Monday 31 December 2018

அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த லட்சிய நடிகர்

தமிழ் திரை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சிம்மகுரலோன் சிவாஜி கணேசன் ஆகியோர் தங்களது நடிப்பால் மக்களிடம் புகழ்பெற்றவர்கள். இத்தகைய சாதனை மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நடிகராக இருந்து பெயர் பெற்றவர் எனது அப்பா லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். திரையுலகில் தமிழ் பேசி நடித்து பெருமை பேசிய நடிகர்கள் இருந்தாலும், என் அப்பா பேசிய தமிழை பார்த்து தமிழே பெருமைப்பட்டு கொண்டது என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம் அந்த அளவுக்கு தெளிவான உச்சரிப்பும் அதற்கு துணையாக இருந்த இயற்கையாக அமைந்த அவரது வெண்கல குரலும்தான். இயல், இசை, நாடகம் என்று எடுத்துக் கொண்டால் அத்தனையிலும் தேர்ச்சி பெற்றவர் என் தந்தை. அந்த காலத்தில் காலையில் படப்பிடிப்புக்கு சென்றால் ஆறு மணி வரை படப்பிடிப்பில் இருப்பார். மாலையில் மேடை நாடகத்தில் நடிப்பார். இரவு கட்சி கூட்டத்தில் பேசுவார். மங்கல நிகழ்ச்சி என்றாலும், கொள்கைக்கு ஆதரவாக மறியல் போராட்டம் என்றாலும் முதலில் செல்பவர் அவராகத்தான் இருப்பார். வீட்டில் அவரை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கும். அவருடைய பிள்ளைகளான எங்களை தம்பிகள் என்றுதான் அழைப்பார். அன்போடுதான் நடத்துவார். ஏதாவது தவறுகள் செய்து தாயார் எங்களை கண்டித்தால் அவருக்கு பிடிக்காது. கடுமையாக நடந்து கொள்வதால் இந்த சிறிய வயதில் அவர்களுக்கு புரியாது என்று சொல்லி எங்களை உட்காரவைத்து நல்லது எது? கெட்டது எது? என்று பொறுமையுடன் விளக்குவார். அறிஞர் அண்ணா மீது பற்றும், மரியாதையும் வைத்திருந்தார் என் தந்தையார். எனது மூத்த சகோதரருக்கு இளங்கோவன் என பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா தான். அப்பா முதன்முதலாக அறிஞர் அண்ணாவை சந்தித்ததே ஒரு ருசிகரமான சம்பவம்தான். அண்ணா தனது ‘சந்திரோதயம்’ நாடகம் நடத்துவதற்காக திருச்சிக்கு வந்திருந்தார். அப்போது நாடக அரங்கில் அவரது குழுவினருக்கு ஒப்பனை செய்யும் பணி ஒரு சில டிகே.எஸ் நாடகக்குழு நடிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது வாழ்நாளில் எப்படியாவது அண்ணாவை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்த என் தந்தையார் ஒப்பனை குழுவோடு அரங்கத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் தனக்கு ஒப்பனை செய்யும்படி சொல்ல, வேண்டா, வெறுப்புடன் அவரை உட்கார சொல்லி தன் கவனத்தையெல்லாம் அண்ணாவை தேடுவதிலேயே வைத்து கொண்டு உட்காந்திருப்பவருக்கு அறைகுறையாக சாயங்களை பூசிக்கொண்டிருந்தாராம் அப்பா. இவரை நம்பி உட்கார்ந்திருந்த அந்த நபரோ, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “ஏன் தம்பி அப்படி யாரை தேடுகிறாய்?” என்று வினவ அறிஞர் அண்ணா என அப்பா சொல்ல, “நீ தேடும் அறிஞர் அண்ணா நான்தான்” என்றாராம் சிரித்துக்கொண்டே. அன்று மேடையில் காகபட்டராக நடித்த அண்ணாவை, அன்றே தன் பொதுவாழ்வு தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார் என் தந்தை. அதேபோல எம்.ஜி.ஆர். ‘பாரத்’ பட்டம் பெற்றபோது அவரை பாராட்டுவதற்கு அவரது ராமாவரம் தோட்டத்திற்கு எங்களையும் அழைத்து சென்றார். அப்பா, முக்கிய விஷயங்கள் பேசிய பிறகு என் தம்பி செல்வராஜை, (அப்போது அவனுக்கு எட்டு வயது) பார்த்து “என்ன படிக்கிற?” என்று மக்கள் திலகம் கேட்டார். “நான் உங்கள மாதிரி நடிப்பேன்” என்று துடுக்காக என் தம்பி பதில் சொல்ல அவர் ஆச்சரியப்பட்டு “எங்கே நடித்து காட்டு பார்ப்போம்” என்றார். தம்பி சிறிது கூட கூச்சப்படாமல் அப்போது பிரபலமாக இருந்த “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...” என்ற முழுப்பாடலை பாடி அவர் போலவே நடித்து காட்டியபோது, “என்னை போலவே நடிக்கிறாயே” என்று கூறி அசந்து போய் விட்டாராம். அடுத்த நாள் சத்யா ஸ்டுடியோவில் நடக்கவிருந்த பாரத் பாராட்டு விழாவுக்கு இவனை மேடைக்கு அழைத்து வாருங்கள். இவனுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்றார். அடுத்த நாள் சொன்னது போலவே என் தம்பியை மேடைக்கு அழைத்து, பேனா ஒன்றை பரிசாக கொடுத்து, “நன்றாக படித்து பட்டம் பெற்ற பிறகே நடிக்க வர வேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டார். இன்னும் அந்த பேனாவை என் தம்பி புரட்சிதலைவர் நினைவாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார். இப்படி தனது சொந்த இளைய சகோதரர் போலவே அப்பாவை நேசித்தார் புரட்சி தலைவர். நாங்கள் அவரை ‘பெரியப்பா’ என்றுதான் அன்போடு அழைப்போம். அறிஞர் அண்ணாவுக்குப்பின் அப்பாவை அரசியலில் அன்பாக ஆதரவு கரம் நீட்டி அரவணைத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அப்பா வெற்றி பெற்றார். அப்போது எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று முதல்வராக பதவி ஏற்க போகிறார். அந்த நேரம் நடந்த ஒரு சம்பவம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. புரட்சி தலைவர் பதவி ஏற்புக்கு முதல்நாள் அப்பாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. உடனடியாக அப்பா, எம்.ஜி.ஆரால் கோட்டைக்கு அழைக்கப்படுகிறார். கோட்டைக்கு அப்பாவுடன் நானும், என் அண்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரகுமாரோடு சென்றேன். எம்.ஜி.ஆர். அறைக்கு சென்றவுடன் அவர் அப்பாவை பார்த்து, “ராஜு நீங்களும் ஒரு அமைச்சராக இருக்க வேண்டும். இது என் விருப்பம்” என்றார். அப்பா உடனே, “அமைச்சர் பொறுப்பெல்லாம் வேணாம் அண்ணே” என்றார். “தம்பி நீங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஓட்டுப்போட்ட தொகுதி மக்கள் கேட்பார்களே” என்றார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து விடாப்பிடியாக “எந்த அமைச்சரின் துறையாக இருந்தாலும் கேளுங்கள். வேண்டாம் என்று சொல்லக்கூடாது” என்றார். அதற்கு அப்பா வேடிக்கையாக “அப்படியானால் முதல்-அமைச்சராக இருக்கிறேன்” என்றார். இதைக்கேட்டதும் புரட்சி தலைவர் உரக்க சிரித்து விட்டார். “பதவி வேண்டாம் என மறுப்பதற்கு, இப்படி ஒரு பதிலா?” என்று கூற அங்கிருந்த எல்லோரும் சிரித்து விட்டனர். பிறகு அப்பாவுக்கு மாநில சிறுசேமிப்பு துணைத்தலைவர் பதவி அளித்து, அமைச்சருக்கு உண்டான அனைத்து தகுதிகளும் கொடுத்து, தன் அறைக்கு அருகிலேயே இவருக்கும் அலுவலக அறை ஒதுக்கி அழகு பார்த்தார் புரட்சி தலைவர். அப்பா நடிகர் சங்க தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நலிந்த நாடக கலைஞர்களுக்கு பல திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியவர். அதேபோல மிகுந்த மனித நேயம் மிக்கவர். யார் என்ன உதவி கேட்டு வந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வார். அப்பா மறைவதற்கு சில தினங்கள் முன்னால், எங்களிடம் கைப்பட தனித்தனியாக கடிதம் எழுதி கொடுத்தார். அதில் அவர் பிறந்து வளர்ந்த ஊரான சேடப்பட்டியில் சொந்தமாக மணிமண்டபமும், இலவச மருத்துவமனையும் அமைக்க வேண்டும், அது தான் பிறந்த ஊர்மக்களுக்கு பயன்பட வேண்டும் என எழுதி இருந்தார். தற்போது அவரின் விருப்பதிற்கு இணங்க அந்த பணியை மேற்கொண்டிருக்கிறோம். விரைவில் அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

No comments:

Popular Posts