ததைக் கூட சில நேரத்தில் எழுதாமல் தயங்கி அமர்ந்திருக்கும். குழந்தை உளவியலும், சமூக உளவியலும் சரியாக உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது?

கல்வி உரிமைச் சட்டம் கட்டணமில்லா கல்வி என்கிறது. அவ்வாறு இருக்கும் போது தேர்வுக் கட்டணம் என்பது எவ்வாறு நியாயம். கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 30 வாரியத் தேர்வில் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அவசியம் இல்லை என்கிறது. அவ்வாறு இருக்க பொதுத்தேர்வு எவ்வாறு நடத்த இயலும். இவற்றை விளக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது.

கற்றல் கற்பித்தல் பணி மட்டுமே ஆசிரியர்களுக்கு தந்து விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட ஆசிரியர் பணி இடங்களை தொடக்கப்பள்ளிகளில் உருவாக்கி சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கி தருவது தான் கல்வி தரத்தை உயர்த்தும். தேர்வு என்பது வடிகட்டி வெளியேற்றவே வழி வகுக்கும்.

No comments:

Popular Posts