Sunday 23 September 2018

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா?

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா? டி.பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர், அனைத்திந்திய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மூத்த குடிமக்கள், விதவை பெண்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 1959-ம் ஆண்டு வரை பணிக்கொடை அடிப்படையில் 10 சதவீதம் அரசு தரப்பிலும், 10 சதவீதம் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்தும் பிடிக்கப்பட்டு சி.பி.எப். என்னும் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி ஒருதொகையும், பணிக்கொடையும் ஓய்வு பெறும்போது வழங்கப்பட்டது. அதன்பிறகு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலுக்கு வந்தது. இந்த முறையில், அரசு வழங்க வேண்டிய 10 சதவீத பங்களிப்பு நிறுத்தப்பட்டது. ஊழியரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும் ஓய்வூதிய நிதியாக சேமிக்கப்பட்டு, அதன் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து, அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டதே ஒழிய, ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீத சம்பளத் தொகை முதலீடு செய்யப்படவில்லை. இது மத்திய, மாநில அரசுகளின் மெத்தனபோக்கு. தற்போது, அரசு வருவாயில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்போது, அது பெரும் சுமையாக பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் பிரிவினர்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் அவர்கள் கொடுக்கும் 10 சதவீத பங்களிப்பில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர் வேறு எந்த தொழிலிலும் ஈடுபட்டு பொருள் ஈட்ட முடியாது. ஓய்வுபெறும் அன்று அவர் வாங்கிய ஊதியம் பாதியாக குறைக்கப்படுகிறது (பழைய ஓய்வூதிய திட்டத்தில்). வீடு வாடகை படி, மருத்துவபடி, போக்குவரத்துபடி, குழந்தைகள் கல்விப்படி, சீருடை படி போன்றவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்றன. ஆனால், ஒரு அரசு ஊழியர்கள் ஓய்வுப் பெற்றப் பிறகும் அவருடைய செலவுகள் அப்படியே தொடர்கின்றன. குறைந்த விலையில் அவருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. வீட்டு வாடகை தவிர்க்க முடியாது. வருமான வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றில் விலக்கு இல்லை. அரசு வழங்கும் இலவச சலுகைகள் அவரை சேருவதில்லை. இப்படி திடீரென வருமானம் குறையும்போது, பழைய ஓய்வூதிய திட்ட முறைப்படி வாழ்க்கை நடத்துவதே கடினம். நிலைமை இப்படி இருக்கையில், நிலையான வருமானம் உறுதி செய்யப்படாத புதிய ஓய்வூதிய திட்ட முறைப்படி ஓய்வூதியம் பெற்று ஒருவரால் எப்படி வாழ முடியும்? அரசின் பொருளாதார கொள்கைகளாலும், பெருமுதலாளிகளின் லாப ஆசைகளாலும் விலைவாசி அன்றாடம் உயர்கிறது. இந்த சூழ்நிலையில், குறிப்பிட்ட நிலையான தொகையை ஓய்வூதியமாக பெற்றுக்கொண்டு ஓய்வூதியர் ஒருவர் எப்படி செலவீனங்களை சமாளித்து கொள்வார். சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அவரால் எப்படி கவுரவத்துடன் உயிர் வாழ முடியும்? அரசு விரையம் செய்யும் செலவீனங்களை குறைத்து, நிதி மிகுந்தவர்களிடம் அதிக வரி வசூல் செய்து அரசு வருமானத்தை பெருகிட செய்வது ஆட்சியார்களின் கடமை. அவர்களது இயலாமைக்கு நேர்மையாக அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பலியாவதா? ஆகவே, சட்டப்படி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஓய்வூதியம் என்பது சொத்துரிமை போன்ற ஒரு உரிமையாகும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவதுதான் நாட்டின் சிறந்த வளர்ச்சிக்கு நல்லது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts