Tuesday, 18 December 2018

தணிக்கை: சினிமாவை சிதைக்கிறதா? செதுக்குகிறதா?

தணிக்கை: சினிமாவை சிதைக்கிறதா? செதுக்குகிறதா? ‘கலைவித்தகர்’ ஆரூர்தாஸ் 19 -ம் நூற்றாண்டை (கி.பி.1900) விஞ்ஞான நூற்றாண்டு என்று கூறலாம். மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் நாகரிக முன்னேற்றத்திற்கான இன்றியமையாத பல அரிய சாதனங்கள் மேலை நாட்டு விஞ்ஞானிகளால் இந்த நூற்றாண்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டன. உலகப்பெரும் அதிசயமான சினிமாவைக் கண்டுபிடிக்கக் கூடிய ஈடு இணையற்ற ஒரு பெரும் விஞ்ஞானிக்காக காலம் வளர்ந்து கொண்டிருந்தது. இங்கிலாந்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் அவன் வசித்த இடத்திலிருந்து தள்ளி வேறொரு பகுதியில் இருந்த பள்ளிக் கூடத்திற்குச் செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு கால்நடையாக வந்து ரெயில் ஏறிச் செல்வதும், பள்ளி முடிந்ததும் திரும்பி ரெயிலில் வருவதுமாக இருந்தான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையத்திற்கு வருவதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. அவன் அங்கு வருவதற்கும், ரெயில் புறப்பட்டு மெதுவாக நகர்வதற்கும் நேரம் சரியாக இருக்கவே, எப்படியாவது ரெயிலில் ஏறிவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் பெட்டிகளின் ஓரமாக ஓடிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பயணி, அவனைப்பிடித்து உள்ளே இழுப்பதற்காகத் தன் கையை வெளியே நீட்டினார். ஆனால் அவரது கைக்கு எட்டியது அந்தச் சிறுவனுடைய கையோ, சட்டையோ அல்ல - ஒரு பக்கக் காதுப்பகுதி அவர் கைக்குக் கிடைக்கவே, அதைப்பிடித்து இழுத்து அவனை உள்ளே ஏற்றினார். சிறுவன் எப்படியோ உள்ளே வந்துவிட்டான். ஆனால் அந்தப் பயணி பலமாகப் பிடித்து இழுத்ததில் அவன் காது வலியெடுத்தது. நாளடைவில், சிகிச்சைக்கும் அப்பாற்பட்டு சிறுவனின் செவி கேட்கும் திறன் குன்றி இறுதியில் ஒரேயடியாகச் செவிடாகிவிட்டது. இன்னொரு காது மட்டும் லேசாகக் கேட்டது. அதனால் படிப்பு பாதித்தது மட்டுமல்ல, படிப்பில் அவனுக்கு இருந்த உற்சாகமும், ஊக்கமும் இழந்து, பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். அவனுடைய பெற்றோர் வீட்டிலேயே வைத்து முடிந்த மட்டும் அவனுக்குக் கல்வி போதித்தனர். அவனுடைய வயது வளர வளர பள்ளியில் கற்கும் கல்விக்கும், இயற்கையாகப் பெருகும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று உணரத் தொடங்கினான். அதன் விளைவாகச் சிறு சிறு விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் கவனத்தைச் செலுத்தினான். காது சரியாகக் கேட்காவிட்டாலும், காலம் அவனுக்குக் கை கொடுத்தது. முன்பு அவன் ரெயிலில் ஏற ஒருவர் கை கொடுத்ததால் காது செவிடானது. இப்பொழுது கடவுளும் காலமும் கை கொடுத்ததால் உலகமே வியக்கத்தக்க விஞ்ஞானி ஆகி புதிய புதிய பயனுள்ள கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து உலகப்புகழ் பெற்றான். ‘நீராவி ரெயில் என்ஜின்’, ‘நீராவிப் படகு’, ‘மின்சார பல்பு’, ‘மின்சார டைனமோ’, ‘மின்சார கடிகாரம்’ போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் அவனுடைய விஞ்ஞான அறிவின் விளைவில் உருவானவையாகும். இவை அனைத்துக்கும் மேலாக அவன் கண்டுபிடித்த உன்னதமான ஒரு சாதனம் சினிமா! அனைத்துலக மக்களை அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் மயக்கி மகிழச் செய்யும் அற்புத - அபூர்வமான சினிமாவைக் கண்டுபிடித்த அந்த அதிசய விஞ்ஞானிதான் ‘தாமஸ் ஆல்வா எடிசன். 131 ஆண்டுகளுக்கு முன்பு 1887-ல் எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு வரையில் வெறும் நிழற்படங்களைப் பிடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த ‘ஸெல்லுலாயிட்’ என்னும் ஒருவகை நிழற்படத்தாள் அல்லது மெல்லிய பிலிம் தகடில் பலவகை மனித உருவங்களைப் பதிய வைத்து அவற்றை நடக்கவும், ஓடவும், ஆடவும் செய்து காட்டினார். அதற்கேற்றபடி பழைய போட்டோ கேமராவை புதிய பிலிம் கேமராவாக மாற்றி அமைத்தார். வெண் திரையில் மனித உருவங்கள் நடப்பதையும், ஓடுவதையும், ஆடுவதையும் முதன் முதலாகப் பார்த்து மயங்கிய இங்கிலாந்து மக்கள் பிரமிப்படைந்து எழுந்து நின்று கைத்தட்டிக் கூவிக் குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எடிசனின் சினிமா அது. பிறந்த வீடான இங்கிலாந்திலிருந்து புகுந்த வீடான அமெரிக்காவுக்குச் சென்றது. அங்கும் அதற்கு அமோக வரவேற்பு. இப்படியாக ஐரோப்பா முழுவதும் சினிமா செல்வாக்கு பெற்றுவிட்டு ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவுக்கு வந்தது. எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்த அதே காலக்கட்டத்தில் ‘லுமியர் பிரதர்ஸ்’ என்னும் இரு சகோதரர்கள் சினிமாவைக் கண்டுபிடித்ததாகவும், ஆனால் அவர்கள் அதை மக்களிடம் காட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்பாக எடிசன் முந்திக்கொண்டு சினிமாவை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டார் என்ற ஒரு கருத்தும் அன்று நிலவியது. எது எப்படியோ சினிமாவின் மொத்தப்புகழும் எடிசனையே வந்து சேர்ந்து விஞ்ஞான வரலாற்றில் அவர் பெயரை இடம் பெறச் செய்துவிட்டது. சினிமாவைக் கண்டுபிடித்த புதிதில் எடிசன் அதற்கு ‘கினிமா’ என்றுதான் பெயரிட்டார். நாளடைவில் ‘சினிமா’ என்னும் பெயரின் முதல் எழுத்தான (சி) மருவி ‘கினிமா’ என்பது ‘சினிமா’ என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக 1916-ல் வி.முருகேச முதலியார் என்ற பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஜமீன்தார் வடசென்னை ஏழுகிணறு பிரான்சிஸ் தெருவில் முதன்முதலில் கட்டிய தனது தியேட்டருக்கு ‘கினிமா சென்ட்ரல்’ என்றுதான் பெயரிட்டு ஊமைப் படங்களைக் காட்டி வந்தார். பிற்காலத்தில் அவரது ஒரே புதல்வரும், எம்.ஜி.ஆரின் குடும்ப நண்பருமான வி.எம்.பரமசிவ முதலியார் ‘கினிமா சென்ட்ரல்’ என்பதை ‘ஸ்ரீமுருகன் டாக்கீஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்து பல வெற்றிப்படங்களைத் திரையிட்டு புகழ் பெற்றார். சினிமாவை ‘மூவி’, ‘சலனச்சித்திரம்’ என்றும் சொல்வதுண்டு. உருவங்கள் நகர்வதால் அந்தப்பெயர் வந்தது. சினிமாவில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவுக் கருவியுடன் சேர்ந்து நடிகர்களும் அசைந்து ஆடி ஓடி நடிப்பதை வைத்து அது ‘சலனச்சித்திரம்’ என்று அழைக்கப்பட்டது. “ஒரு சினிமாப்படம் 2 மேஜைகளின் மீது உருவாகிறது. ஒன்று எழுத்தாளரின் மேஜை. இன்னொன்று எடிட்டரின் மேஜை.” பேனாவில் எழுத்துக்கள் கதைகள் உருவாகி, அவை பல காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, பலவகை கேமரா கோணங்களில் படமாக்கப்பட்டு, இறுதியில் எடிட்டரின் கத்திரிக்கோலால் வெட்டித் தொகுக்கப்பட்டு ஒரு திரைப்படமாக முழுமை பெறுகிறது. அதுதான் சினிமா! எழுத்தாளரும், எடிட்டரும் இல்லாவிட்டால் சினிமா இல்லை. கத்தரிக்கோல் எழுதுகோலை செதுக்கியும் இருக்கிறது. சிதைத்தும் இருக்கிறது. அதற்கு சரியான எடுத்துக்காட்டு 55 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணாவின் சொர்க்கவாசல் சிதைக்கப்பட்டது. 1952-ல் கலைஞர் கருணாநிதியின் பராசக்தி செதுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. சினிமாவை பொறுத்தவரை தொடக்கத்தில் எழுதுகோலுக்கும், இறுதியில் கத்தரிக்கோலுக்கும் எதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். அது படம் அமைவதை பொறுத்தது. அன்றும் சரி - இன்றும் சரி, அனைத்துலகிலும் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரையில் கண்டு மகிழச்செய்யும் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சாதனமான சினிமாவைக் கண்டுபிடித்த அந்த அற்புத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இங்கிலாந்து ஐசக் நியூட்டனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியதைப்போல எந்த ஒரு பட்டமும் வழங்காதது ஒரு பெரும் குறையாகும். ஆனாலும் இன்றைக்கும் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ‘பாகுபலி’, ‘பத்மாவதி’ மற்றும் ஐரோப்பா - ஆசியா கண்டங்களில் தயாராகும் அத்தனை சினிமா படங்களின் ஒவ்வொரு கணுவும் எடிசனின் பெயர் சொல்லும்.

No comments:

Popular Posts