Sunday 23 December 2018

பிளாஸ்டிக் பைகளுக்கு இனி குட்பை

புத்தாண்டில் புதிய சபதம் ஏற்போம்: பிளாஸ்டிக் பைகளுக்கு இனி குட்பை ! கையில் எடுப்போம் துணிப்பை ! 1990-ம் ஆண்டுக்கு முன்னால் யாரும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம், கடைக்கு பொருட்கள் வாங்க சென்றால், வீட்டில் இருந்தே துணிப்பை எடுத்துச் செல்வது அனைவரின் வழக்கமாக இருந்தது. அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை பழைய பேப்பரில் தான் கடைக்காரர்கள் கட்டிக் கொடுத்தனர். எண்ணெய் வகைகளை வாங்க வீட்டில் இருந்தே சில்வர் பாத்திரங்களையோ, கண்ணாடி பாட்டில்களையோ எடுத்துச் சென்று வாங்கி வந்தனர். இறைச்சி கடைகளுக்கு சென்றால்கூட, சில்வர் பாத்திரங்களை எடுத்துச் சென்று அதில் இறைச்சியை வாங்கி வந்தனர். ஜவுளிக்கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடையின் பெயர் அச்சிடப்பட்ட துணிப்பைகளிலேயே அவர்கள் வாங்கிய புத்தாடைகளை வைத்து கொடுத்து வந்தனர். இதுவெல்லாம், 1990-ம் ஆண்டுக்கு முந்தைய காலம். ஆனால், அதன்பிறகு பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, எங்கும் பிளாஸ்டிக்... எதிலும் பிளாஸ்டிக்... என்ற நிலை உருவானது. கடைகளுக்கு செல்லும்போது பைகளை எடுத்துச் செல்லும் பழக்கம் படிப்படியாக குறைந்தது. தானியங்களாக இருந்தாலோ, எண்ணெய் வகைகளாக இருந்தாலோ அனைத்தையும் பிளாஸ்டிக் பைகளிலேயே கடைக்காரர்கள் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல், பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள் அனைத்தையும் பெரிய பிளாஸ்டிக் பைகளில் மொத்தமாக போட்டு வாடிக்கையாளர் களுக்கு வழங்கினர். இந்த முறை வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரர் களுக்கும் சவுகரியமாக இருந்ததால், நாட்கள் செல்லச்செல்ல பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மேலும் அதிகரித்தது. பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் இலை என்று உணவுப் பொருட்களுடனும் பிளாஸ்டிக் உறவாடத் தொடங்கியது. புத்தாண்டு முதல் தடை இப்படி, மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட பிளாஸ்டிக் பைகளை, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்போது, அவை நிலத்தில் மக்கி மண்ணோடு மண்ணாகாமல் அப்படியே உயிர்பெற்று கிடக்கிறது. விளைவு... மழை பெய்யும்போது அந்த நீரை தாங்கிப் பிடித்து, மண்ணோடு கலப்பதை தடுக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளில் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறுவித நோய்களும் ஏற்படுகிறது. இதேபோல், கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், வெள்ளம் ஏற்படும் காலத்தில் நீரை தடுத்து நிறுத்துவதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்து பேரழிவுகளை ஏற்படுத்துகிறது. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிளாஸ்டிக் குப்பைகளும் முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் என்னும் இந்த அரக்கன் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ந்தேதி முதல், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5-ந்தேதி உலக சுற்றுச்சூழல் நாளில், தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ஜனவரி 1-ந்தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகியவை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு இதற்கான அரசாணை ஜூலை 16-ந்தேதி வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், “பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்யவும், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கும் அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் பைகளுக்கான தடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “நாங்கள் வங்கிகளில் கடன் பெற்று வாங்கிய எந்திரங்களுக்கு பணம் கட்ட முடியாத நிலை ஏற்படும். தமிழகத்தில் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலை காக்க முடியும் அதே நேரத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வருவதால், இனி துணிப் பைகளுக்கு மவுசு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. துணிப் பைகளின் தேவை அதிகரித்தால், பருத்தி விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நாட்டில் பருத்தி சாகுபடியும் அதிகரிக்கும். எனவே, அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயரச் செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்று ஒருசாரர் கருத்து தெரிவிக்கின்றனர். துணிப்பைகளையும் ரூ.12 முதல் ரூ.35 வரை தயாரித்து வழங்க முடியும் என்று துணிப்பை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலவசமாகவோ, அல்லது ரூ.5 வரை விலை கொடுத்து வாங்கும் பிளாஸ்டிக் பைகளை சில முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், துணிப்பைகளை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். எனவே, பிளாஸ்டிக் பைகளை விட துணிப்பைகள் பயன்படுத்துவது பொதுமக்களுக்கு லாபம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அரசின் உத்தரவுக்கு ஏற்ப பொதுமக்களும் சிரமம் பாராமல் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தால் தான், எதிர்கால சந்ததியினரும் இடையூறு இல்லாமல் வாழும் வகையில் சுற்றுச்சூழலை ஓரளவு காக்க முடியும். பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் மண் வளத்தை நாம் காத்தால், நிலத்தடி நீர் மட்டம் தானாக உயரும். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு உடனடி தேவை இதுவே.

No comments:

Popular Posts