Saturday 20 October 2018

துப்பாக்கி; தற்காப்புக்கா, தற்கொலைக்கா?

துப்பாக்கி; தற்காப்புக்கா, தற்கொலைக்கா? நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பெருமையாக பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை செய்தியாக வருகிறது. ஆனால் அந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் உஷாராக நல்ல மனநிலையுடன் ஏந்திய துப்பாக்கிக்கு மரியாதை அளித்தால் தான் பாதுகாப்பு முழுமையாகும். சமீப கால நிகழ்வுகள் அச்சம் ஊட்டும் வகையாக அமைந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக நாட்டில் பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ், ராணுவம் அதையே சொந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சகட்டு மேனிக்கு துப்பாக்கி சுடும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.விழுப்புரத்தில் நடந்த கொடுமை எந்த பெண்ணுக்கும் வாய்க்கக்கூடாது. டாக்டர் ஆகணும்னு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ மேல்படிப்பு படிக்கும் சரசுவதி ஒருதலைக் காதல் கொடூரன் கதிர்வேலால் சுடப்பட்டு செத்தாள் என்பது ஒப்புக்கொள்ள முடியாத நிகழ்வு. முப்பது வயதான கதிர்வேல் ஆயுதப்படை காவலர். பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவில் பணிபுரிந்தார். அவருக்கும் அவரது மாவட்டத்தை சேர்ந்த சரசுவதிக்கும் பேஸ் புக் மூலம் நட்பு. அதுவே காதலாக மலர்ந்தது. டிஜிட்டல் உலகில் மொபைல் போன் எந்த அளவுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சரசுவதி வீட்டிலும் இருவர் நெருக்கத்திற்கு தடை சொல்லவில்லை என்கிறார்கள். நர்ஸ் படிப்பு படித்துக்கொண்டிருந்த சரசுவதிக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது பிறந்த நாள் கொண்டாடுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன் பெற்றோர் இல்லத்தில் சரசுவதி தங்கியிருந்த போது காவலரும் பரிசுப்பொருளுடன் காதலிக்கு வாழ்த்து சொல்லி தொடர்ந்த உரையாடல் வாக்குவாதத்தில் முடிந்தது. கதிர்வேலுக்கு சரசுவதி சில ஆண் நண்பர்களோடு பழகுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை வைத்து எழுந்த சண்டையில் ஆத்திரமுற்ற கதிர்வேல் அரசு அளித்த கைதுப்பாக்கியால் காதலியை சுட்டு அதோடு நிற்காமல் தன்னையும் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டது கொடூரமான சம்பவம். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து பதறியடித்து வந்த பெற்றோருக்கு எப்படி இருக்கும்? இப்படி பலி கொடுக்கவா ஆசை மகளை வளர்த்தார்கள்? அவளது வாழ்நாள் குறிக்கோள் டாக்டராகி ஊர் மக்களுக்கு சேவை செய்வது தவிடு பொடியாச்சே!விடுப்பில் வந்த காவலர் எவ்வாறு துப்பாக்கி கையில் வைத்திருந்தார் , அதுவும் காதலியை பார்க்க வந்த இடத்தில் என்பது முதல் விதி மீறல். உதவி ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தான் கைதுப்பாக்கி கொடுக்கப்படும். ஆயுதப்படை காவலருக்கு நீள துப்பாக்கி கொடுக்கப்படும். அதுவும் அவர்கள் காவல் பணியில் இருக்குபோது மட்டும். பணி முடிந்ததும் ஆயுதத்தை கிடங்கில் ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது காப்பில் உள்ள தலைமை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவேட்டில் பதிய வேண்டும். இவ்வளவு நடைமுறைகள் இருந்தும் விதிகளை மீறும் துணிவு எப்படி வந்தது? இன்னொரு வேதனையான சம்பவம். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உத்தரபிரதேச பிரிவு உயர் அதிகாரி விவேக் திவாரி தன்னுடன் பணி செய்யும் பெண் ஊழியருடன் காரில் வீடு திரும்புகையில் வாகன சோதனைக்கு காவலர்கள் நிறுத்த திவாரி காரை நிறுத்தாதலால் துப்பாக்கி சூடு நடத்தியதில் திவாரி காயமுற்று கார், தடுப்பு சுவர் மீதி மோதி நின்றது. காயமுற்ற காரில் இருந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திவாரி உயிரிழந்தார். நொடிப்பொழுதில் ஒரு காவலரின் அவசர தரமில்லா செயலால் ஒரு சாமானியன் உயிர் போயிற்று. இது செப்டம்பர் 29-ந் தேதி நடந்தது. காவலர் சவுதிரி மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் போன உயிர் திரும்பாது. அரியானா மாநிலத்தில் நீதிபதியிடம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நீதிபதியின் மனைவி மகனை தனது துப்பாக்கியால் சுட்டதில் நீதிபதி மனைவி உயிரிழந்தது அதிர்ச்சியூட்டும் சம்பவம். இது சில நாட்கள் முன் நடந்த சம்பவம்.துப்பாக்கி கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு வகை திமிர் வருவதற்கு காரணம் என்ன? துப்பாக்கி பயிற்சி என்பது துப்பாக்கி எப்படி சுடுவது என்பது மட்டுமல்ல எப்போது யார் மீது எவரது உத்தரவில் என்பதுதான் முக்கியம். இதைத்தான் திரும்ப திரும்ப காவலர்களுக்கு வலியுறுத்த வேண்டும். காவலர்கள் மிகுந்த மன அழுத்தம் தரும் பணியில் இருக்கிறார்கள் என்பது உண்மை. இருப்பத்தி நான்கு மணி நேர பணி எந்நேரமும் எங்கே வேண்டுமோ அங்கு உடனடி பணியில் அமர்த்துவார்கள். வேளைக்கு சாப்பாடு கிடைக்காது. சரியான கழிப்பிடம் இருக்காது. குடும்பத்தை கவனிக்க முடியாது. பண்டிகை நாட்களில் தான் வேலை பளு அதிகம். இத்தகைய சூழலில் பலரது மனநிலை பாதிக்கப்படுகிறது. இங்குதான் மேற்பார்வையிடும் அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமாகிறது. இந்திய காவல் அமைப்பு ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆண்டவர்கள் அவர்களுடைய வசதிக்கு காவல் பணியை வரைமுறை படுத்தினார்கள். அவர்களது ஆட்சிக்கு பாதிப்பு வராத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பு என்பது பெயரளவில் தான்! இந்த நிலை சுதந்திரம் பெற்ற பிறகு வெகுவாக மாறவில்லை என்பது வருத்தமளிக்கும் நிலை. காவல் துறை நவீனமயமாக்கலில் பல உபகரணங்கள் ,தொலை தொடர்பு சாதனங்கள் நவீன துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன. ஆனால் அதை பராமரிக்கும், உபயோகிக்கும் காவலருக்கு சரியான பயிற்சி அளிப்பதில் தேவையான அளவு கவனம் செலுத்துகிறோமா என்பது கேள்விக்குறி. இந்திய காவல்துறையை சீரமைக்க 1977- ம் வருடம் தரம்வீரா போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் 2006- ம் வருடம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு ஓய்வு பெற்ற டிஜிபி பிராஷ் சிங்க் தாக்கல் செய்த பொது நல வழக்கு விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்டது. சுதந்திரம் பெற்று முப்பது ஆண்டுகள் கழித்து காவல்துறை சீரமைக்க கமிஷன் போடப்படுகிறது. கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கவில்லை. 1996- ம் வருடம் உத்தர பிரதேச ஓய்வு பெற்ற டிஜிபி பிரகாஷ் சிங் தரம்வீரா கமிஷன் பரிந்துரை அமலாக்கவேண்டும் என்ற பொதுநல வழக்கு பத்து வருட விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்ற ஆணை இடப்பட்டது. அதற்கு பிறகும் பல மாநிலங்கள் முறையாக பரிந்துரைகளை அமல் படுத்தவில்லை. பிரகாஷ் சிங்க் இன்னும் உச்ச நீதி மன்றத்தில் தனது தள்ளாத வயதில் போராடிக்கொண்டிருக்கிறார். நாட்டில் இயங்கும் காவல்துறை, இருக்கும் பிரச்சினைகளை தாங்கி கொண்டு இருந்த இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டில் எல்லாம் மெதுவாகத்தான் நடக்கும் என்பதற்கு காவல் சீரமைப்பு ஒரு எடுத்துக்காட்டு. சிறப்பான வழிகாட்டுதல் 1977-ல் மத்திய போலீஸ் கமிஷன் கொடுத்தது. நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையடையவில்லை. மக்கள் சேவை ஒன்றே நேர்மையான போலீசுக்கு அழகு. அத்தகைய திறமை வாய்ந்த காவலர்களுக்கு உரிய பயிற்சி அவசியம். முதல் கட்ட பயிற்சியோடு பணியில் மன அமைதிக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூருவில் உள்ள மனவள மருத்துவ சிகிச்சை மையம் நிம்ஹான்ஸ் உதவியோடு உளவியல் சார்ந்த பயிற்சி தமிழக காவல்துறையினருக்கு அளிக்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி ஒரு பக்கம், அதே சமயம் பணியில் காவலர்களுக்கு மன அழுத்தம் கொடுக்காத வகையில் போலீஸ் நிர்வாகம் அமைய வேண்டும். உளவியல் மருத்துவர் காவல் துறைக்கு அவசியம். மனரீதியாக பாதிக்கப்பட்ட பணியாளர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க உதவும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts