Saturday, 22 September 2018

கேளுங்கள்... வெல்லுங்கள்!

கேளுங்கள்... வெல்லுங்கள்! ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது நம் பழமொழி. திருவள்ளுவர் கேள்வி ஞானம் குறித்து இப்படிக் கூறுகிறார்... ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’. சான்றோர்கள் சொன்னதை காது மூலமாகக் கேட்டுச் சேகரித்த ஞானம் ஒருவரது மிகப் பெரிய சொத்து. அது மற்ற செல்வங்களை எல்லாம் விட மேலானது. அரிஸ்டாட்டில் சொன்னதை கவனமாகக் கேட்டு மாவீரன் அலெக்சாண்டர் சம்பாதித்தது செவிச்செல்வம். அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உலகையே வென்றுவிட்டார் அவர். ‘கேள்’ என்ற வார்த்தைக்கு கவனமாகக் கேள், சொன்னதைக் கேள், கேள்வி கேள் என்று மூன்றுவிதமான பொருள் காணலாம். இருப்பினும் நாம் இங்கு, ‘கவனமாகக் கேள்’ என்ற பொருளில் மட்டும் விவாதிக்கப் போகிறோம். கவனித்துக் கேட்கும் பண்பு இல்லாதது நமக்கு இருக்கும் முக்கியக் குறைபாடு. எப்போதும் ஓயாமல் பேசிப் பழகிய நாம், அந்த அளவுக்கு கவனமாக செவிசாய்த்துப் பழகவில்லை. இதை சாதாரண குறையாக எண்ணிவிடக் கூடாது. எளிதில் அகற்றிவிடக்கூடிய குறையும் அல்ல இது. பல கல்லூரி விழாக்களுக்குச் சென்றுவந்த அனுபவம் எனக்கு உண்டு. விழா அரங்கில் மாணவர்களை கொண்டுவந்து அமரவைக்கவே படாதபாடு படுகிறார்கள் சில முதல்வர்கள். பிறகு அவர்கள் அமைதி காக்க ஆசிரியர்களை அவர் களுடனே அமரவைக்கிறார்கள். கல்லூரி முதல்வர் பேசும்போது மாணவர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை. நான் பேசும்போதும் சில மாணவர்கள் சக மாணவர்களிடம் உரக்கப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த வேளைகளில் நான் பேச்சை நிறுத்திவிட்டு அந்த மாணவனிடம், ‘நீங்கள் தெரியப்படுத்த ஏதாவது செய்தி இருந்தால் அதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்பேன். குறிப்பிட்ட மாணவரின் எதிர்வினை என்னவாக இருக்கும் தெரியுமா? ‘நான் பேசவே இல்லையே?’ என்பதுதான் அது. ‘நான் உங்களது விருந்தினர், உங்களது முதல்வர் அழைத்ததால் வந்திருக்கிறேன். எனது வாழ்க்கையில் இரண்டு மணி நேரத்தை உங்களுக்குத் தர வந்துள்ளேன். உங்களுக்கு எனது பேச்சுப் பிடிக்கவில்லை என்றால் இப்போதே போய் விடுகிறேன்’ என்று சொல்லிவிடுவேன். அதற்குப் பின் அந்த மாணவர்கள் அமைதியாகி என்னுடன் நல்ல உரையாடலுக்குத் தயாராகிவிடுவார்கள். ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதுவது இல்லை. இரு தரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்டு, சாட்சிகள் மூலம் உண்மை என்ன என்று அறிந்த பின்னரே தீர்ப்பு எழுதப்படும். இதுதான் சட்டத்தின் நீதி, இதுவே அறிவியலின் அடிப்படை விதி. நீங்களும் இது தரப்பு உண்மைகளையும் கவனமாகக் கேட்டால் மட்டுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். அமெரிக்கர்கள் நிலவில் கால் பதிக்கவில்லை, அது ஒரு பெரும் மோசடி என்று ஒரு சில சந்தேகப்பிராணிகள் குரல் எழுப்பினர். அது காட்டுத்தீ போலப் பரவியது. ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) அந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்தது. அந்த விளக்கங் களைக் கவனமாகக் கேட்டவர்கள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் 1969 ஜூலை 20-ம் தேதி நிலவில் கால் பதித்தது உண்மைதான் என்று நம்பினர். கவனமாகக் கேட்டால்தான் தெளிவு பிறக்கும், சந்தேகம் பறக்கும். மனதைச் சிதறவிடாமல் இருப்பது எளி தல்ல, அதற்கு மனத்திடம் தேவைப் படுகிறது. அப்படியே மனம் வேறெங்கும் சென்று விட்டாலும் அதை மீண்டும் குறிப்பிட்ட விஷயம் நோக்கிக் குவிப்பதற்கு மனப் பயிற்சி அவசியமாகிறது. தினமும் காலை எழுந்ததும் 10 நிமிடங்கள் எதையும் சிந்திக்காமல் மனதை வெற்றிடமாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த முயற் சியின் ஆரம்பத்தில், சிந்தனை எங்கெங் கேயோ சிறகடிக்கும், ஏதேதோ எண்ணங் கள் அலை பாயும். படிப்படியாக, எதையும் எண்ணாத ஒரு நிலைக்கு வாருங்கள். பல நாள் பயிற்சிக்குப் பின் மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒரு பொருள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அது குறித்து நிறையக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு, வணிகம் போன்ற அடிப்படைப் பாடங்கள் மீது ஈடுபாடு காட்டிப் பாருங்கள். இதை அனைத்தும் உங்களை ஈர்க்கவேண்டிய வை, அற்புத விஷயங்கள் கொண்டவை. பூமி தோன்றிய வரலாறு, மனிதனின் பரிணாமக் கதை, நிலவில் மனிதன் காலடி பதித்த நிகழ்வு, கணினி கண்டுபிடிக் கப்பட்ட விதம் இவை எல்லாமே உங்கள் கருத்தையும் மனதையும் கவரும். ஆழ்ந்து கவனிக்கும் பழக்கம் கல்விக் கூடங்களில் மட்டுமல்ல, பிற்காலத்தில் பணி செய்யும் இடத்திலும் வெற்றியை தேடித் தரும். அங்கு, கவனித்துக் கேட்பது ஒரு முக்கிய திறனாகவே கருதப்படுகிறது. கவனமாகக் கேட்கும் பழக்கம் ஏற்பட்டால் பொறுமை, நம்பிக்கை, சிந்தனை, அறிவு மனப்பான்மை, நேர்மை போன்ற நற்குணங்கள் வளரும். நல்ல ஆளுமைக்கு அடித்தளமாகும். ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனிக் காமல் குறுக்கிட்டுப் பேசுவதும், அவரது பேச்சை நாமே முடித்துவைப்பதும் அவரை அவமதிப்பது ஆகும். ஒருவர் பேசும்போது அவரது பேச்சை கவனமாகக் கேட்பதே நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை. மனஅழுத்தம், வருத்தத்தில் உள்ளோரின் பேச்சுக்கு காது கொடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் உதவிதான். நாம் பேசும்போது ஒருவர் எவ்வாறு செவிமடுக்கிறார், அவரது உடல்மொழி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்நபர் நம் பேச்சை மதிக்கிறாரா, இல்லையா எனத் தெரிந்துகொண்டுவிடலாம். இன்று இணைய வசதி வந்துவிட்டது. ஐன்ஸ்டீன், ரிச்சர்ட் பீமென், பெர்னாட்ஷா, ரூசோ, சர்ச்சில், நேரு, கலாம் போன்ற பெருமக்களின் பேச்சைக் கேட்க விரும்பினால் அந்த நிமிடமே கேட்டுவிடலாம். அதற்குப் பதிலாக, அர்த்தமற்ற சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேட்பதற்கும், கவனமாகக் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. கவனமாகக் கேட்க தனி முயற்சி எடுக்க வேண்டும். கவனமாகக் கேட்கும் பழக்கம் இல்லாதவருக்கும் காது கேளாதவருக்கும் வேற்றுமை இல்லை. ஒரு கேள்வி எழுப்பப்படும்போது அந்த வினாவில் இருக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டவர்- கேட்டவர், அந்தக் கேள்வி ஏன் கேட்கப்பட்டது என்று சிந்திப் பவர்- கவனமாகக் கேட்டவர், கேள்வியையே புரிந்துகொள்ளாதவர்- ‘சும்மா’ பார்த்துக் கொண்டிருந்தவர். வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும் உன்னிப்பாகக் கேட்கும் பழக்கம் கொண்டவர் களே. வெற்றிபெறத் தவறியவர்கள் பலரும் ஏதாவது பதிலை உடனே சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கேட்ட வர்கள் என்ற ஸ்டீபன் கோவே என்ற சுயமுன்னேற்ற ஆசிரியர் கூறுகிறார். குடும்பப் பிரச்சினை, கடுங்கோபம், சோகம், உடல்வலி, கடன் தொல்லை இருப் பவர்களால் கவனமாகக் கேட்க முடியாது. எனவே இதுபோன்ற மனஉளைச்சல்கள் ஏற் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியான இடத்தில்தான் உன்னிப்பாகக் கவனிக்க முடியும். இன்று அமைதியான சூழ்நிலை அரிதாகிவிட்டது. அமைதியாக இருக்கும் பழக்கமே இன் றைய தலைமுறையிடம் இல்லை. எப்போதும் விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று எங்கும் இரைச்சலாக இருக்கிறது. சத்தம் தீமையை ஏற்படுத்தக்கூடியது என்ற உணர்வே நமக்கு இல்லை. ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்க நம் சமூகம் பழக வேண்டும். கவனமாகக் கேட்கும்போது எச்சரிக்கை இருக்கும். தாய் வரும் சத்தத்தை குழந்தை எப்படி கவனமாகக் கேட்கும் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள், புல்வெளியில் எழும் சத்தம் சிங்கம் ஏற்படுத்தியதா, முயல் உண்டாக் கியதா என்று அறியும் அதிதிறன் பெற்றி ருந்தார்கள், அதனால்தான் பரிணாமத்தில் வென்றார்கள். கவனமாகக் கேட்பது, மனித இனம் அவசியம் கற்க வேண்டிய வாழும் கலை!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts