Wednesday 19 September 2018

விண்வெளியில் புரட்சி செய்யும் ‘இஸ்ரோ’

நம் நாட்டின் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) பங்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. தகவல்தொடர்பு, பூமி கண்காணிப்பு, அறிவியல், திசை கண்டறிதல், சோதனை, சிறிய மற்றும் மாணவர்கள் செயற்கைகோள்கள் என 7 வகையான செயற்கை கோள்களை இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. இதனை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகளை தயாரித்து அதில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. இதுதவிர வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் ஏவி வருகிறது. இதற்கு பெரும்பாலும் இந்தியாவின் மூன்றாவது தலைமுறை ஏவுகணை வாகனம் என்று அழைக்கப்படும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இதுவரை 44 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டத்தில் 42 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு இலக்கை சென்றடைந்து உள்ளன. 28 வெளிநாடுகளை சேர்ந்த 239 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கு நம்பக தன்மை கிடைத்திருப்பதுடன், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயற்கைகோள்களை ஏவுவதை விட இந்தியாவில் பாதுகாப்பாகவும், குறைந்த கட்டணத்திலும் செயற்கைகோள்கள் ஏவப்படுவதால் இஸ்ரோவிற்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு இருந்து வருகிறது. நம்நாட்டின் இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவையை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ அடுத்த 6 மாதத்தில் 18 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. இவை அனைத்தும் மிக முக்கியமான செயற்கைகோள்களாகும். குறிப்பாக 3.5 டன் எடைகொண்ட ஜிசாட்-29 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. தொடர்ந்து 5.7 டன் எடைக்கொண்ட ஜிசாட்-11-ஏ செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி., எப்-11 ராக்கெட் மூலமும், தொடர்ந்து இந்திய பூமிக்கான தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜி-சாட்11 பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட உள்ளது. அதேபோல் ஜி-சாட் 20 ஆகிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் ஜி-சாட் 20 செயற்கைகோள் ‘டிஜிட்டல் இந்தியா’வை மையமாக வைத்து ஸ்மார்ட் சிட்டிக்கு தேவையான தகவல்களை அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கைகோள் 2019-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், அகில உலக அளவில் அதிவேக இணையதள சேவையை நம் நாட்டில் எந்த மூலையில் இருப்பவர்களும் பெறமுடியும். குறிப்பாக ஜி-சாட்11, ஜி-சாட் 20 செயற்கைகோள்கள் மூலம் 70 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் இணையதள சேவையை பெற முடியும். இந்த ஜி-சாட் ரக செயற்கைகோள்கள் டிஜிட்டல் ஆடியோ, தரவு மற்றும் தெளிவான வீடியோ ஒளிபரப்புகாக பயன்படுத்தப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் ஆகும். கடந்த மார்ச் 30-ந்தேதி வரை, இஸ்ரோவின் 18 ஜி-சாட் செயற்கைகோள்களில் தற்போது 13 ஜி-சாட் செயற்கைகோள்கள் சேவையில் உள்ளன. அடுத்த 18 மாதங்களில் மேலும் 3 ஜி-சாட் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. சந்திரயான்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதேபோல் வரும் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் 30 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களும், இஸ்ரோ வடிவமைத்த இந்திய செயற்கைகோள் ஒன்றும் விண்ணில் ஏவப்பட உள்ளன. குறிப்பாக 2 வாரங்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர். வரும் 2022-ம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவதன் மூலம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உலக நாடுகளிடம் போட்டி போடும் அளவுக்கு முன்னேறி விடும். தற்போது விண்வெளியில் முத்திரை பதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. 50 சதவீதம் இளைஞர்களை கொண்ட நம் நாட்டில் இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துவதற்காகவும், நம்நாட்டின் தொழில்நுட்பத்தில் புதிய வரலாறு படைப்பதற்காக இஸ்ரோ விண்வெளியில் புரட்சி செய்ய புறப்பட்டு உள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இஸ்ரோ வியக்கத்தக்க முன்னேற்றத்தை காண இருக்கிறது. -கிருஷ்ணா கணேஷ்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts