Saturday 29 September 2018

பசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன்

பசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன் முனைவர் மா.கலாமணி இயற்கையோடு இயைந்து ஒன்றி வாழ்ந்து புகழ் பெற்றவர்கள் நம் பண்டையத் தமிழ் மக்கள். நாம் ஓடி, ஆடி விளையாடிய இடம் கட்டிடங்களாய் மாறி உள்ளன. நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பீப்பி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப் பிடித்தும், மரத்துக்கு மரம் தாவியும், தோப்புகளுக்கு நடுவில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடியதும் இன்று மருந்துக்குக் கூட இல்லை. விளையாட்டிலும் கூட இயற்கைப் பின்னிப் பிணைந்திருந்த காலம் அது. ஆனால் இப்போது அவற்றை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அறிவியலும், தொழில் நுட்பமும் அசுர வளர்ச்சி பெற்று நம்மை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கிறது. அறிவியல் வளர்ச்சியோ மனிதனின் வேலைகளை எளிமையாக்கி விட்டது. விறகு அடுப்பில் சமைத்து அன்று பறித்த காய்களையும், தோட்டங்களில் முளைத்த கீரைகளையும் உண்டு, சுத்தமான பசும் பாலையும் பருகி வந்த மக்கள் உடல், மன ஆரோக்கியத்தோடு நூறு வயது வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது ஒரு வாரத்திற்குத் தேவையான காய்களையும், பழங்களையும் வாங்கி குளிர் சாதனப்பெட்டியில் நசுக்கி அழுத்தி அடைத்து வைத்து உண்பதும், பாக்கெட் பாலை வாங்கிக் குடிப்பதும் நவநாகரிகம் என நினைக்கும் காலமாக இது மாறி விட்டது. அந்நவநாகரிக வட்டத்திற்குள் சிக்கினால் வெளியே வர முடியாது மரணம் தான் என்பது அறியாதது ஏனோ?மண்பாண்டங்களில் சமைத்து, உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்திய காலம் போய் ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் சந்ததியினருக்கும் ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது. காலை பல் துலக்கும் துலப்பானிலிருந்து இரவு படுக்கும் பாய் வரை அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருள் தான். பிளாஸ்டிக் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. உண்மையைச் சொன்னால் அது நம் மண்ணுக்குத் தீமையை உருவாக்கும் என்பதனை மனிதர்கள் அறியாமல் எளிமை என்ற பெயரில் பிளாடிக்கை பயன்படுத்தி நம் பூமித் தாயை விரைவிலேயே முதிர்ச்சியடையச் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தான் கையில் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகள் ‘நமது தேசத்தின் தூக்குக் கயிறு’ என்பதனை மறந்து விடுகின்றனர் என்பது அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் பாலித்தீன் பைகளை விரும்புவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும். லேசானது, பல வண்ணங்களில் கிடைக்கிறது, விலை மிகவும் குறைவு, உடையாமல் இருக்கிறது போன்ற காரணங்களால் பாலித்தீன் பைகளை விரும்புகின்றனர்.எளிமையாகக் காட்சியளிக்கும் பாலித்தீன் இம்மண்ணில் மண்னோடு மண்ணாக மாற எவ்வளவு காலம் ஆகும் என்பதனை மக்கள் மறந்து விடுகின்றனர். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 முதல் 1000 ஆண்டுகள் ஆகும். அவசர கால இவ்வுலகில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தி விட்டுக் குப்பைத் தொட்டியில் போடக் கூட நேரமில்லாமல் காற்றில் பறக்க விட்டுச் செல்லும் இச்சமுதாய மக்கள்பின்னர் வரும் விளைவுகளை உணருவதில்லை. தம் வேளை முடிந்தால் மட்டும் போதாது நமது சந்ததியினரும் எந்தவொரு இன்னல்களும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து ‘வருமுன் காப்போம்’ என்பதனை மறந்து செயல்படுகின்றனர். பாலித்தீன் எளிதில் மக்காமல் மண்ணினுள் புதைந்து மண்ணின் வளத்தைக் குறைக்கிறது. மரங்களின் வேரைத் தடுத்து நிறுத்தி வேரின் பயணத்தை ஆழமாகச் செல்வதனைத் தடுக்கிறது. அதனால் தான் மரங்களின் வளர்ச்சி குன்றி, மழை வளம் பாதிக்கப்படுகிறது. பாலித்தீன் கழிவுகளான பைகள், பாட்டில்கள் போன்றவைகளை நீர் நிலைகளில் வீசுவதால் அவைகள் மக்காமல் துர்நாற்றம் வீசி, காற்றை மாசுபடுத்துகிறது. அக்காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், மூச்சடைப்பு, மூச்சுக் கோளாறு போன்ற பலவிதமான நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மழை காலங்களில் சாக்கடையில் எரியப்படும் பாலித்தீன் பைகளால் அடைக்கப்பட்டு, நீர்த்தேக்கம் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. எளிதில் மக்காத பொருள் என்பதால் அதை தீயிலிட்டு எரிக்கும் போது அதிலிருந்து வரும் டயாக்சின் என்ற நச்சுக் வாயு காற்றில் கலந்து சுற்றுச் சூழலை பாதிப்படைய வைக்கிறது. தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகிறது. சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைபாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது. மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியும் பாதிக்கிறது. ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பொருள்களால் தீமையே ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் வல்லுனர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப்பை, துணிப்பை போன்றவைகளை பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். தேநீர் கடைகளில் குவளைகள், பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யக் கூடியவை. கேரளாவில் மக்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் கொட்டாமல் தவிர்த்து சேகரித்து மறுபயன்பாடு செய்யலாம். கடைக்குச் செல்லும் போது துணிப் பைகளை எடுத்துச் செல்ல பழகிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களில் 10 சதவீதம் பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். 90 சதவீதம் பொருட்களை மீண்டும் பயன்படுத்தப்படாமலும், மக்காமலும் மனிதனுக்கும், மண்ணுக்கும், விலங்குக்கும் தீமையே ஏற்படுத்துகின்றன. வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக மண்பாண்டங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும். பிளாஸ்டிக் இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொருவரும் தனக்கொரு உறுதி மொழியை ஏற்படுத்திக்கொண்டு நம் தமிழ் தாயை என்றும் இளமை மாறாமல் பலவகை அணிகலன்களை அணிவித்து அழகு பார்ப்போம். முற்றிலுமாக பிளாஸ்டிக்கை முடக்கப் பழகுவோம். நாளை நம் குழந்தைகள் வாழ உலகம் வேண்டும் என்பதற்காக.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts