Sunday, 16 December 2018

பயங்கரவாதத்தை முறியடிப்போம்...! தியாகிகளை போற்றுவோம்...!

பயங்கரவாதத்தை முறியடிப்போம்...! தியாகிகளை போற்றுவோம்...! வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்,(டிசம்பர் 13-ந்தேதி) நமது துடிப்பான ஜனநாயகத்தின் கோவிலும், மக்களின் பிரதான நம்பிக்கையுமாக விளங்கும் இந்திய நாடாளுமன்றத்தின் மீது வஞ்சகமாக நடத்தப்பட்ட தாக்குதலில், பாதுகாப்பு வீரர்களும் மற்றவர்களும் செய்த உச்சபட்ச தியாகத்தை நினைவு கூருவது அவசியமாகும். இதன் மூலம் நாம் நமது தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பாக வைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும். அதோடு, உலக அளவில் அச்சுறுத்தலாக எப்போதுமே வளர்ந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட நமது ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. மனித குலத்தை துன்புறுத்தும் இது போன்ற முட்களுக்கு எதிராக பலத்த ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பணியாற்றுபவர்களையும், எம்.பி.க்களையும் காப்பாற்றுவதற்காக நமது பாதுகாப்புப் படையினர் வீரத்தோடு நடத்திய சண்டையை விவரிக்கவும் பாராட்டவும் வார்த்தைகள் இல்லை. மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றபோது உயிரிழந்த 166 பேருக்கு நாம் சமீபத்தில் அஞ்சலி செலுத்தினோம். நமது ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு இவையெல்லாம் ஆழமான காயத் தழும்புகளாக அமைந்துவிட்டன. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா கடந்த பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சில ஆண்டுகளில் உலகின் வேறு பல பகுதிகளில் உள்ள நாடுகளிலும் பயங்கரவாதம் தன்னை பதிவு செய்திருக்கிறது. சர்வதேச பயங்க ரவாதம் குறித்த ஒருங்கிணைந்த அமைப்பை (சி.சி.ஐ.டி.) ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 1996-ம் ஆண்டு இந்தியா முன்மொழிந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சி.சி.ஐ.டி.யை நோக்கி முன்செல்வதில் ஒரு தெளிவான முடிவை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எதாவது முட்டுக்கட்டை இருக்கிறது என்றால் அது உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாகும். சி.சி.ஐ.டி. பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலையையும், தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் தேவையற்ற வன்முறைகளையும் அனைத்து நாடுகளுமே பிரதிபலிக்க வேண்டும். அதை வன்மையாக எதிர்க்கும் விதத்தில் உறுதியான கூட்டிணைப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்திவிடக் கூடாது. பயங்கரவாதி என்பவன் தீவிரவாதியே தவிர, அதில் நல்லது கெட்டது என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இதுபற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பயங்கரவாதத்துக்கு எதிராக மனித வர்க்கம் முழுவதுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார் நாடாளுமன்றம் மீதும், மும்பை பகுதிகளிலும் நடந்த கொடூர தாக்குதல்கள், இந்தியர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தின. பிரிவினை, சீர்குலைவு மற்றும் அழிவுக்கான சக்திகளை எதிர்ப்பதற்கான தீர்மானத்தை பலப்படுத்த, அந்த சம்பவங்கள் காரணமாக இருந்தன. எல்லைப் பகுதியில் உருவான சதியை முறியடிப்பதில் மும்பை போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ. படைகள் பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பயங்கரவாத சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். பயங்கரவாத செயல்பாடுகளை கண்டும் காணாமலும் நாம் இருந்துவிட முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் விழித்தெழுந்து, அதற்கு எதிரான மாற்றுத் தீர்வை விரைவாகவும் கூட்டு முயற்சியிலும் கண்டுபிடிக்க வேண்டும். கடல் பகுதிகள், கடல்சார் தொழில்கள் அனைத்துக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். மனித குலத்தின் உயிருக்கும், உரிமைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் சில நபர்களின் பணயக் கைதியாக உலகம் இருந்துவிடக் கூடாது. ஆனால் மனித உரிமைகள் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் நலனுக்காக சிலர் குறிப்பாக இந்தியாவிலும் செயல்படுவது முரண்பாடாக உள்ளது. ஒரு நாடு என்ற அளவில் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். உலக அளவில் மற்ற நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுந்து, பேசி, தேவைப்பட்டால் போருக்கு முன்செல்ல வேண்டும். நாம் எதிர்ப்பது பொதுவான எதிரியைத்தான். இதில் கூட்டு முயற்சிதான் வெற்றி பெறும். இந்தியாவைப் பொறுத்தவரை, வெளியிலும், உள்நாட்டிலும் குறிப்பாக எல்லைப் பகுதிகளிலும் செயல்படும்பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளை சமாளிக்க நமது பலம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத செயல்பாடுகளுக்கு மதச் சாயம் பூச முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. மனித குலத்துக்கு எதிரானபயங்கரவாதத்தை எந்த ஒரு மதமும் அங்கீகரிக்கவில்லை. வன்முறைகள், மனிதர்களை கொலை செய்வது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. துல்லியமான கண்காணிப்பு தற்போது உலகத்துக்கு அவசியமாக உள்ளது. இதில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில், நமது முன்னேற்றத்தின் நோக்கத்துக்கு பங்களிக்காத விஷயங்களில் நாம் சக்தியை செலவழிக்க முடியாது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில், வறுமையின் வாடும் மக்கள் பலர் உள்ளனர். அங்கு நிலவும் கல்வி அறிவின்மை, பாலியல் பாகுபாடு, சுகாதாரமற்ற சூழல் போன்றவை கவலை அளிக்கக் கூடியதாக உள்ளன. மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தும் ஒருங்கிணைந்த நோக்கம்தான் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு எதிரான பயங்கரவாத சக்திகளை உறுதியான கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அமைதியும் வளர்ச்சியும்தான் இணைந்து செல்லும். 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பயங்கரவாதத்தை எதிர்த்து, தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தங்களின் இன்னுயிரை இழந்தவர்கள் நமது நினைவில் இருப்பார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நாளில், பயங்கரவாதம் போன்ற தீய சக்திகளை எதிர்க்கவும், உள்நாட்டு வளர்ச்சிக்கான பாதையை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிப்போம்.

No comments:

Popular Posts