Monday, 24 December 2018

கொள்ளையனை திருத்திய கொடை வள்ளல்...!

கொள்ளையனை திருத்திய கொடை வள்ளல்...! எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாளுடன் சுரேந்திரன் (பழைய படம்) ஜே.சுரேந்திரன் (ஜானகி அம்மாள் மகன்) இ ன்று (டிசம்பர் 24-ந்தேதி) எம்.ஜி.ஆர். நினைவு தினம். எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் ஒரு தெய்வப்பிறவி. வி.என்.ஜானகியின் 13-வது வயதில், அவருக்கு ஒப்பனைக்காரராக இருந்த கன்னடத்தைச் சேர்ந்த கணபதி பட்டுடன் திருமணம் நடந்தது. 1939-ல் அவர்களுக்கு மகனாக நான் பிறந்தேன். எனக்கு சுரேந்திரன் என பெயர் வைத்தனர். என் அம்மாவுக்கும், கணபதி பட்டுக்கும் அம்மாவின் தாய் மாமனான நாராயணன் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு என் தாயாரான வி.என்.ஜானகிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். காரணம் எம்.ஜி.ஆரோடு நெருங்கி பழகுவதை அவர்கள் விரும்பவில்லை. அதன் விளைவாக கணவரிடமிருந்து என் அம்மா விவாகரத்து பெற்றார். 1950-ல் மருதநாட்டு இளவரசி படத்தில் இருந்து எம்.ஜி.ஆருக்கும் எனது தாயாருக்கும் இடையே நட்பு வளர்ந்தது. அது திருமணத்தில் முடிந்தது. நானும் அம்மாவும் எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் புது வாழ்வை தொடங்கினோம். அப்போது எனக்கு வயது 11. என்னை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்தது எல்லாமே என் தந்தை எம்.ஜி.ஆர்.தான். என் குழந்தைகளை நல்லபடியாக வாழ வைத்ததும் எம்.ஜி.ஆர்.தான். நான் என்னை பெற்ற தந்தை கணபதிபட்டை விவரம் தெரிந்ததிலிருந்து பார்த்ததேயில்லை. எம்.ஜி.ஆரை தந்தையாக ஏற்றுக்கொண்டேன். திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழ் மக்கள் ஆதரவைப் பெற காரணமாக இருந்தது. 1977-ல் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரானார். எம்.ஜி.ஆருடனான மலரும் நினைவுகள் மறக்கமுடியாதது. கள்ளக்குடி ரெயில் மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த என்னையும், சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார். எம்.ஜி.ஆருடன் எம்.எஸ்.ஒய். 2248 பிளேமவுத் காரில் சென்றோம். விழுப்புரம் தாண்டி நள்ளிரவிற்குப்பின் 1.30 மணி அளவில் நடுரோட்டில் இருள் சூழ்ந்த வேளையில் ஒரு வெள்ளி கூஜா மினுமினுத்தது. காரை டிரைவர் ராமசாமி ஓட்டி வந்தார். கூஜாவை பார்த்த ராமசாமி எம்.ஜி.ஆரிடம் ்அதை தெரிவித்து அண்ணே காரை நிறுத்தலாமா எனக் கேட்டார். தலையில் மப்ளர் கட்டி தூங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். திடீரென விழித்து ஏதாவது கார் முந்தி சென்றதா? என்றார். ராமசாமி இரண்டு கார்கள் வேகமாக முந்தி சென்றன என்றதும், உடனே எம்.ஜி.ஆர். காரை நிறுத்தச்சொல்லி அவர் இறங்கி விட்டார். அந்த கூஜாவை எடுத்துவரச் சொன்னார். ராமசாமி அருகில் காரை நிறுத்திவிட்டு கூஜாவை எடுத்து காரில் ஏறும்போது 10 பேர் கொண்டகொள்ளைக் கும்பல் நெற்றி உயர சிலம்ப கம்பை வைத்து சுற்றி வளைத்தனர். “மரியாதையாக காரில் இருக்கும் பொருள்களை எடுத்து வெளியே வைத்துவிடுங்கள். உங்களை விட்டு விடுகிறோம்” என குரல் கொடுத்தனர். அப்போது எம்.ஜி.ஆர். பொருட்களை வெளியே எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்றார். அதற்கு கும்பலில் ஒருவன், ‘ஒருவரும் உயிருடன் போகமுடியாது’ என்று மிரட்டும் தொனியில் கூறினார். இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அந்த கம்பை எடுங்கள் அண்ணே என ராமசாமியிடம் கேட்டார். ராமசாமி காரில் இருந்த பூண் கட்டிய பிரம்பை எடுத்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். அதை கம்பீரமாக பிடித்துகொண்டே ‘சரி ஒவ்வொருவராக வாரீங்களா அல்லது மொத்தமா வாரீங்களா’ என்றார், எம்.ஜி.ஆர். இதை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் திகைத்துப்போய் நின்றனர். திடீரென ஒருவர் தீக்குச்சியை கொளுத்தி எம்.ஜி.ஆரின் முகத்தருகில் காட்ட எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டுகொண்டனர். உடனே எம்.ஜி.ஆரின் காலி்ல் விழுந்து வாத்தியாரே, எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் தெரியாமல் செய்துவிட்டோம் என்றனர். எம்.ஜி.ஆர். தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு நீங்கள் எல்லாம் என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் வேலையே இல்லை. அதனால் இப்படி நடந்து கொண்டோம் என்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். ராமசாமியை அழைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து அனுப்புங்கள் என்றார். பணம் கொடுக்கப்பட்டது. இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார். அவர்கள் எம்.ஜி.ஆரிடம் இனிமேல் தவறே செய்யமாட்டோம் என்று கூறி காரை அனுப்பி வைத்தனர். எங்கள் இருவருக்கும் அப்போதுதான் உயிரே திரும்பியது. இது எம்.ஜி.ஆரின் துணிச்சலுக்கு ஒரு சிறு உதாரணம். லாயிட்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். மாடியில் உள்ள அறையில் தங்கி இருப்பார். அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். அதிகாலையில் அவர் மாடியில் இருந்து கீழே வரும்போது நானும், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் ராமுவும் வராந்தாவில் படுத்து இருப்போம். எம்.ஜி.ஆர். வரும் சத்தம் கேட்டதும் ராமு புத்தகத்தை எடுத்து சத்தமாக படிப்பார். நான் தூங்கிக்கொண்டு இருப்பேன். கீழே வந்ததும் எம்.ஜி.ஆர். கட் ஷூவால் என் இடுப்பில் ஒரு உதை கொடுத்தார். நான் அம்மா என்று அலறினேன். அவர் உன்னைப்போல பையன் ராமு படித்துக்கொண்டு இருக்கிறான். உனக்கு தூக்கமா? என்று கேட்டு, மதியம் நான் சாப்பிட வீட்டுக்கு வரும்போது 1 முதல் 20 வரை வாய்ப்பாடு படித்து என்னிடம் ஒப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். நான் படிக்காமல் விளையாடச் சென்றுவிட்டேன். மதியம் 1 மணிக்கு எம்.ஜி.ஆர். கார் வந்த சத்தம் கேட்டு நான் பாத் ரூமுக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டேன். வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். மனைவி சதானந்தவதியிடம், ‘சுரேந்திரன் எவிட’ என்று மலையாளத்தில் கேட்டார். அதற்கு அவர் உங்கள் கார் சத்தம் கேட்டதும் சுரேந்தர் பாத்ரூம் சென்று விட்டான் என்று கூறினார். அவன் வந்ததும் மேலே வரச்சொல் என்று கூறிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். சதானந்தவதி என்னிடம் வந்து எம்.ஜி.ஆர். மாடிக்கு வரச்சொன்னதாக கூறினார். நான் பயந்துகொண்டே மேலே சென்றேன். என்னை பார்த்ததும் அருகில் வரவழைத்து வாய்ப்பாடு ஒப்பிக்க சொன்னார். நான் 8-ம் வாய்ப்பாடு வரை சொன்னேன். அதற்கு மேல் தெரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர். ‘ஏல படிச்சியா இல்லையா’ என்று கேட்டு கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார். பயத்தில் சிறுநீர் கழிந்துவிட்டேன். இதைக் கவனித்த அவர் கீழே சென்று நிக்கரை மாற்றிக்கொண்டு வா என்று கூறினார். அதன்படி வேறு நிக்கர் அணிந்து கொண்டு மேலே சென்றேன். அங்கே எம்.ஜி.ஆர் பெரிய தட்டில் சாதம் வைத்து, அதில் மீன் குழம்பை விட்டு பிசைந்து உருண்டையாக உருட்டி கொண்டு இருந்தார். அருகில் வரும்படி அழைத்தார். பயந்து கொண்டே போனேன். என்னை அருகில் வைத்து, ‘ஆ’ காட்டு என்று கூறி எனக்கு ஊட்டிவிட்டார். பிறகு ‘சுரேந்திரா! நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வருனுமுன்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? ஏன் படிக்க மாட்டேங்கிற. வீணா அடி வாங்குறே’ இனிமேல் நல்லா படிக்கணும். அப்போதுதான் உன் அம்மாவுக்கும் பெருமை. எனக்கும் சந்தோஷம்.என்று வாஞ்சையுடன் கூறினார். அந்த அளவுக்குகருணை உள்ளம் கொண்ட பொன்மனச்செம்மல் அவர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தோட்டத்தில் எங்களுக்கு சிலம்பம், நீச்சல் கற்றுத்தருவார். தான் சினிமாவில் சம்பாதித்த சொத்தில் ஒரு பகுதியை கண் தெரியாத, காது கேட்கமுடியாத, வாய் பேசமுடியாத, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு சர்வதேச தரத்தில் தன் தோட்டத்துக்குள்ளேயே ஒரு ஆசிரமம் அமைத்து அவர்களுக்கு தரமான கல்வி, உணவு கொடுத்து அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கவும், எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டு அதில் 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் படித்து வருகின்றனர்.

No comments:

Popular Posts