Saturday 15 September 2018

கல்வியே உங்கள் ஆயுதம்

‘கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ என்றார் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவரே கல்வியின் முக்கியத்துவத்தை இவ்வளவு தூரம் வலியுறுத்தியிருக்கிறார். கல்வி கற்பதற்கு கண்களைப் பயன்படுத்தவில்லை என்றால் அவை வெறும் புண்கள்தான் என்கிறார் அவர் அழுத்தமாக. கல்வி கற்ற கண்களின் மூலமாக நாம் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தெளிவான பார்வை நமக்குக் கிடைக்கும். ‘அறிவியல்’ என்ற கண்ணாடியை அணிந்து பார்ப்பதாக இருந்தால் இந்த உலகம் உங்களுக்கு இன்னும் அற்புதமாகத் தெரியும். கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள்தான் கல்வி என்று எண்ணிவிடக் கூடாது. அனேக பட்டங்கள் பெற்றவர்கள் அதிகம் கற்றவர்கள் என்றும் புரிந்து கொள்ளக் கூடாது. அறிவிலும், சிந்தனையிலும், நடத்தையிலும், மனப்பான்மை யிலும், சுய ஒழுக்கத்திலும், சமூக அக்கறை யிலும் விரும்பத்தக்க மாற்றங் களை அடைந்தவர்களை மட்டுமே கல்வி கற்றவர் என்று ஒப்புக் கொள்ள முடியும். தமிழ்மொழிப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற சிலருக்கும் தமிழில் சிறப்பாகப் பேசத் தெரியவில்லை. ஆனால் பள்ளிக்கூட வாசலையே மிதிக்கா தவர், டீக்கடை நாளிதழ் வாசிப்பா லேயே தமிழறிவை வளர்த்தவர் தமிழில் செம்மையாகப் பேசுகிறார். உலக நிகழ்வுகளை விவாதிக் கிறார். இந்த நிலைதான், ஆங்கிலம், கணிதம், பொறியியல் கற்ற பலருக்கும். கல்வி கற்க விருப்பம் இல்லாத வருக்கு யாராலும் கல்வி போதிக்க முடியாது. கற்கத் துணிந்தவரை யாராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. அரசுப் பள்ளிகளில் ஆர்வத் துடன் படித்து இன்று மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் எண்ணற்ற மாணவர்களை நாம் பார்க்கிறோம். இவர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். ‘கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணும் ஆகும்’ என்கிறது சீவக சிந்தாமணி. ‘கண்களால் பார்க்க வேண்டும் என்றால் கல்வி வேண்டும், அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் தரலாம்’ என்பது இதன் பொருள். பல்கலைக்கழகத்தில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்பதால் நாம் அந்தப் பாடத்தில் வல்லுநர் ஆகிவிட்டோம் என்ற மாயை மாணவர்களுக்கு வந்துவிடக் கூடாது. நாம் படித்தது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும். கணிதம், அறிவியல், பொறியியல் எனப் பல் துறைகளில் நிபுணர்கள் உண்டு. ஆனால் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. நமது கல்வி நிலையங்கள் இன்னும் உலகத் தரத்தின் உச்சத்தை எட்டவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் அறிவில் உலகத் தரத்தை எட்டலாம். அதற்கு சுயமாக கூடுதலாகக் கற்பதே வழி. தாங்களாவே கல்வி கற்று உயர்ந்த அறிஞர்களை Autodidact என்கிறார்கள். நமது நாட்டின் தலைசிறந்த கணித மேதை சீனிவாச ராமனுஜனும், அமெரிக்க அறிவியல் அறிஞர் வால்டர் பிட்ஸும் தாமாகக் கற்ற ஏகலைவர்கள். பள்ளிக்குப் போகாத வால்டர் பிட்ஸ், 12 வயதில் ‘கணித தத்துவம்’ என்ற நூலை மூன்று நாட்கள் நூலகத்தில் அமர்ந்து படித்து முடித்தார். அடுத்த நாள், நூலாசிரியருக்குக் கடிதம் எழுதி, நூலின் குறைகளை எடுத்துக் கூறினார். அந்தச் சிறுவனின் கடிதத்தைப் படித்த பெர்ட்ரண்டு ரசல், அவனை இங்கிலாந்துக்கு வரவைத்து படிக்க வைத்தார். சுயகல்வியாலேயே உளவியல், நரம்பியல், அறிவியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பிட்ஸ், சாதனைகள் பல புரிந்தார். ஓர் இளைஞனை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துவதே கல்வியின் நோக்கம் எனலாம். உங்களை ஒரு வேலை செய்யும் திறன் மிக்கவராகவும், மற்றவர்களைப் புரிந்துகொள்பவராகவும், சட்டத்தை மதிப்பவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், நேர்மறை மனப்பான்மை உடையவராகவும், ஒழுக்கமானவராகவும், சமுதாய நோக்கு மிகுந்தவராகவும் மாற்றுவது கல்வியின் நோக்கம். இவற்றை வளர்க்கும் இடம்தான் கல்விச்சாலை, இவற்றை வளர்க்க உதவு பவர்கள்தான் ஆசிரியர்கள். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் பூமி உருண்டை என்பது கூடத் தெரியவில்லை. இன்றோ அறிவியல் யுகத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் அறிவியல் படைப்புகள். இன்றைய நிலையிலும் பெரும்பாலானோர் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ளாமல் அறிவிலிகளாக வாழ்வது எவ்வளவு அவலமானது? ஆராய்ச்சியிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். தொழில்நுட்பத்திலும் நாம் முன்னணியில் இல்லை. இதனால்தான் நம்மால் உலகத்தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் தயாரித்த விமானங்களையும், கப்பல்களையும், வாகனங் களையும், கைபேசிகளையும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நீங்கள் கணிதத்திலும், அறிவியலிலும், ஆராய்ச்சியிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். கல்வி ஒருவருக்கு சிறந்த மனிதப் பண்பையும் கொடுக்க வேண்டும். அது இல்லை என்றால் கற்றவர் கல்வியை அழிவுக்குப் பயன்படுத்திவிடுவார். கணினி நிரல் எழுதத் தெரிந்தவர், அதை ஓர் ஆக்கபூர்வமான நிரல் எழுதுவதற்குப் பதிலாக வங்கியில் இருக்கும் இன்னொருவரின் பணத்தைத் திருடப் பயன்படுத்திவிடுகிறார். வரிசையில் திடீரென இடையில் புகுவது, தனது வீட்டைக் கழுவி அழுக்குத் தண்ணீரை சாலையில் விடுவது, நடைபாதையை ஆக்கிரமிப்பது போன்றவை நல்ல பண்புகள் அல்ல. ஆனால் இவற்றை கற்றவர்களும் செய்கிறார்கள். இவற்றைத் தவிர்ப்பதுதான், ஒழுக்கம் அல்லது அறம் என்று போதிக்கப்படும் மனிதப் பண்புகள். ஒழுக்கக்கேடுகள் இல்லாமல் இருப்பது உண்மையான கல்வி கற்றவர்களின் அடையாளம் எனலாம். ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவர் ஒரு சிறைச்சாலையை மூடுகிறார் என்றார் விக்டர் ஹியூகோ. நீதிநெறிக் கல்வி என்பது பிறரையும் நேசிக்க வைக்கும். அவர்களுக்கு இடையூறு தரக்கூடாது என்று அறிவுறுத்தும். தனது வசதி மட்டும் முக்கியம் அல்ல, மற்றவர்களின் நலனும் முக்கியம் என அறிவுறுத்தும். அறிவுடைமை அதோடு நல்ல குணமுடைமை என்பதுதான் உண்மையான கல்வியின் இரண்டு அடையாளம். கல்வி வாழ்க்கையின் நோக்கம் மட்டுமல்ல, கல்விதான் வாழ்க்கை. எப்படிப்பட்ட கல்வி கற்று நீங்கள் எப்படி உருமாறுகிறீர்கள் என்பது முக்கியம். ஓர் இரும்புக்கட்டியின் விலை 200 ரூபாய். அதை காங்கிரீட் கம்பியாக மாற்றினால் அதன் விலை 300 ரூபாய். அதை ஊசிகளாக மாற்றினால் 3 ஆயிரம் ரூபாய். ஆனால் அதையே கடிகார திருகு சுருள்களாக மாற்றினால் அதன் விலை 3 லட்சம் ரூபாய்! கல்வியின் மூலம் நீங்கள் உங்களை எப்படிப்பட்ட மனிதராகவும் மாற்றிக்கொள்ளலாம். அதைப் பொருத்து உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கல்வி என்பது எப்படி வருமானம் தேடுவது என்று மட்டுமல்ல, எப்படி வாழ்வது என்றும் சொல்லித் தரும். இளைஞர்கள், தங்கள் வாழ்நாளில் முதல் 25 ஆண்டுகள் மேற்சொன்ன கல்வியைக் கற்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் கற்ற கல்வியைப் பயன்படுத்தி பணியாற்ற வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் பலருக்கு வழிகாட்ட வேண்டும். இந்திய நாட்டில் பிறந்திருப்பதால் நாம் ஒவ்வொரு வரும் குறைந்தது 100 ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இந்த உலகையே மாற்றக்கூடிய ஆயுதம் கல்வி என்றார் நெல்சன் மண்டேலா. நாம் நம் நாட்டையாவது மாற்றிக் காட்டுவோம். கண் போன்ற கல்வியைக் கற்க நான்கு வழிமுறைகள் உண்டு.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts