Saturday 22 December 2018

கணிதம் கசப்பா? இனிப்பா?

கணிதம் கசப்பா? இனிப்பா? சி.ராம்பிரகாஷ், விரிவுரையாளர் இன்று (22-ந்தேதி) உலக கணித தினம். பள்ளிக்காலத்தில் அன்றும், இன்றும் மாணவர்களை அச்சுறுத்தி வரும் பாடம் என்றால் அது கணிதம்தான். கணிதம் என்ற பெயரை கேட்டாலே பலர் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் “கணிதம் கசப்பானது. அதில் நிறைய வாய்ப்பாடுகள், குறியீடுகள் வகைப்பாடுகள் மற்றும் பல தரவுகளை எல்லாம் மனப்பாடம் செய்ய வேண்டுமே” என்ற எண்ணம்தான். மகனோ அல்லது மகளோ பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள், மேற்படிப்புக்கு செல்லும்போது கணிதத்தை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் சேர்த்து விடுவது வாடிக்கையாகி விட்டது. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இது கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. கணிதம் தெரிந்திருந்த ஒருவர் தான் படித்தவராகக் கருதப்படுகிறார். திருவள்ளுவர் தந்த குரலில் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என்று கணிதத்தின் முக்கியத்துவத்தை ஒன்று முதல் கோடி எண்கள் வரை வகைப்படுத்தியுள்ளார். தமிழில் பூஜ்ஜியத்துக்கு குறியீடு இல்லை, எண்களை எழுதுவதில் இடமதிப்பு என்ற கூற்றின்படி பூஜ்ஜியம் இலக்கம், பத்து, நூறு இலக்கம் என கந்த குறியீட்டு முறைக்கு வித்திட்டது நம் இந்தியர்கள் என்பதுதான் நமக்கு மிகப்பெருமை. மேலும் ஆர்யபட்டர், பாஸ்கரர் மற்றும் கணித மேதை ராமானுஜர் போன்றோர் படைத்த கணிதத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச்சென்றது நமக்கு மிக பெரிய வர பிரசாதம்தான். தலை சிறந்த தத்துவ ஞானியும், கணிதப் பேராசிரியராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் “கணிதம் உண்மையைக் கூறுவது மட்டுமல்ல, அளவிலா அழகு படைத்தது, ஓர் ஒப்புயர்வற்ற சிற்பம் போல கணிதம் அழகுமிக்கது” என்று சிறப்பித்து கூறுகிறார். பிறகு ஏன் நமது மாணவர்களுக்கு கணிதம் என்ற கனி, இனிப்பாக இல்லாமல் கசப்பாக தெரிகிறது? முதலில் கணிதபாடத்தை விரும்பி படித்தாலே நாம் அதனை வென்று விடலாம். கணித பாடம் ஒரு வகை விளையாட்டுதான். நாம் செல்போனில் கேம் விளையாடும் போது அதிக ஸ்கோர் வாங்கலாம் அல்லது தோல்வியும் கிடைக்கலாம். தோல்வி அடைந்தால் மறுபடியும் விளையாடி அதிக ஸ்கோர் வாங்கலாம். அதே போலத்தான் கணிதத்திலும் தோல்வி அடைந்தாலும் மறுபடியும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் வாங்கலாம். கணிதத்தின் தீர்வை கண்டு பிடிக்கும்போது விடை தவறாக இருந்தால் துவண்டுவிடக் கூடாது. நீங்கள் எந்த இடத்தில் அந்த தவறை செய்தீர்களோ? அந்த இடத்தின் ஆணிவேரைக் கண்டுபிடித்து தீர்க்கவேண்டும். முக்கியமாக கணிதப்பாடத்தை மனப்பாடம் செய்வது மிகத்தவறு. இதுதான் தேர்வுகளில் அவர்களின் முதல் தோல்வி. அதற்கு பதிலாக அந்த வாய்ப்பாடுகள், குறியீடுகள் மற்றும் சூத்திரங்களை செயல் வடிவமாக செய்து பார்ப்பதன் மூலமும், வீடியோ போன்ற காட்சிப்படுத்துதல் மற்றும் அபாகஸ் பயிற்சியின் மூலமாகவும் எளிதாக கற்கலாம். கணிதத்தின் தீர்வு செய்யும் பொழுது நமது அறிவையும், திறனையும் பயன்படுத்தி விடையை எண்களாக எழுதுவோம். இக்கணித திறன்தான் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு தொழிலார்களிடமிருந்து தேவைப்படுகின்றன. இந்த திறன்தான் தற்பொழுதைய எல்லா அரசு மற்றும் தனியார் நிறுவங்களும் நடத்தும் அளவீட்டு திறன் தேர்வுகளில் இடம் பெறுகின்றன. கணிதம் படித்த ஒருவரால் மட்டுமே சிக்கலான யோசனைகளை தெளிவாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமல் எடுத்துரைக்க முடியும். கணிதம் படித்த நபர்களை எந்த ஒரு நிறுவனமும் அங்கீகரிக்கும். கணிதத்தின் பயனாக கம்யூட்டர்களில் உதவும் வீடியோ கேம் முதல் மருத்துவத் துறையில் பயன்படும் ஸ்கேன் ரிப்போர்ட் வரை மிகப்பெரிய பங்குதான். இன்றைய டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயன்படும் செயற்கைகோள்கள், எந்திர மனிதர்கள் (ரோபட்) வரை கணிதத்தின் பயன்பாடு கணக்கிலடங்காதது. கணிதத்தின் மூலமாகவே நாட்டின் எதிர்கால நிதிக்கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. நாட்டின் பருவ நிலை மாற்றம், இயற்கை பேரிடர் போன்றவற்றை கணக்கிடலாம். கணிதத்திற்கு ஆறு முகங்கள் உண்டு. அவை துல்லியம், தீர்க்க நியாயம் (லாஜிக்), அடிக்கூறு பிரித்தல், கருத்தியல், குறியீடு, கணித்தல் போன்றவை. எந்த ஒரு விடைகளையும் துல்லியமாக தரக்கூடிய பண்பு கணிதத்திற்கு மட்டுமே உண்டு. கணினி, கால்குலேட்டர் காலத்திற்கு முன்னர் பென்சிலும், காகிதமும் வைத்துக் கொண்டு பல மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த கணிதம் எனும் அழகை ஆராதியுங்கள். கணிதம் படித்த ஒருவன் எந்த ஒரு பிரச்சினையும் தீர்க்கும் திறனை பெறுகிறான். புதியவர்களுக்கு கணித மொழி மிகவும் கடினமானதாகத் தெரியலாம். ஆனால் எல்லா மாணவர்களாலும் கணிதம் கற்றுக் கொள்ள முடியும். நான் கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் கணிதம் கனியாக இருக்குமே தவிர கசக்காது.

No comments:

Popular Posts