Saturday, 15 September 2018

22 உலகை குலுக்கிய பயணங்கள்..

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த மூன்று மாமனிதர்கள் இந்த உலகுக்கு ஆற்றிய மாபெரும் பணிகள் இந்த உலகை மாற்றின, அல்லது இந்த உலகை மாற்றும் வல்லமை கொண்டவை எனலாம். அதில் ஒருவர் பயணி, இரண்டாமவர் உயிரியல் துறையின் இணையற்ற மேதை, மற்றொருவர் அரசியல் தலைவர்.

தொல்பொருள் ஆய்வாளர்கள் அள்ள அள்ளக் குறையாத அற்புதங்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருந்தவர்கள் மாயன் பழங்குடியினர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. முதாலாம் நூற்றாண்டு வரை மிகுந்த தொழில் நுட்ப அறிவுடன் வாழ்ந்துவந்த மெசோ அமெரிக்க பழங்குடியினரான மாயன்கள், இன்றைய மெக்சிகோவின் தென்பகுதி, மத்திய அமெரிக்க நாடுகளான குவாதிமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகிய பகுதிகளில் வசித்தவர்கள்.

சுமார் 60 லட்சம் பேராக இருந்த மாயன்களின் மக்கள் தொகை ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்குப் பிறகு சுருங்கத்தொடங்கியது. பின்னர் ஒட்டு மொத்தமாக அப்பகுதியில் வாழ்ந்த மாயன்கள் திடீரென குறிப்பிட்ட சில ஆண்டுகள் மாயமாய் மறைந்தார்கள். மீண்டும் மாயன் இனத்தவர்கள் தென்னமெரிக்காவின் சில நாடுகளில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படி இடையில் மறைந்து போன மாயன் இனம் என்ன ஆனது? என்று தேடிப் பயணித்தவர்கள் ஜான் லாயிட் ஸ்டீபன்ஸ் மற்றும் கேதர்வுட் ஆகியோர். (அவர்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிச்சென் இட்சா பிரமிடுகளை ஆய்வு செய்யப் பயணித்தவர் எட்வர்ட் ஹெர்பர்ட் தாம்சன்)

மனித குல வரலாற்றில் நம்ப முடியாத மர்மங்கள், பேரறிவாற்றல், அசாத்திய கலை நுட்பம் ஆகியவற்றில் தேர்ந்த மக்களாக மாயன் இனத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களின் மொழி மற்றும் அவர்கள் எழுதி வைத்த புத்தகங்கள் ஆகியன ஸ்பெயினின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதால், அவர்களைப் பற்றி முழுமையாக அறிய முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் இன்றைக்கும் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களது வானியல் அறிவு, கட்டிடக்கலை நுட்பம் ஆகியன இன்றைக்கும் அவிழ்க்க முடியாத புதிர்கள் நிறைந்தவை. அவற்றில் ஒரு சிலவற்றையாவது விடுவிக்க முயன்றவர் ஜான் லாயிட் ஸ்டீபன்ஸ்.

மனித இனத்தில் மகத்தான மாயன் நாகரிகம்

1805-ம் வருடம் நவம்பர் மாதம் 28-ந் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஸ்ரூஸ்பெர்ரி என்னும் இடத்தில் பிறந்தார் ஜான் லாயிட். அவருடைய தந்தை நீதிபதியாக இருந்த காரணத்தினால், இவரும் சட்டக்கல்லூரியில் படித்தார். பயணங்களின் மீதுள்ள காதலால் இத்தாலி, துருக்கி, ரஷியா, போலந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு பயணித்தார். அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த மார்டின் வான் பாரன், மத்திய அமெரிக்க பகுதிகளுக்கான சிறப்புத் தூதராக ஜான் லாயிடை நியமித்தார். அதன் காரணமாக அவரது பயணத்தின் தேவைகள், வாய்ப்புகள் அதிகரித்தன.

கேதர்வுட் என்கிற பிரபலமான ஓவியரை தற்செயலாக லாயிட் சந்திக் கின்றார். இருவருக்கும் மாயன் நாகரிகங் கள் பற்றி அறியும் ஆவல் இருப்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர். 1839-ம் வருடம் இருவரும் மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு பயணித்தனர்.

பயணிக்கவே முடியாத அடர்ந்த வனங்களின் வழியே அவர்கள் மிகுந்த சிரமங்களினூடே பயணித்த பொழுது, மாயன் வாழ்ந்து வந்த பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்ததை கண்டறிந்தனர். மாயன்கள் கட்டியிருந்த அதி நுட்ப கட்டிடங்கள், ஆலயங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இன்னும் மர்மங்கள் விடுவிக்கப்படாத பல வினோத சிலை வடிவங்கள் என் பலவற்றை அவர்கள் வெளிக் கொணர்ந்தனர். இப்படி 44 நகரங்கள் மீட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாயன்கள் எழுதிய நான்கு புத்தகங்கள் மட்டும் கிடைத்துள்ளன. மீதமிருந்த புத்தகங்கள் ஸ்பானியர்கள் ஆக்கிரமிப்பில் எரிக்கப்பட்டதையும் அறிய முடிந்தது.

1841 -ல் அவர்கள் இருவரும் இணைந்து ‘இன்சிடன்ட்ஸ் ஆப் டிராவல்ஸ் இன் சென்ட்ரல் அமெரிக்கா’ என்னும் நூலின் வழியே எழுதிய தகவல்கள் இன்றும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கின்றன. மாயன்கள் எழுதியிருந்த புத்தகங்கள் எரிக்கப்படாமல் இன்று கிடைத்திருந்தால் இன்னும் பல படி மனித அறிவுலகம் விரிவடையும் சாத்தியக் கூறுகள் இருந்திருக்கலாம்.

உலகின் உன்னதமான மாயன் நாகரிகம் பற்றி வெளி யுலகம் அறியச் செய்த ஜான் லாயிட் மற்றும் கேதர்வுட் ஆகியோரின் பயணம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை.

உலகை உலுக்கிய புத்தகத்தைத் தந்த பயணம்

ஜான் லாயிட் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் 1809-ம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிறந்தவர் சார்லஸ் டார்வின். ஆச்சரியமாக டார்வின் பிறந்த ஊரின் பெயரும் ஸ்ரூஸ் பெர்ரி தான். ஆனால் இது இங்கிலாந்தில் உள்ளது. மருத்துவம் படித்த டார்வின் அப்பொழுது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லாத காரணத்தினால் ஒரு குழந்தைக்கு நேரிடையாக அறுவை சிகிச்சை செய்யும் காட்சியைக் கண்டார். அதில் கிடைத்த கோர அனுபவம், அவரை மருத்துவத் துறையை விட்டு விலக வைத்துவிட்டது.

சிறு உயிரினங்கள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஈடுபட்டார். பின்னர் அவரது தந்தையின் வற்புறுத்தல் காரணமாக இறையியல் படித்தார். அதில் சிறப்பான தேர்ச்சி பெற்றாலும், அவரது மனம் அதில் செல்லவில்லை. தொடர்ந்து உயிரினங்கள் ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்பொழுது பிட்ஸ்ராய் என்பவர் தென்னமெரிக்க நாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு தான் செல்லவிருக்கும் பயணத்தில் இணையுமாறு டார்வினுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி எச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில் அவரோடு பயணத்தை தொடங்கினார்.

இரண்டாண்டுகள் மட்டும் திட்டமிட்டிருந்த அந்தப் பயணம் ஐந்தாண்டுகளுக்கு நீண்டது. வரலாற்றில் உலகை உலுக்கிய புத்தகமான ‘தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசஸ்’ (The origin of species) உருவாக இந்தப் பீகிள் பயணமே சார்லஸ் டார்வினுக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதால் இதனை ‘உலகை உலுக்கிய பயணம்’ என்று சொல்லலாம்.

இந்தப் பயணத்தின் பொழுது ஒரு பெரிய பனிப்பாறை கடலில் எழும்பி பெரிய அலையை உண்டு பண்ணியது. அப்போது டார்வின் வேகமாக ஒரு படகில் கடற்கரைக்கு சென்று துரித நடவடிக்கைகள் எடுத்து கரையில் நிறுத்தி இருந்த படகுகள் கடலுக்குள் சென்று விடாமல் காப்பாற்றினார். உடன் வந்த பயணிகளையும் காப்பாற்றினார். எனவே மாலுமி பிட்ஸ்ராய் அந்த இடத்துக்கு ‘டார்வின் குரல்’ என்று பெயர் சூட்டினார்.

அதே பயணத்தின் போது 1834-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல், டார்வினுடைய 25 வது பிறந்த நாள் வந்தது. அங்கே கடலில் ஒரு தீவு போன்ற மலை தென்பட்டது. அதனைப் பார்த்த பீகிளின் மாலுமி பிட்ஸ்ராய், அந்த குன்றுக்கு டார்வின் பெயரைச் சூட்டினார். டீயர்ரா டெல் பியோகோ (Tierra del Fuego) என்ற இடத்திலுள்ள பெரிய சிகரம் இன்று ‘டார்வின் சிகரம்’ (Mount Darwin) என அழைக்கப்படுகிறது.

காலபாகோஸ் என்னும் தீவில் பல வினோத உயிரினங்களை டார்வின் கண்டார். அவை ஆச்சரியத்தின் எல்லைக்கே அவரை இட்டுச் சென்றது. ஒட்டு மொத்த பயணத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல் வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.

இந்தப் பயணத்தின் மூன்று முக்கிய விஷயங்களை கண்டறிந்து வகைப்படுத்தினார். முதலாவது: ஒரே உயிரின வகைகள் உலகின் வெவ்வேறு பகுதியில் இருப்பதற்கான இயற்கை சூழல், இரண்டாவது: ஒரே பகுதியில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், மூன்றாவது: ஒரே உயிரினம் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவமாக அல்லது வளர்ச்சியாக உருமாறும் அற்புதம். இந்த மூன்று அடிப்படைகள் வழியே அவர் பரிணாமக்கொள்கையை தெளிவாக வரையறுத்தார்.

பயணத்தை முடித்து வந்த பிறகு ‘தி வாயேஜ் ஆப் பீகிள்’ என்னும் நூலை உடனே எழுதினார். இதில் அவரது பயண அனுபவங்கள் இருந்தன. ஆனால் தனது பரிணாம வளர்ச்சி குறித்த கொள்கைகளை விளக்கும் புத்தகத்தை உடனே எழுத அவருக்கு அச்சம் இருந்தது. மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்வினைகள் மூலம் தனது ஆய்வுகளை அழித்துவிடக் கூடும் என அஞ்சினார். அதுவுமில்லாமல் அவருக்கு அப்போது 27 வயதுதான் ஆகி இருந்தது.

முதலில் சிறு சிறு கட்டுரைகளாக எழுதினார். ‘தகுதி உள்ளது வாழும்’ என்கிற புகழ் பெற்ற வாசகத்தை அப்பொழுதுதான் எழுதுகிறார். அதாவது இந்த இயற்கையோடு இயைந்து அதற்கேற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொள்ள முடிகின்ற உயிரினங்கள் மட்டுமே வாழும் என்பது பொருள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தனது, ‘உயிரிகளின் தோற்றம்’ என்கிற புகழ் பெற்ற நூலை வெளியிடுகிறார்.

எதிர்பார்த்தபடியே பேரதிர்ச்சிகளை அந்தப் புத்தகம் உருவாக்குகிறது. கடுமையான எதிர்ப்புகள், அவமானங்கள் எல்லாவற்றையும் சந்திக்கின்றார். அவருடைய புத்தகத்தை காலில் போட்டு மிதித்தபடி அவரைக் கடுமையாக வசை பாடுகின்றனர்.

ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி அந்தப் புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. அவரது வாழ்நாளில் ஆறு பதிப்புகள் வெளிவந்து அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

இன்றைய உயிரியல் ஆய்வுகள் அனைத்துக்கும் அவரது அந்த நூல்தான் அடிப்படை. அவரது கொள்கைகள் வழியேதான் இன்றைய மருத்துவம் மகத்தான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. தனது 73 வயதில் அவர் மரணமடைந்தார்.

அவரை உயிரியல் விஞ்ஞானியாக, மருத்துவ மேதையாக பலரும் கருதினாலும், அவரது புகழ் பெற்ற பீகிள் பயணம் மூலமாகத்தான், அவர் அனைத்தையும் கண்டடைந்தார் என்பதால் அவரை ஒரு மகத்தான பயணியாகவும் கருத வேண்டும்.

மூன்றாவதாக ஒரு அரசியல் தலைவர் என இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவர் யார் என்ற ஆவல் இந்தக் கட்டுரையை படிக்கும் போது இடையில் உங்களுக்கு தோன்றியிருக்கும். கறுப்பர் இன விடுதலைக்கும், அடிமை முறை ஒழிப்பிற்கும் மகத்தான பங்களிப்பை செய்த ஆப்ரஹாம் லிங்கன்தான் அவர்.

சார்லஸ் டார்வின் பிறந்த அதே 1809-ம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிறந்தவர் ஆப்ரஹாம் லிங்கன் என்பது ஆச்சரியமான ஒற்றுமை தானே?


கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts