Monday 17 December 2018

‘இமேஜை’ கெடுக்கும் இணைய வேடிக்கை...

நமது தோற்றமே நம்மை பிறருக்கு அறிமுகம் செய்கிறது. ஆளுமை வெற்றியை பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதை முந்தியதாக நம்மை பிறருக்கு அடையாளம் காட்டுவது நம் தோற்றமே. நன்மதிப்பு பெற்றுத் தருவதாக அமைய வேண்டும் நமது தோற்றம் . இன்று இணையதளத்தில் மகிழ்ச்சி என்ற பெயரில் வேடிக்கை செய்து தங்கள் மதிப்பையும், அடையாளத்தையும் அலங்கோலப்படுத்திக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகிறது. மாணவர்களான நீங்கள் உங்கள் ’இமேஜை’ (மதிப்பை) இணைய வேடிக்கையில் இழந்துவிடாமல் இருக்க இதை கொஞ்சம் கவனிங்க... தோற்றத்தின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவது தவறு என்றாலும், தோற்றம் ஒருவருக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. உடையில் அழுக்கு இருப்பது நீங்கள் கறை படிந்தவர் என்பதன் அடையாளம் அல்ல. ஆனால் உடையில் சுருக்கங்கள் இருந்தால் நீங்கள் ஆடை விஷயத்தில் அதிக அக்கறையற்றவர் என்பதை காட்டிக் கொடுக்கும். அது உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது. சுகாதாரமற்றவர் என்று எதிர்மறையாக எண்ண வைக்கக்கூடியதல்லவா? எனவே உடையில் கவனம் செலுத்துவது அவசியமே. அணியும் உடையில் அவ்வளவு கவனம் தேவையென்றால், அகிலமே கவனிக்கும் இணைய வெளியில் எவ்வளவு ஒழுக்கம் பேண வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஏனெனில் உங்களின் சகல நடவடிக்கைகளையும் இந்த உலகம் இணையத்தின் வழியே கூர்ந்து கவனிக்கிறது. அதன் அடிப்படையில் உங்களைப் பற்றிய கருத்துகளை பார்ப்பவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அது நல்லவிதமானதா, மோசமானதா என்பதை உங்களின் இணைய செயல்பாட்டைப் பொறுத்தது. ஆம், உங்கள் இணைய செயல்பாடு உங்களுக்கென்று ஒரு இணைய ‘இமேஜை’ உருவாக்கித் தருகிறது. அது உங்கள் நட்பு வட்டத்தை தாண்டியது என்பதை நீங்கள் உணர வேண்டும். நண்பர்களிடம்தானே சகஜமாக இருக்கிறோம் என்ற வகையில் என்று அவசியமற்ற பதிவுகளை வெளியிடுவது உங்கள் இமேஜை வேறுவகையில் மதிப்பிடவும், வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் கூடியது. நீங்கள் பொது வெளியில் சிறந்த பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் நல்ல மாணவராக இருக்கலாம். அதே நேரத்தில் நண்பர்கள் மத்தியில் ஜாலியாக இருக்கிறோம் என்ற பெயரில் வேடிக்கைகள் செய்வதும், அதை இணையத்தில் வெளியிடுவதும் கூடாது. உதாரணமாக முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம் இல்லாவிட்டாலும் வேடிக்கையாக அப்படி செய்து காட்டுவதுபோல போஸ் கொடுத்து படம் பிடிப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை இணையத்தில் வெளியிடுவது எதிர்வினை ஆற்றக்கூடியது. உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது. பெண்களைப் பற்றி, காதலைப் பற்றி, சாதி, மதங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது என வேடிக்கையான, முரணான கருத்துகளை பதிவு செய்வது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றில் பலவற்றை நீங்கள் இன்று வேடிக்கையாக செய்துவிட்டு மறந்து போனாலும், நாளை அது உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கும். உதாரணமாக நீங்கள் படித்து முடித்துவிட்டு ‘லிங்ட் இன்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், வர்த்தக தளங்களின் வழியே வேலை தேடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது வேலை வழங்குபவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பயோடேட்டா மூலமாக மட்டும் தெரிந்து கொள்ளமாட்டார்கள். சொந்த ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்களை இணையத்தின் வழியாகவும் தேடி தெரிந்து கொள்வார்கள். நீங்கள் நண்பர்களுடன் ஜாலியாக எடுத்த புகைப்படங்கள், வேடிக்கையாக செய்தவைகள், உங்கள் கருத்துகள் போன்றவற்றையும் ஆராய்வார்கள். நீங்கள் மறந்துபோன பல விஷயங்கள் அவர்களின் தேடலில் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேண்டுமானால், உங்களைப் பற்றி நீங்களே கூகுளில் தேடி, ‘நீங்கள் எவ்வளவு பிரபலம்’ என்று ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் வெளியிட்ட கருத்துகளும், வேடிக்கையாய் வெளியிட்ட படங்களும் கிடைக்கும். அப்படியென்றால் உங்கள் இணைய கணக்கின் முகவரி ஒருவருக்கு கிடைத்து விட்டால் இன்னும் உங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் என்பது புரிகிறதல்லவா?. எனவே இணையத்தில் வேடிக்கையாக புகைப்படமோ, கருத்துகளோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். நல்ல மதிப்பைத் தரும் கருத்துகள், புகைப்படங்கள், கட்டுரைகளை பதிவு செய்யுங்கள். உங்களுக்கென தனி இணைய தளம் தொடங்கினால்கூட தவறு இல்லை. ஆனால் பதிவுகள் ஒவ்வொன்றும், உங்கள் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இனி உங்கள் இணைய இமேஜ் உயரட்டும்.

No comments:

Popular Posts