Wednesday, 19 September 2018

ஒருங்கிணைந்த தேர்தல் சாத்தியமா?

ஒருங்கிணைந்த தேர்தல் சாத்தியமா? சோ.கணேசசுப்பிரமணியன், கல்வியாளர் மிகப்பெரும்பொருட்செலவு, நடத்தை விதி அமலில் இருக்கும் போது நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியாமை, அத்தியாவசியச்சேவைகளை நிறுத்தவேண்டிய கட்டாயம்,தேர்தலுக்கெனப் பயன்படுத்தப்படும் மனிதவளங்கள் போன்ற காரணங்களைக் காட்டி மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. மேலோட்டமாகச் சரியாகத் தெரிவது ஆழ்ந்து பார்க்கும்போது இது சவால் நிறைந்ததாகவும் பன்முக இந்தியச் சமூகத்துக்குப் பொருந்தாதென்பது புரியும். தேர்தலுக்கெனக்கட்சிகளும், வேட்பாளர்களும், அரசும் பெரும் பொருள்செலவு செய்வது உண்மை. பெருமளவில் கருப்புப்பணம் விளையாடுவதும் உண்மை. அதற்கு ஒருங்கிணைந்த தேர்தல் தீர்வாகாது. பிரசாரத்துக்காகப் பெரும்பணம் செலவு செய்வதும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களையும் லஞ்ச ஊழலின் பங்குதாரர்ஆக்குவதற்கும் மூலகாரணம் கொள்கையற்ற, பதவிநோக்கிய, மக்களாட்சித் தத்துவத்தைப் பலிகொள்ளும் தேர்தல்அரசியல். மக்களாட்சித் தத்துவத்தைப் பலப்படுத்துவதும், மக்களுக்குப்பயிற்றுவிப்பதும், அதுசார்ந்த விழுமியங்களை சமூகத்தில் வளர்த்தெடுப்பதும்தான் இதற்கு தீர்வாகும். மாற்றாக கட்சிகள் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றலாம், வேட்பாளர் தேர்வில் மாற்றம் கொண்டு வரலாம். தமது வேட்பாளர் சட்டவிதிகளுக்குட்பட்ட அளவுதான் செலவு செய்யவேண்டும் என்பதைக் கொள்கையாகப் பின்பற்றலாம். மீறுவோர் மீதுகட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு வேட்பாளர் தேர்வு முறை சரியாக இருத்தல்வேண்டும். அதிகம் செலவு செய்பவரா? அதிகவாக்கு வங்கி உள்ள சாதியைச் சேர்ந்தவரா? என்றுபார்க்காமல், கொள்கைப்பிடிப்பும் சேவை மனப்பான்மையும் உள்ளோரைத் தேர்ந்தெடுத்தல்வேண்டும். அடுத்தது தேர்தல் நடத்தை விதி. நடத்தை விதி கட்சிகள் ஒருமித்து ஏற்படுத்திக்கொண்ட ஒரு நடைமுறை ஒப்பந்தம், சட்டமல்ல. நடத்தை விதி சட்டமாக வேண்டுமென்பது நெடுநாள் கோரிக்கையாயிருப்பினும் முயற்சியேதும் எடுக்கப்படவில்லை. நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு கிடையாது. நடத்தை விதிகளுக்குச் சட்டப்பின்புலம் அமைத்துத்,தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கொடுத்தாலே நேர்மையானத் தேர்தலுக்குத் தடையாக இருக்கும் பலகாரணிகளைக் களைந்துவிடலாம். இதனை 2015-ல் மத்திய சட்ட ஆணையமும், 2016-ல் தேர்தல் ஆணையமும் தேர்தல்சீர்திருத்தமாகப் பரிந்துரைத்துள்ளன. அரசியல் கட்சிகள்மட்டுமல்ல அரசுகளே விதிகளின் படிநடந்து கொள்வதில்லை என்பது வெளிப்படை. இவற்றைச்சரி செய்யாமல் ஒருங்கிணைந்த தேர்தலைப் பரிந்துரைப்பது திசை திருப்பும்செயல். அடுத்த காரணம் தேர்தல் அவசரத்துக்கென அத்தியாவசியச் சேவைகளையும் நலத்திட்டங்களையும் நிறுத்திவைத்தல். தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள், இரண்டு மாதங்கள் வரை நடைமுறையிலிருக்கும். அவ்விரு மாதங்களும் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டுமென்ற வாதமும் வைக்கப்படுகிறது. சரி மீதமுள்ள பத்து மாதங்களும் அரசு என்ன செய்தது என்ற கேள்வி இங்கு எழாமலில்லை. பிரச்சினை நலத்திட்டங்கள் நிறுத்தப்படுவதல்ல, சரியாகத் திட்டமிடாமல் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றுவதுதான். மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைஆளும் கட்சிகள் தங்கள் சொந்த திட்டங்கள் போல் காட்டவும், தாங்களே மக்கள் நலனுக்காக பாடுபடுவோர் என்ற பிம்பத்தை உருவாக்கவும் தேர்தல் அறிவிக்கப்படும் வரைச் செயல்ப டுத்தாமல் வைத்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும்போதுச் செயல்படுத்துவதும் அதில்குறையிருந்தால் நடத்தை விதிகளை காரணம்காட்டி தம்மை உத்தமராய்க்காட்டிக்கொண்டுத் தப்பிக்க எண்ணுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. தேர்தல் பிரசாரங்களும், அது சார்ந்த ஊர்வலங்கள், பேரணிகள் போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக உள்ளனவென்றும், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தடையாக இருக்கிறதென்ற வாதமும் வைக்கப்படுகிறது. இவை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டியவையென்பது நாம் அறிந்த ஒன்றுதானே. தேர்தல்கூட்டங்களைஅன்றாடச் செயல்பாடுகள் பாதிக்காமல் நடத்துவது அரசியல்கட்சிகளின் பொறுப்புதானே. அதனை விடுத்து ஒருங்கிணைந்த தேர்தலேத் தீர்வென்பது எப்படிச்சரியாகும். எனவே கட்சிகள் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மனிதவளப்பயன்பாடு. ஒருநாளில் மூன்று முறை உண்பதென்பது அத்தியாவசியம். ஒருநாளைக்குத் தேவையான மொத்த உணவையும் ஒரேமுறையில் எடுத்துக் கொண்டால் நேரத்தையும் மனிதசக்தியையும் முறைப்படுத்தலாம், குறைவாகவும், சரியாகவும் பயன்படுத்தலாமென்ற வாதம் ஏற்புடையதா? அதுபோலத்தான், மக்களாட்சி சரியாகச் செயல்படத் தேர்தல் அவசியம். தேர்தலுக்கு ஆகும் செலவையும் மனிதவளத்தேவையையும் எண்ணிக்கை அளவீடாக நோக்குவது தவறானஅணுகுமுறையாகும். மனித உடலுக்கு உணவு எவ்வளவுஅடிப்படைத் தேவையோஅது போலத் தான் மக்களாட்சிக்கு தேர்தல். ஒருங்கிணைந்த தேர்தல்முறை இந்தியா போன்ற பன்முகச் சமுதாயத்துக்கு ஏற்றதல்ல. மாநில சுயாட்சிக்கொள்கைக்கு எதிரான விளைவுகளைஏற்படுத்தும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற அறைகூவல், நன்றாக இருப்பினும் வழக்கிற்கு ஒத்துவராது. அரசியல் ரீதியாக இந்தியா ஒரேநாடாகயிருப்பினும் பண்பாட்டு அடிப்படையில் பல்வேறு கலாசாரங்களின்கூட்டு. ஒவ்வொருமாநிலத்துக்கும் தனிச்சிறப்புடைய பண்பாடும், வரலாறும் உண்டு. அரசியல் தேவைக்கு அவற்றைக் கரைத்து விடலாகாது என்பதால் தான் நாடாளுமன்ற அரசியல் கொள்கையோடு மாநிலசுயாட்சியையும் இணைந்த அரசியலமைப்பு. இந்த அடிப்பைடையில்தான் அரசியல்சாசனத்தின் ஏழாவது அட்டவணையில் மத்தியப்பட்டியல், மாநிலப்பட்டியல் என்ற அதிகாரப்பங்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் அந்தந்த மாநிலத்தின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில் தான் அரசியலும் தேர்தல்களமும் அமைகின்றன. சட்டமன்றத்தேர்தல் மாநிலத்தின் தேவைகளை மையமாகக் கொண்டும் மக்களவைத் தேர்தல் தேசியத் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை மையமாகக்கொண்டும் இருக்கின்றன. ஒருநாட்டில் ஒருகொள்கை சாத்தியமென்றால், ஏன் தேசியக்கட்சிகள் இரட்டைகொள்கைகள் கொண்டுள்ளன.எடுத்துக்காட்டாக நதிநீர்பங்கீடு, கல்விக்கொள்கைப் போன்றவற்றைச் சொல்லலாம். எனவே ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற முழக்கமும் ஒருங்கிணைந்ததேர்தலும் மாநில சுயாட்சியின் அடிப்படையை நீர்த்துப்போகச் செய்துவிடும். எனவே முழுமையான சீர்திருத்த நடவடிக்கை எடுக்காமல் ஒருங்கிணைந்த தேர்தல் போன்றவை உண்மையான சீர்திருத்தங்களாகாது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts