Thursday 3 January 2019

பிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...!

பிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...! முனைவர் சவுந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. “து ணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாவது, பிளாஸ்டிக் என்பது அழகானது, விட்டு எறிந்தால் விஷமாவது, ஆகவே! தாங்கள் பாத்திரங்கள் கொண்டுவந்து பார்சல்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்’ என்று எழுதிவைத்து திருநெல்வேலியில் உள்ள உணவகங்கள் புத்தாண்டின் முதல் நாளிலேயே பிளாஸ்டிக் எதிர்ப்புக்கு எதிரான தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. கால் நூற்றாண்டு காலம் தமிழகமெங்கும் ஆக்கிரமித்து வந்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்த நிலையில் எல்லா இடங்களிலும் மாற்றத்தைக் காணமுடிந்தது. பழைய செய்தித்தாள்களைக் கொண்டு காகிதப் பைகள் தயாரிக்கும் பணியை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாசலில் பத்து ரூபாய்க்கு துணிப்பைகள் கிடைக் கின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகள்கூடக் காகிதப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாற்றுரு பெற்றன. காபி விற்கும் தேநீர் கடைகளில் கண்ணாடிக் குவளைகளைத் தவிர்த்து சில்வர் பித்தளை டபாரா டம்ளர்களை அதிகமாய் காண முடிந்தது. பார்சல் காபி வாங்கிச் செல்வோருக்காக கடையின் முன்பகுதியில் தூக்குச்சட்டிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. லாலா கடைகளில் பனையோலைப் பெட்டிகளில் இனிப்பும் பிறபண்டங்களும் தரப்படுகின்றன. திருநெல்வேலி அல்வாவை வாழை இலையில் வைத்து காகிதத்தில் கட்டிவிற்கின்றனர். கருப்பட்டியும், மண்டை வெல்லமும் பனையோலைப் பெட்டிகளில் நிரப்பித் தரப்படுகின்றன. பூக்கடைகளில் வாழையிலைகளிலும் தாமரை இலைகளிலும் பூக்கள் கட்டித் தரப்படுகின்றன. துணிக்கடைகளில் காக்கிநிறக் காகிதப் பைகளும், துணிப்பைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. உட்புறம் மெழுகு பூசப்பட்ட தேநீர்க் குவளைகளுக்குப் பதில் சிறு மண் குவளைகளைச் சில தேநீர்க்கடைகள் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. பிளாஸ்டிக் தட்டுகளில் உணவுப்பொருட்களை வைத்து தரும் கையேந்தி பவன் கடைகள் பாக்குத் தட்டுகளுக்கு மாறியுள்ளன. இளநீர்க் கடைகளில் உறுஞ்சு குழல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சில்வர் செம்புகளில் ஊற்றி விற்கிறார்கள். சாத்தூர் எண்ணெய்க் கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மண் பானையில் எண்ணெய் விற்கிறார்கள், பிளாஸ்டிக் டின்களுக்குப் பதிலாக தகர டின்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்ட தோசைமாவு மண்பானைகளில் வைத்து பாத்திரங்களில் விற்கப்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் துணிப்பை வைத்திருப்பதைக் காணமுடிந்தது. வீடுகளில் பால் பாக்கெட்டுகள் போட வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டிகளுக்குப் பதிலாகத் தாம்பூலம் போட்டு தரப்பட்ட துணிப்பைகளைக் காண முடிந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் தடை, முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை மேற்பார்வை செய்ய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கண்காணிக்கப் படுகின்றன. எல்லாம் பிளாஸ்டிக் மயம் என்று ஆனதன் விளைவை இந்த உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அரசு நினைத்தால் மட்டும் அவற்றை ஒழித்துவிட முடியுமா? முப்பதாண்டுகளுக்கு முன்னால் பிளாஸ்டிக் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தோமே! நம் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அன்று பல்துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்கள் இல்லை. எடுப்புச் சாப்பாடு கொண்டு செல்ல, காபி வாங்க, கொதிக்கும் தேநீர் வாங்க, பாலிதீன் கவர்கள் இல்லை. கடைக்குக் கொண்டு செல்வதற்கென்றே எல்லோர் கைகளிலும் மஞ்சள்பைகள் இருந்தன. கரந்தபால் எந்த பிளாஸ்டிக் பையிலும் அடைக்கப்படாமல் அடுத்த ஒருமணி நேரத்தில் காபியாக டீயாக நம் வயிற்றுக்குள் போனது. அந்த நாட்களில் கண்களைக் கவரும் மால்கள் இல்லை, எதை வாங்க வேண்டுமென்றாலும் பெட்டிக் கடைகளில் தாம் நாம் நின்றிருந்தோம். முந்தைய நாளின் செய்தித்தாள்களில் எல்லாப் பலசரக்குப் பொருட்களும் பொதிந்து விற்கப்பட்டன. மேலே தொங்கிய சணல் கயிறு அப்பொருட்களைக் கூம்புப் பொட்டனமாக்கின. அன்று சர்க்கரைபயன்பாடு இந்த அளவு இல்லை, சர்க்கரை நோயும் இல்லை. ஓலைப் பெட்டிகளில் உடன்குடிக் கருப்பட்டிகள் மாநிலம் முழுக்கக் கிடைத்தது. பாக்கெட் மாவுகள் இல்லவே இல்லை. அன்றே சமைத்து அன்றே சாப்பிட்டதால் குளிர்சாதனப் பெட்டிகள் தேவையாயிருக்கவில்லை. பிளாஸ்டிக் பாய்கள் அன்று இல்லை, பத்தமடைப் பாய் விரித்து கருப்புநிற போர்வை போர்த்தி அன்று நம்மால் நிம்மதியாய் தூங்க முடிந்தது. தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்டதால் பிளாஸ்டிக் இலைகளுக்கு அன்று வேலை இல்லை. இலவம்பஞ்சு மெத்தை இருந்ததால் செயற்கைப் பஞ்சு மெத்தைகள் அன்று இல்லை. பிரம்பு நாற்காலிகளும் தேக்கு ஊஞ்சல்கள் இருந்ததால் பிளாஸ்டிக் சேர்களுக்குத் தேவையிருந்ததில்லை. பனையோலை வேய்ந்த வீடு, பனங்கைப்பரண், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனையோலை விசிறி என்று நம்மால் மண்சார்ந்து வாழமுடிந்தது. இளநீர்த்துளிகள் சட்டையில் சிந்தாமல் குடிக்கத் தெரிந்ததால் ஸ்ட்ராக்களுக்கு அவசியம் இல்லாத காலம் அது. மரப்பாச்சி பொம்மைகளைக் குழந்தைகளுக்குத் தந்த நாம் இன்று அபாயமான பிளாஸ்டிக் பொம்மைகளை விளையாடத் தந்துள்ளோம். ஓடும் நதிநீரை அள்ளிப்பருகினோம், அதனால் பிளாஸ்டிக் கேன் தண்ணீருக்கு அவசியம் இல்லை, நீர் நிலைகள் காக்கப்பட்டதால் வாட்டர் பாட்டில்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் அவசியம் இல்லை. மையூற்று பேனாக்களை நாம் பயன்படுத்தியதால் பயன்படுத்திவிட்டுத் தூர எறியும் பேனாக்களால் பாதிப்பில்லை. மஞ்சள் பைக்கு மாறிய நெஞ்சங்களால் இந்த இனிய மண் காக்கப்படும் என்கிற நம்பிக்கையை இந்தப் புத்தாண்டு நமக்குத் தந்திருக்கிறது. இப்போது முடியாதென்றால் எப்போது முடியும்? நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்? பிளாஸ்டிக் இல்லா பிரபஞ்சமே நம் இலக்கு!

No comments:

Popular Posts