Thursday 3 January 2019

தூக்கு மேடைக்கு அஞ்சாத மாவீரன்

தூக்கு மேடைக்கு அஞ்சாத மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் இரா.பிறையா, உதவி பேராசிரியை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. இ ன்று(ஜனவரி 3-ந் தேதி) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்ததினம். பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இவ்வுலகில் தோன்றி மறைந்தவர்கள் ஏராளம்! ஆனால் மக்கள் மனதில் கொலு வீற்றிருப்பவர் ஒரு சிலரே! அந்த வரிசையில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமுகத்தம்மாளுக்கும் மகனாக 1760-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். தனக்கு இணையாகவும், துணையாகவும் வீரத்தில் பெயரளவும் குறையாத, வீர சக்கம்மாளை கரம்பிடித்தார். சான்றோன் ஆகிய தந்தையின் வழிநிற்றல் மகனுக்கு மகத்தானது. தொன்னூற்றாறு கிராமங்கள் அடங்கிய பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் 1790-ம் ஆண்டு 47-வது பாளையக்காரராகப் பதவி ஏற்றார். ஆற்காடு நவாப், ஆங்கிலேயருக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த இயலவில்லை. ஆதலால் பாளையங்களின் மீது வரியை வசூலிக்கும் உரிமை ஆங்கிலேயருக்கு நேரடியாகவே சென்றது. வரியை வாரிக்கொள்ள, ஆங்கிலேயர் கட்டபொம்மனிடம் கேட்க அவர் வரியை செலுத்த மறுத்தார். அதனால் ஆக்ரோஷத்துடன் பாளையங்கோட்டையை நோக்கி படையுடன் விரைந்தார் ஆங்கிலேய தளபதி ஆலன்துறை. யாருக்கு வரி? எதற்காக வரி? வரி கேட்கவும் உரிமை செலுத்தவும் நீங்கள் யார்? என்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் வார்த்தைகளால் ஆலன்துரை ஆட்டங்கண்டார். ஆட்டிப் படைப்போரின் ஆளுமை பலிக்காமல் போகவே, கட்டபொம்மனை அவமானப்படுத்த திட்டமிட்டு தன்னை காண வரும்படி அழைப்பு விடுத்தார் நெல்லை மாவட்ட கலெக்டர் ஜாக்சன். அழைப்பை ஏற்ற கட்டபொம்மன் உள்ளத்தில் துணிச்சலை நிறுத்தி தனது மக்களுடன் ஜாக்சனை காணச் சென்றார். திருநெல்வேலி, குற்றாலம், சக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், பேரையூர், பாவாலி, பள்ளி மடை, கமுதி என பல இடங்களுக்கு வரும்படி அவர் அலைக்கழிக்கப்பட்டார். கடைசியில் தனி ஒருவனாய் ராமநாத சேதுபதி ராமலிங்க விலாசத்தில் சந்தித்தார். ஆட்சிக்கட்டிலில் ஆணவத்தை அவிழ்த்துவிட்ட ஜாக்சனின் முன் நின்றபோது, தனக்கே உரிய தன்னம்பிக்கையோடு ஆங்கில படைக்கு நிகர் நான் ஒருவன் என்பதால் தனியாக அழைத்தார்களோ!. என்று எண்ணி தன் வீரத்தை தானே தட்டிக் கொடுத்தார் வீரப்பெருமகனார் வீரபாண்டியன். வரி செலுத்தவில்லை, வழங்கிய சலுகை பயன்படுத்தப்படவில்லை, அருங்குளம், கப்பாலபுரத்தில் வரியை வசூலிக்கும் உரிமை உனக்கில்லை என அடிமை மொழிகளை அவிழ்த்து விட்டார் ஜாக்சன். வீரபாண்டியரின் உள்ளத்தில், புயல் சூறைக்காற்றாய் சுழன்றிட, வெள்ளையனுக்கு வரி கொடுத்து அடிமைப்படுவதா என்ற கேள்வி, சிரிப்பின் பிழம்பாய் வெடித்தது. “சிறிது காலம் வரி கொடுத்தால் போதும்” என்ற ஜாக்சனுக்கு உன் வாழ்நாளை போல் வரியும் சிறிது காலம் தானா? என்று மறுமொழி உரைக்க அதிர்ந்து போனார் ஜாக்சன். கோபத்தின் உச்சியில், சரித்திரத்தை சரிய வைக்க போர் தந்திரத்தை கையாண்டார் ஜாக்சன். வீரபாண்டிய கட்ட பொம்மனோ தன்னை நோக்கி வாளோடு வந்த ஆங்கில படைத்தளபதி கிளார்க்கின் தலையைத் துண்டித்தார். அதே நேரத்தில் வீரபாண்டியனுடன் சென்ற மக்களைக் கொன்று குவித்தனர், ஆங்கிலேயர்கள். போர் விதிமுறையை பின்பற்றாது வெள்ளையனை பார்க்கச் சென்றதால், மதிப்புமிக்க உயிர்களை இழந்தேன்! என மனமுடைந்த போதும் வெள்ளையனுக்கு அடிபணிந்து ‘கப்பம் கட்டுவதை விட போரிட்டு வீழ்வதே வீரம்’ என்றார். நம்மை விட இந்த மண்ணும், மக்களும் முக்கியம் என உரைத்த தனது தம்பி ஊமைத்துரையின் மொழிவாளால் வீரபாண்டியரின் வீர வாசல் மீண்டும் மலர வழிவகுத்தது. ஆங்கிலேயரின் மோகமோ வரி. கட்டபொம்மனின் காதலோ தனது மக்கள். தனது நாட்டின் வளத்தை தனது மக்களே பயன்படுத்த வேண்டும் என்று சூளுரைக்கும் கட்டபொம்மனை அடிபணிய வைப்பது கடினம் என்பதை உணர்ந்தனர் ஆங்கிலேயர். கட்டபொம்மனை “உயிருடன் பிடித்து வாருங்கள், அல்லது தலையுடன் சென்னை வாருங்கள்” என்று கவர்னர் தனது படைக்கு ஆணையிட்டார். போரைச் சந்திப்பதா? அல்லது சரணாகதி அடைவதா என்ற கேள்வியை அமைச்சர்கள் எழுப்பிய போது “வியாபாரம் செய்து வயிறு பிழைக்க வந்தவர்களுக்கு இந்த வீரத்திரு மண்ணில் பிறந்தவர்கள் எவரும் ஒருபோதும் அடிமையாக மாட்டார்கள்” என்பதை ஆங்கிலேயருக்கு உணர்த்துவோம் என போர்முழக்கமிட்டார். முன்னறிவிப்பின்றி கோட்டையை சூழ்ந்தனர் ஆங்கிலேயர்கள். அவர்களைப் பந்தாடி புறமுதுகிட்டு ஓடச்செய்தார் பாஞ்சாலங்குறிச்சியின் மண்ணின் மைந்தன். இருப்பினும் மக்களைக் காக்கும் பொருட்டு ஆங்கிலேய பீரங்கிப் படைக்கு நிகராக தன் படை பலத்தை பெருக்க பாளையக்காரர்களைக் காணச் சென்றார். விதியின் வசத்தால் அவர் தம் நாட்டு மக்களாலேயே ஆங்கிலேயர் முன் கைதியாய் நிறுத்தப்பட்டார். தன் மக்களைக் காப்பாற்ற நினைத்தவரை கயத்தாறில் தூக்கிலிட கலெக்டர் பானர்மென் ஆணையிட்டார். தன்னுயிரைத் துச்சமெனக் கருதி தூக்குக்கயிற்றை முத்தமிட்டபோது இத்தமிழ் மண்ணின் வீரத்திற்காகவே வாழ்ந்த 39 வயது வீர தலைவனை இறுக்கிக் கொண்டன கயிற்றின் நரம்புகள். அவர் உயிர் பிரிந்தாலும், வீரம் இம்மண்ணைவிட்டுப் பிரியவில்லை. கயத்தாறில் நினைவிடம்; வெலிங்டனில் சிலை; 200 ஆண்டுகள் நிறைவை உணர்த்தும் தபால் முத்திரை, என அவரின் நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும், என்றென்றும் அவர் புகழ் பாடும். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் வழி நில்லாது, அறியாமையின் பிடியில் சிக்கி, அன்னிய பொருட்களுக்கு அடைக்கலம் கொடுத்து மண்ணின் வளம் மங்கச் செய்வதை நினைத்தால், “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்னும் வரிகளே பொங்கி வருகிறது. விடுதலை பெற்ற திருநாட்டை நாமும், இனி வரும் சந்ததியினரும் மகிழ்ச்சியான உள்ளத்தோடு பயனடைய அன்னியரின் விதையற்ற விதையை அகற்றி விளைவிக்கும் விவசாயியின் உயிருக்கு உரமூட்ட வேண்டும்! நாம் சுவாசிக்கும் காற்று செல்களுக்கு சுவையாய் இருந்திட அயல்நாட்டு கழிவுகளைஅந்நாட்டிலே நிலைநிறுத்திட செய்தல் வேண்டும்! சில்லரை வியாபாரத்தில் சிறப்பான தளத்தை நம் நாட்டுப் பொருட்களே இடம் பிடித்தல் வேண்டும்! அயல்நாட்டு மோகத்தை எதிர்க்கத் துணிவும், உணர்வும் நம்மில் உண்டு. இருப்பினும், அதனை அனைவரும் உணரும் வகையில் உணர்த்திட, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தின் வழிநிற்றல் வேண்டும்! வாழ்வின் வழிகாட்டியே! வீரப்பெருமகனே! வீரவணக்கங்கள்!

1 comment:

Dolo said...

திரைப்படக் கதை

Popular Posts