Sunday 16 December 2018

நாதசுர சக்கரவர்த்தி...!

நாதசுர சக்கரவர்த்தி...! எம்.எஸ்.ராஜேந்திரன், நிறுவனத்தலைவர் காமராஜர் தேசிய காங்கிரஸ் இ ன்று (டிசம்பர் 12-ந் தேதி.) நாதசுரவித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை நினைவு நாள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாதசுர இசைஉலகில் ஈடு இணையற்றவராக விளங்கியவர் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை. நாதசுர சக்கரவர்த்தி என்று வியந்து பாராட்டும் அளவுக்கு புகழுடன் விளங்கினார். ராஜரத்தினம் பிள்ளை 1898-ம்ஆண்டு ஆகஸ்டு 27ந்தேதி தமிழ்நாட்டில் திருமருகல் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் குப்புசாமிபிள்ளை, கோவிந்தம்மாள். இவர்கள் குழந்தைக்கு சூட்டிய பெயர் பாலசுப்பிரமணியம். பிறந்த சில நாட்களிலேயே தந்தை குப்புசாமி பிள்ளை இறந்து விட்டார். விதவையான கோவிந்தம்மாள் குழந்தையுடன்சகோதரர் நடேசபிள்ளை வீட்டில் தஞ்சம் அடைந்தார். நடேசபிள்ளையும் ஒரு நாதசுர கலைஞர். அவருக்கு குழந்தை இல்லை. எனவே, தன்சகோதரி மகன் பாலசுப்பிரமணியனை தத்து எடுத்துக்கொண்டு ராஜரத்தினம் என்று புதிய பெயர் சூட்டி சிறப்பாக வளர்த்தார். கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக் காவல் கிருஷ்ண அய்யரிடமும் முறையாக நாதஸ்வரத்தை ராஜரத்தினம் பயின்றார். அக்கலையில் சிறந்தவராக திகழ்ந்தார். ராஜரத்தினம் பிள்ளையின் முதல் கச்சேரி 1919-ல் சென்னையில் நடைபெற்றது. கச்சேரியில் அவர் கையாண்ட தோடி ராகத்தை கேட்டு ரசிகர்கள் மெய் மறந்து ரசித்தார்கள். அவர் புகழ் பரவியது. ராஜரத்தினம் பிள்ளையின் நாதசுர இசைக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருந்ததால், அவருக்கு சினிமாத்துறையினர் அழைப்பு விடுத்தனர். முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் படத்தில் கதாநாயகியாக டி.பி. ராஜலட்சுமி நடித்த படத்தில் நாதசுரகலைஞராக ராஜரத்தினம்பிள்ளைநடித்தார். கவிகாளமேகம் என்றபடத்தில் கதாநாயகனாக நடித்தார். ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜபாகவதர் தயாரித்த ராஜமுக்தி படத்தில் ராஜசபையில் ராஜரத்தினம்பிள்ளை நாதசுரக்கச்சேரி நடத்தும் காட்சியில் அவர் சிறப்பாக நடித்ததால், ராஜரத்தினம் பிள்ளைக்கு பாராட்டு விழாவும் ஏராளமான பட்டங்களும், விருதுகளும், தங்கமெடல்களும், தங்க மாலைகளும், வைரமோதிரங்களும் கிடைத்தன. அவற்றில் முக்கியமானது அகில உலக நாதசுரசக்கரவர்த்தி என்ற பட்டமாகும். கடல் கடந்து சென்று நாதசுரக்கச்சேரிகள் நடத்திய வித்துவான் ராஜரத்தினம் பிள்ளை தான். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் பலமுறை இவருடைய நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒருமுறை சிங்கப்பூர் அரசு விழாவில் சில மேல்நாட்டு அதிபர்கள் கலந்து கொள்ள வருகை தந்த விழாவில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் ராஜரத்தினம் நாதஸ்வர கச்சேரியை கேட்டு ரசித்த ராணி இசை நிகழ்ச்சி முடிந்ததும், மேடையின் அருகில் சென்று அவரை பாராட்டியதோடு அந்த நாதசுரத்தை வாங்கி தொட்டு பார்த்து இது எப்படி உருவாக்கப்பட்டது என்று கேட்டார். இது தமிழனின் பண்டையகால கலாசார அடிப்படையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட இசைக் கருவி என்று ராஜரத்தினம்பிள்ளை அவரிடம் கூறினார். எனக்கு இது போன்ற ஒன்று வேண்டும் என்று ராணி கேட்டார். எப்போதும் ராஜரத்தினம் மூன்று நாதஸ்வரங்கள் கையில் வைத்திருப்பார். அதில் ஒன்றை எடுத்து வாசித்துக்காட்டி மகாராணியிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு நன்றி கூறி விட்டு 100 டாலரை அன்பளிப்பாக ராஜரத்தினத்திடன் கொடுத்தார். அதை அவர் வாங்க மறுத்து விட்டார். இதற்கு விலைமதிப்பு கிடையாது. இதை நீங்கள் தமிழர்களின் ஞாபக சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதைக் கேட்ட மகாராணி மனம் நெகிழ்ந்து போய் இந்தியாவில் தாங்கள் ஒரு சிறந்த மனிதர் என்று பாராட்டினார். அந்த நாதஸ்வரம் இன்றும் பக்கிங்காம் அரண்மனை அருங்காட்சியத்தில் உள்ளது,. 1947-ம்ஆண்டுஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்தியா பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற போது வானொலியில் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது. இவர் இசையை மவுண்ட்பேட்டன்பிரபுவும் நேருவும் கேட்டு இவரை பாராட்டினார்கள். ஒரு முறை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது அமிர்தவர்ஷினி ராகத்தை வாசித்து மழை பெய்யச் செய்தார். இதை அறிந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ராஜரத்தினம்பிள்ளை வீட்டுக்கு சென்று பாராட்டினார். ராஜரத்தினம்பிள்ளை திருமண நிகழ்ச்சிகளுக்கு கச்சேரி செய்வதில்லை. மாப்பிள்ளைஅழைப்பு ஊர்வலம் செல்லும் போது நடந்து கொண்டும் நின்று கொண்டும் வாசிக்க சம்மதிப்பதில்லை. ராஜாக்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் வீடுகளில் இவர் புகழுக்காக வாசித்தே தீர வேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற்பட்டால் முக்கிய வீதிகளில் மேடை அமைத்து அதில் உட்கார்ந்து வாசிப்பார். இவர் திருவாவடுதுரை ஆதினவித்துவானாக நீண்டகாலம் பதவி வகித்து வந்தார். தேவதாசிகளை ஒழிக்க முக்கிய காரணமாக இருந்தார். ராஜரத்தினம் பிள்ளை 5 திருமணங்களைசெய்தார். மனைவிகள் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. கடைசியில், சிவாஜி என்ற பையனை தத்து எடுத்து வளர்த்தார். ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற உயர்ந்த கலைஞருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணமுடிப்பு வழங்க எம்.ஆர். ராதா ரத்தக்கண்ணீர் நாடகம் நடத்தி நிதி திரட்டினார். பணமுடிப்பை வாங்க ராஜரத்தினம் புறப்பட்டபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், அவருடைய வளர்ப்பு மகன் சிவாஜியை அனுப்பி, பண முடிப்பை வாங்கி வரச்செய்தார். 1956 டிசம்பர் 12-ந்தேதி காலை ராஜரத்தினம் பிள்ளை மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த போது அவருக்கு வயது 58. ராஜரத்தினம்பிள்ளை மறைந்த செய்தி கேட்ட அன்றைய முதல்-அமைச்சர் காமராஜர் விடுத்த இரங்கல் செய்தியில் சுதந்திர இந்தியா இசைதவப்புதல்வனை இழந்துவிட்டது என்று தெரிவித்தார்.

No comments:

Popular Posts