Sunday 21 October 2018

சரித்திர சாதனையாளர் ‘ஆல்பிரட் நோபல்’

சரித்திர சாதனையாளர் ‘ஆல்பிரட் நோபல்’ ஆல்பிரட் நோபல் இ ன்று(அக்டோபர் 21-ந் தேதி) ஆல்பிரட் நோபல் பிறந்த நாள். சாதனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அடைய துடிக்கும் மைல் கல் ‘நோபல் பரிசு’. டைனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் தான் இந்த பரிசின் தந்தை ஆவார். சுவீடன் நாட்டை சேர்ந்த இமானுவேல் நோபல் என்ற பொறியியலாளருக்கு 4-வது மகனாக பிறந்தார் ஆல்பிரட் நோபல். குடும்ப வறுமையின் காரணமாக அவருடன் பிறந்த 8 பேரில் இவரும், மேலும் 3 சகோதரர்களும் மட்டுமே குழந்தை பருவத்தை கடக்க முடிந்தது. பொறியியலாளரை தந்தையாக கொண்டதாலோ என்னவோ இவருக்கு வேதியியல் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது 18-வது வயதில் பாரீஸ் சென்று ஜான் எரிக்சன் என்பவரிடம் 4 ஆண்டுகள் பணிபுரிந்து வேதியியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக எரிவாயு மீட்டரை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அதன் பின்னர் அவரது எண்ணமும், செயலும் முழுக்க முழுக்க நைட்ரோகிளிசரினுக்கு மாற்றாக எளிமையாக கையாளக்கூடிய வகையில் வெடிமருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நோக்கியே இருந்தது. அதன் முடிவில் கிடைத்தது தான் எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான வெடிபொருளான டைனமைட். 1867-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெடிபொருளுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் காப்புரிமை வாங்கினார். இதன் மூலம் 90 ஆயுத தொழிற்சாலைகளின் அதிபராகி செல்வ செழிப்புடன் வாழ்ந்தார். 1888-ம் ஆண்டு நோபல் இறந்துவிட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில் மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் உண்மையில் இறந்தது அவருடைய சகோதரர் லுக்விட் தான். இவ்வாறு நாளிதழில் வெளியான மரண அறிக்கை ஆல்பிரட் நோபலை வேதனையடைய செய்ததுடன், அவருக்கு தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனால் தான், எக்காலமும் தன்பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நோபல் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களுக்கும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்க திட்டமிட்டார். மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்க முடிவு செய்தார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதற்காக தனது சொத்துகளின் பெரும் பங்கை அந்த அறக்கட்டளையின் பேரில் உயில் எழுதி வைத்திருந்தார். அவ்வளவு பெரிய மனம் படைத்த ஆல்பிரட் நோபலுக்கு கணிதத்துறை மீது என்னதான் கோபமோ என்று தெரியவில்லை. அறிவியலின் அரசியாக கருதப்படும் கணிதத்திற்கு இந்த பரிசு வழங்க அவர் அனுமதி வழங்கவில்லை. அவரது மறைவிற்கு பிறகு 1901-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்போது வரை நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. -நெல்லை கணேஷ்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts