Tuesday 18 December 2018

கறிக்கு உதவாத இணையதள சுரைக்காய்...!

கறிக்கு உதவாத இணையதள சுரைக்காய்...! ப. பொன்விக்னேஷ், கல்லூரி மாணவர். வே லை ஒருவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கை தரத்தையும், தகுதியையும் தீர்மானிப்பது வேலைதான். இன்றைக்கு பலருக்கு வேலை கிடைத்து விட்டாலும் கூட அதிலிருந்து வரும் வருமானம் அவர்களின் வாழ்க்கைக்கு போதவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆகையால் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட சம்பாதிக்க நினைக்கிறார்கள். இந்த நவீன உலகத்தில் இணையதளத்திலும் வேலை தேடுகிறார்கள். இன்றைக்கு நிறை பேர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த உடன் இணையத்தில் சென்று ‘ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி’ என்று தேடுகிறார்கள். அவ்வாறு தேடும்போது அவர்களுக்கு ஏராளமான வேலை தரும் இணையதளங்கள் கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான இணையதளங்கள் போலியானதாகும். ஆனால் அவர்கள் எதையும் அறியாமல் ஒரு இணையதளத்திற்குள் செல்கிறார்கள். அந்த இணையதளம் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை சிந்திக்காமல், இணையத்தில் வேலைதரும் இணையதளங்கள் போலியானது என்று கண்டுபிடிக்கவே முடியாது. அது அசல் இணையதளம் போன்றே இருக்கும். மக்கள் அறியாமல் போலியான இணையதளத்திற்குள் சென்று ‘டேட்டா என்ட்ரி’ போன்ற வேலைகளை செய்துவிட்டு அதற்கான பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அப்போது நாம் ஈட்டிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்பார்கள். அதையும் நம்பி நாம் பணம் செலுத்தினாலும், இறுதி வரை பணம் கிடைக்கவே கிடைக்காது. நம்மிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே போலி இணையதளத்தின் தந்திரம். ஏமாற்றப்பட்ட பிறகு தான் ஒவ்வொருவரும் இது போலியான இணைதளம் என்பதை உணருகிறார்கள். உழைப்பையும் உழைப்பிற்கான ஊதியத்தையும் திருடும் கும்பல்கள் ஒரு பக்கம். முதலிலேயே மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் கும்பல்கள் மற்றொரு பக்கம். வீட்டில் இருந்தபடியே வேலை என்ற பெயரில் பல போலியான இணையதளங்கள் மோசடி செய்து வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்கள் தான். இணையதள வேலைவாய்ப்புகள் போலியானதா? பாதுகாப்பானதா? என்பதை தெரிந்து கொள்ள கூகுளில் சென்று குறிப்பிட்ட இணையதளத்தை தேட வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் யாராவது நீங்கள் குறிப்பிட்ட தளத்தை பற்றி கசப்பான அனுபவத்தையோ, போலி என்ற கருத்தையோ பதிந்து இருந்தால் அதனை உடனே ஒதுக்கிவிடுங்கள். இணையத்தில் சம்பாதிக்க வேண்டும் என்றால் மிகவும் நம்பகமான ‘யூ-டியூப், பிளாக்’ ஆகியவற்றின் மூலமாக சம்பாதிக்கலாம். தானாக சென்று ஏமாறுபவர்கள் ஒரு பக்கம். மின்னஞ்சல் முகவரிக்கு வரும் கவர்ச்சிகரமான போலி வேலைவாய்ப்பு மின்னஞ்சலை அனுப்பி ஏமாறுபவர்கள் மற்றொரு பக்கம். இதில் சிலவற்றை போலி என நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் சிலவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. போலி வேலைவாய்ப்பு மின்னஞ்சல் மிக கவர்ச்சியாக இருக்க முனைகின்றன. மேலும் நாம் படித்த நம்முடைய பாடத்தின் வாரியாக நம்மை வாழ்த்தி தங்களுடைய வலைக்குள் வீழ்த்துகின்றன. நமக்கு மின்னஞ்சல் அனுப்பிய இடத்தின் ‘டொமைன்’ பெயர்கள் உண்மையானது போல தோற்றம் அளிக்க முயல்கின்றன. ஒரு உண்மையான நிறுவனம் தன்னுடைய தேவைக்கான பணியாட்களை தேர்வு செய்ய, வேலை தேடுபவர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்புகிறது என்றால் அந்த மின்னஞ்சல் முகவரி அந்த நிறுவனத்தின் பெயரை மட்டுமே கொண்டிருக்கும். ஜி-மெயில் போன்ற நிறுவனத்தின் மின்னஞ்சலாக இருக்காது. அதாவது ஒரு மின்னஞ்சல் முகவரியில் அட் என்பதற்கு பிறகு அந்த நிறுவனத்தின் பெயர் இருக்கும். அப்படி இல்லை என்றால் அது ஒரு போலி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆகும். பொதுவாக, வேலை வாய்ப்பு மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கோப்பு ‘வேர்டு’ மற்றும் ‘பி.டி.எப்.’ கோப்பாக தான் இருக்கும். நமக்கு வந்திருக்கும் வேலைவாய்ப்பு கடிதத்தை திறந்து பார்த்தால், அது மிகவும் வண்ணமயமாக, மாறுதலான எழுத்துருக்களுடனும், படங்களுடனும் தயாரிக்கப்பட்டு இருப்பதை காணலாம். பொதுவாக ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஆட்சேர்ப்பு நோக்கத்திற்காக மின்னஞ்சல்களை அனுப்பும்போது இதுபோன்று கவர்ச்சிகரமாக அனுப்பாது. பெரும்பாலும் போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சல் அனுப்புநர் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கூறி இருப்பார். இந்த ஆசை தூண்டிலில் யாரும் சிக்க வேண்டாம். எந்தவொரு உண்மையான நிறுவனமும் வேலை தேடுபவர்களிடம் பணம் கேட்பதில்லை. அப்படி இருந்தும் யாரேனும் வேலை வாய்ப்புக்காக பணம் கேட்டால் இது போலியானது என்பதை சந்தேகமில்லாமல் முடிவு செய்யலாம். நீங்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருந்தால் உங்களுக்கு வரும் போலி வேலைவாய்ப்பு மின்னஞ்சல் இலக்கண பிழைகளுடனும், பொருளற்ற சொற்களுடனும் இருப்பதை காண்பீர்கள். எந்தவொரு நல்ல நிறுவனமும் இது போன்று தப்பும், தவறுமான மின்னஞ்சல்களை அனுப்பாது. நீங்களே வியப்பு அடையும் வகையில் மிக பெரிய பதவிக்கு உங்களை தங்களின் நிறுவனத்தில் தேர்வு செய்து உள்ளதாக அடிக்கடி மின்னஞ்சல்களை அனுப்புவார்கள். இவ்வாறான கடிதத்தை அது போலி என்று வரையறுத்து விடலாம். பல ஆண்டுகளாக பணி அனுபவம் இல்லாமல் தொடக்கத்திலேயே மிக உயர்ந்த பதவி வாய்ப்புகளை கண்டிப்பாக பெற முடியாது. பெரும்பாலும் நாம் இவ்வாறான போலியான வேலைவாய்ப்பு மின்னஞ்சலிற்கு உடனடியாக பதில் அனுப்பிவிடுவோம். இது மனித இயல்புதான். இருந்தாலும் ஒரு நிமிடம் சற்று யோசித்து முடிவெடுத்தால் நன்று. பொதுவாக மின்னஞ்சலில் அனுப்பப்படும் போலி வேலைவாய்ப்பு கடிதத்துடன் ஒரு உருவப்பட படிவத்தை இணைப்பாக அனுப்புவார்கள். ஆனால் புகழ்பெற்ற நிறுவனம் எதுவும் இதுபோன்று மின்னஞ்சலில் அனுப்பப்படும் வேலைவாய்ப்பு கடிதத்துடன் ஒரு உருவப்பட படிவத்தை இணைத்து அனுப்பமாட்டார்கள். இதுபோன்ற பல போலியான இணைய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்கள் இருக்கிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இதுபோன்ற போலியான வேலைவாய்ப்பு இணையதளங்களில் ஏமாறாமல் இருக்க முடியும்.

No comments:

Popular Posts