சூரியனை நெருங்கி ஆராய ஒரு விண்கலம்
என்.ராமதுரை, அறிவியல் எழுத்தாளர்
சூரியன் ஒரு பிரம்மாண்டமான நெருப்புக் கோளம். எந்த ஒரு விண்கலமும் சூரியனில் இறங்கி அதை ஆராய முடியாது. சூரியனை நெருங்கினாலே பஸ்மம் ஆகிவிடும்.
ஆனால் ஒரு விண்கலத்தால் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி சூரியனை ஆராய முடியும். அந்த அளவில் அமெரிக்காவின் நாசா சூரியனை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது.
சூரியன் பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனை ஆராய பூமியில் பல ஆராய்ச்சிகூடங்கள் உள்ளன. தமிழகத்தில் கொடைக்கானலிலும் ஓர் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. சூரியனை ஆராய்வதற்கென்றே விண்வெளியில் ஏற்கனவே பல விண்கலங்கள் உள்ளன. சூரியனிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி இவை சூரியனை ஆராய்கின்றன.
இந்தியாவும் சூரியனை ஆராய ‘ஆதித்யா எல் 1’ என்னும் விண்கலத்தை 2021-ம் ஆண்டில் உயரே செலுத்த இருக்கிறது.
இதற்கிடையே நாசா, பார்க்கர் சோலார் ஆய்வுக்கூடம் என்ற பெயரில் சூரியனை நெருங்கி ஆராய ஆகஸ்டு 11-ந்தேதி ஒரு விண்கலத்தை உயரே செலுத்தியுள்ளது. இது சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வெள்ளி கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வெள்ளி கிரகத்துக்குச் செல்வது ஏன் என்று கேட்கலாம். பார்க்கர் விண்கலம் வெள்ளி கிரகத்தை சுற்றி விட்டு சூரியனை நோக்கிச் செல்லும். இப்படி வெள்ளி கிரகத்தை சுற்றும் போது பார்க்கர் விண்கலத்தின் வேகம் குறையும்.
சூரியனை நெருங்கி ஆராய்ந்து விட்டு மறுபடி வெள்ளி கிரகத்தை நோக்கி வரும். வெள்ளியை சுற்றி விட்டு மறுபடி சூரியனை நெருங்கி ஆராயும். சூரியனை சுற்றிவிட்டு மறுபடி வெள்ளியை நோக்கி வந்து விட்டு மீண்டும் சூரியனை நோக்கிச் செல்லும்.
இப்படியாகத்தான் அது சூரியனை ஆராயும். விண்கலத்தின் வேகத்தை குறைப்பதற்காகவே அது இவ்விதம் வெள்ளி கிரகத்தை கடந்து செல்கிறது. அப்படியும் கூட ஒரு கட்டத்தில் விண்கலத்தின் வேகம் மணிக்கு 6 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். ஏழு ஆண்டுக்கால அளவில் சூரியனை 24 தடவை சுற்றும்.
ஒரு கட்டத்தில் இது சூரியனிலிருந்து 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் செல்லும் போது சூரியனில் இருந்து கடும் வெப்பம் தாக்கும். ஆராய்ச்சிக் கருவிகள் செயல்படாமல் போகலாம். எனவே பார்க்கர் விண்கலத்தின் ஒரு புறத்தில் வெப்பத் தடுப்புக் கேடயம் பொருத்தப்பட்டுள்ளது. இது விசேஷப் பொருளால் ஆனது.
விண்கலத்தில் சூரியனை நோக்கிய புறத்தில் வெப்பம் 1300 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். ஆனால் வெப்பக்கேடயத்துக்குப் பின்புறம் ஆராய்ச்சிக் கருவிகள் அமைந்த புறத்தில் வெப்பம் வெறும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். வெப்பத் தடுப்புக் கேடயம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதாக இருக்கும்.
பார்க்கர் விண்கலம் சூரியனை சுற்றுவதும் வெள்ளியை சுற்றுவதுமாக இருந்தாலும் வெப்பக் கேடயம் அமைந்த புறம் எப்போதும் சூரியனைப் பார்த்தபடி இருக்கும்.
சூரியனைச் சுற்றி கொரோனா என்ற பகுதி உள்ளது. தமிழில் இதை ஜோதி என்று கூறலாம். சூரியனின் மேற்புறப் பகுதியில் வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. ஆனால் சூரியனை சுற்றி உள்ள ஜோதி பகுதியில் வெப்பம் பத்து லட்சம் டிகிரி அளவில் உள்ளது. இது பெரிய மர்மமாக உள்ளது. பார்க்கர் விண்கலம் இந்த ஜோதி பகுதியை ஆராயும்.
ஜோதி பகுதியை நாம் பூமியிலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த சில கணங்களில் மட்டும் ஜோதி பகுதியை நம்மால் பார்க்க முடியும். ஜோதி மிக வெப்பம் கொண்டதாக இருக்கின்ற மர்மத்தை பார்க்கர் துலக்கும் என்று கருதப்படுகிறது.
சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவை சூரியனிலிருந்து நாலா புறங்களிலும் பரவுகின்றன. இந்தத் துகள்கள் பூமி, செவ்வாய், வியாழன் முதலிய கிரகங்களைக் கடந்து சூரிய மண்டல எல்லையில் உள்ள புளூட்டோ வரை செல்கின்றன. இந்தத் துகள்களுக்கு ஆங்கிலத்தில் சோலார் விண்ட் என்று பெயர். உண்மையில் இது காற்று அல்ல. இத்துகள்கள் பூமியைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது.
இதல்லாமல் சூரியனிலிருந்து சில சமயம் ஆற்றல் மொத்தை வெளியே வீசப்படுவது உண்டு. இது சுருக்கமாக சி.எம்.இ. என்று குறிப்பிடப்படுகிறது. இது பூமியைத் தாக்க நேர்ந்தால் பல விளைவுகள் ஏற்படும்.
பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின்சார நிலையங்கள், தரைக்கு அடியில் உள்ள எண்ணெய்க் குழாய்கள் முதலியவை பாதிக்கப்படும். சி.எம்.இ. பற்றியும் பார்க்கர் விண்கலம் ஆராயும். பார்க்கர் விண்கலம் வருகிற அக்டோபர் 3-ந்தேதி வெள்ளியை நெருங்கும். பிறகு நவம்பர் 5-ந்தேதி வாக்கில் சூரியனை முதல் தடவையாக நெருங்கும்.
சூரியனிலிருந்து சோலார் விண்ட் எனப்படும் துகள்கள் வெளிப்படுகின்றன என்று 1958-ம் ஆண்டில் யூஜின் பார்க்கர் என்ற அமெரிக்க நிபுணர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் கருத்து வெளியிட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் சூரியனை ஆராயும் விண்கலத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பார்க்கரின் கட்டுரை முதலில் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் தான் அக்கட்டுரையை வெளியிடும்படி செய்து பார்க்கருக்கு உரிய கவுரவம் கிடைக்கும்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, 30 August 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment