Monday 19 November 2018

மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...

இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...

காட்சி உலகம்...

இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.

பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப ்பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.

இணையக் கல்வி அவசியம்

பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது. வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

வகுப்பறை நிர்வாகம்

ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.

வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.

தேவை சுயபரிசோதனை

மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.

வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...

ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.

கற்பித்தலும், கற்றலும்...

கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts